சிறுகதை: கரிக்குருவிக்கு ஈசன் உபதேசம் செய்தது ஏன்?

Tamil spiritual short story - Karikuruvikku eesan upadesam seithathu en
Lord shiva with bird
Published on

பரஞ்சோதி முனிவர் இயற்றிய 'திருவிளையாடல் புராணம்' ஈசன் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்குவதாகும். இதில் நாற்பத்தி ஏழாவது படலம் 'கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்' ஆகும்.

மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழாவில் கரிக்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த திருவிளையாடல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏன் நடத்தப்படுகிறது. வாருங்கள் அதைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளுவோம்.

இராஜராஜ பாண்டியனுக்குப் பின்னர் அவருடைய மகனான சுகுண பாண்டியன் என்பவர் மதுரையை நல்லாட்சி செய்து வந்தார். அவருடைய ஆட்சிக் காலத்தில் முற்பிறவியில் நல்ல செயல்களைச் செய்த ஒருவன் தனது சில தீவினைகளின் காரணமாக மதுரைக்கு அருகில் ஒரு ஊரில் கரிக்குருவியாகப் பிறந்தான். கரிக்குருவியை காகங்கள் தலையில் கொத்தித் துன்புறுத்தி வந்தன. வலிமை இல்லாத கரிக்குருவியால் தன்னைத் தாக்கித் துன்புறுத்திய காகங்களை எதிர்க்க முடியவில்லை. இதனால் கரிக்குருவி அந்த பகுதியை விட்டு அகன்று அருகில் இருந்த ஒரு காட்டுப்பகுதியில் வசிக்கத் தொடங்கியது.

ஒருநாள் கரிக்குருவி ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்திருக்கையில், சிவனடியவர் ஒருவர் தன் சீடர்களுடன் அங்கே வந்து மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவர் தனது சீடர்களிடம் “மூர்த்தம் தலம் தீர்த்தம் என அனைத்து சிறப்புகளையும் உடைய மதுரையம்பதியில் எழுந்தருளியுள்ள சொக்கநாதரை வழிபட்டால் அவர் தன் பக்தர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கதி அளித்து அருளுவார்” என்று சொக்கநாதரின் பெருமைகளை எடுத்து உரைத்துக் கொண்டிருந்தார். சிவனடியவர் கூறியதைக் கேட்ட கரிக்குருவிக்கு தானும் சொக்கநாதரை வழிபட்டு நற்கதி அடைய வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. உடனே கரிக்குருவி பறந்து சென்று மதுரையை அடைந்து பொற்றாமரைக் குளத்தில் தன் உடல் படும்படியாக நனைத்து மேலெழும்பிப் பறந்து பிரகாரத்தைச் சுற்றி வந்து மீனாட்சி அம்மன் சன்னிதிக்குள்ளும் சுந்தரேஸ்வரர் சன்னிதிக்குள்ளும் இருந்த உத்திரத்தின் மீது அமர்ந்து மனமுருகி தரிசனம் செய்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு தரிசித்த அந்த கரிக்குருவியைப் பற்றி அம்பாள் சொக்கநாதரிடம் “இந்த கரிக்குருவி நம்மை தரிசிக்கக் காரணம் யாது?” என வினவினாள்.

“இந்த கரிக்குருவி முற்பிறவியில் செய்த தவறினால் இப்பிறவியில் கரிக்குருவியாகப் பிறந்தும் முற்பிறவியில் செய்த ஒரு நன்மையால் இப்பிறவியில் மதுரையம்பதியைப் பற்றியும் பொற்றாமரைக் குளத்தைப்பற்றியும் அறிந்தும் தனது பிறவித் துன்பத்தை நீக்கிக் கொள்ள நம்பிக்கையோடு நம்மை வழிபட்டு வருகிறது“ என்றார். மேலும் இதன் பலனாக ஈசன் அக்கரிக்குருவிக்கு ஆயுள்விருத்தியையும் பிறவித்துன்பத்தை நீக்கியருளும் மிருத்யுஞ்சய மந்திரத்தையும் உபதேசித்தார். ஞானம் பெற்ற கரிக்குருவியானது ஈசனை துதித்து வழிபட்டது.

இதையும் படியுங்கள்:
ஆன்மிகக் கதை: பாபம் போக்கும் தலைவன்!
Tamil spiritual short story - Karikuruvikku eesan upadesam seithathu en

பின்னர் ஈசனிடம் “ஐயனே. எனக்கு உள்ள ஒரு குறையினை போக்கி அருள வேண்டும்” என்ற சொல்லி,

“மற்ற பறவைகள் என்னைத் துன்புறுத்துகின்றன” என்று தன் குறையைக் கூறியது. இதற்கு ஈசன் திரியம்பக மந்திரத்தை உபதேசித்து “உன்னைத் துன்புறுத்தும் பறவைகளை விட நீ வலிமையுடையவன் ஆவாய். இனி உன்னை மக்கள் 'வலியன்' என்று அழைப்பார்கள்” என்று ஆசிர்வதித்தார். அந்த கரிக்குருவி சொக்கநாதர் உபதேசித்த மந்திரத்தை உச்சரித்து வலிமை பெற்றது. வலியன் என்று மக்களால் அழைக்கப்பட்டது. அந்த கரிக்குருவியானது நீண்ட காலம் வாழ்ந்து பின்னர் இறையடி சேர்ந்தது.

இந்த நிகழ்ச்சியின் காரணமாகவே மதுரை மீனாட்சிஅம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழாவில் கரிக்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.

நன்மை செய்தால் நன்மை விளையும். தீமை செய்தால் தீமை விளையும் என்பதை ஈசன் தனது இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தியுள்ளார். நாளும் நன்மைகள் பல செய்து நற்கதி அடைவோமாக.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: இந்திரன் பெற்ற சாபமும், பெண்கள் மாதவிடாய் பெற்ற கதையும்!
Tamil spiritual short story - Karikuruvikku eesan upadesam seithathu en

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com