திருஆய்மொழி - தமிழர் மரபில் உயர்வாக வைத்து போற்றப்படும் ஆவுக்கு ஒரு 'திருஆய்'மொழி போற்றிப் பாடல்!

Tiruvaymoli
Tiruvaymoli
Published on

வடமொழியில் இறைவனை அர்ச்சனை செய்ய பாடப்படும் வேத மந்திரங்களிலும் சுலோகங்களிலும் 'நமஹ' என்ற சொல் அடிக்கடி உச்சரிக்கப்படுவதுண்டு. இதற்கு ஈடான தமிழ்ச் சொல் வாழ்க, வாழி அல்லது போற்றி என்பதாகும்.

பொதுவாக இச்சொற்கள் இறைவனைப் புகழ்ந்து பாடும் பாடல்களில் பெரும்பாலும் காணப்பட்டாலும் சிற்சில சமயங்களில் அரசர்களையும், பெரியோர்களையும், வேல், சூலம், திருநீறு, மொழி, நிலம், ஆறு, கொடி போன்றனவற்றை புகழ்ந்து பாடும் போதும் உபயோகிப்பதுண்டு.

அவ்வகையில் இப் பொங்கல் பண்டிகையன்று நம் தமிழர் மரபில் உயர்வாக வைத்து போற்றப்படும் ஆவுக்கு ஒரு திருஆய்மொழி போற்றிப் பாடல்.

1. உலகாளும் அம்மை அப்பனுக்கு காளை வாகனம் ஆனாய் போற்றி!

2. பிறந்த குழந்தை முதல் பெரியோரும் அருந்திட ஊட்டமிகு பாலை அருளினாய் போற்றி!

3. தயிரென்றும், மோரென்றும், வெண்ணையென்றும், நெய்யென்றும் நலம் பயக்கும் பொருள் பல நல்கினாய் போற்றி!

4. கீதை உரைத்த ஆய்பாடிக் கண்ணனுக்கு ஆநிரை மேய்க்கும் கருமம் ஒன்று வைத்தாய் போற்றி!

5. வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களென்றும்,

கனைத்தினம் கற்றெருமையென்றும்,

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்

என்றும் ஆண்டாள் பாவை பாட

அடி தந்து உதவினாய் போற்றி!

6. சுந்தரநாதராய் வந்த முனிவரை திருமூலராக்கி சைவ சித்தாந்தத் திருமறையாம் திருமந்திரம் இயற்ற வழி வகுத்தாய் போற்றி!

7. முன்னும் பின்னும் சலிப்பின்றி நடந்து கிணற்று நீரை வயலுக்குப் பாய்ச்சும்

ஏற்றம் இறைத்தாய் போற்றி!

8. மண்ணை உழுதுப் பொன்னாக்கும் உழவர்க்குத் தோழனாய் தோள் தந்து ஏர் உழுதாய் போற்றி!

9. பாலையும் நீரையும் பிரிக்கும் அன்னம் போல கையால் போரடித்து களத்தில் பரப்பிய நெற்கதிர் மேல் சுற்றிச் சுற்றி வலம் வந்து வைக்கோல் வேறு நெல்மணி வேறாய் பிரித்துத் தந்தாய் போற்றி!

10. விவசாயி வேர்வை சிந்தி விளைத்த பயனை களத்திலிருந்து வீடு சேர்க்க பொதி வண்டி இழுத்தாய் போற்றி!

இதையும் படியுங்கள்:
பெண் நாக சாதுக்களை பற்றி தெரியுமா?
Tiruvaymoli

11. ஓய்வின்றி ஒழிவின்றி ஒரு நாளும் சளைக்காமல் உழவருக்காய் உழைத்தாய் போற்றி!

12. பிறந்த வீடு பிரிய மனமின்றி வில் வண்டி அமர்ந்த மணப் பெண்ணை அலுங்காமல் குலுங்காமல் மணக்கோலம் கலையாமல் எட்டு மேல் எட்டு வைத்து கணவன் வீடு கூட்டிச் சென்றாய் போற்றி!

13. மணமாகிப் போன பெண்ணின் தாய் மாமன் பொங்கல் தோறும் கொண்டு வரும் சீர் சுமந்து சென்றாய் போற்றி!

14. வைக்கோல் முதல் உண்ட பின் வீசும் வாழை இலை வரை உண்பது எதுவும் வீணாகாமல் விளைநிலம் வளமுற இயற்கை எருவாய் மாற்றிக் கொடுத்தாய் போற்றி!

15. வீடு மெழுகிட வாசல் தெளித்திட இயற்கை கிருமி நாசினியை ஒத்த சாணம் தந்தாய் போற்றி!

16. உன் உரியவர் உயிரோடு இருக்குங்கால் அடுப்பு எரித்திட சாண எரிவாயு தந்தாய் போற்றி!

17. அவர் உயிர் பிரிந்த பின்னும் சிதை மூட்டி எரியூட்ட வரட்டியும் தந்தாய் போற்றி!

18. முற்றும் எரிந்த பின் அதே வரட்டி நெற்றியில் பூசும் நீறாய் மாறும் மாயம் செய்தாய் போற்றி!

19. புரோகிதர் பூசைக்கென்று கோமியம் அருளினாய் போற்றி!

20. ஆறாத புண்ணையும் ஆற்றுவிக்கும் சாண இயற்கை மருந்து தந்தாய் போற்றி!

இதையும் படியுங்கள்:
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை எடைபோட நினைத்தால் இப்படித்தான் நடக்கும்!
Tiruvaymoli

21. ஓரிடத்தில் கட்டுக்குள் நில்லாது துள்ளிக் குதித்து காண்போரைப் பரவசப் படுத்தும் இளம் கன்றாய் வந்தாய் போற்றி!

22. புல் பூண்டை மேய்ந்து வயல் வரப்பில் களை பல வளராமல் தடுத்தாய் போற்றி!

23. உணவுக்கு சுவை சேர்க்கும் உடலுக்கு நலம் சேர்க்கும் எண்ணெய் ஆட்டிப் பிழியும் செக்கு இழுத்தாய் போற்றி!

24. புராண காலப் பனுவல்களில் காமதேனுவாய் கேட்டவர்க்கு கேட்டதை அருளினாய் போற்றி!

25. கோமாதா வடிவில் நின்று உனைத் தொழுவோரின் குலம் காத்தாய் போற்றி!

26. ஏறு தழுவப் புகுந்த இளைஞர் பலரை வீரதீரர் ஆக்கினாய் போற்றி!

27. வெற்றி கண்ட இளைஞரை அவர்தம் காதலியர் மார்பு தழுவ மணமுடித்து வைத்தாய் போற்றி!

28. ஆ என்றும் பசு என்றும் காளை என்றும் எருது என்றும் மாடு என்றும் விடை என்றும் கன்று என்றும் எருமை என்றும் இனிய சொற்கள் பல தமிழுக்கு அருளினாய் போற்றி!

29. அன்றொரு நாள் அரண்மனை வாயில் ஆராய்ச்சி மணி அடித்து அரசனிடம் இழந்த உன் கன்றுக்கு நீதி வேண்டிப் பெற்றாய் போற்றி!

30. சங்கத் தமிழ் மண்ணில் நீதியும் உரிமையும் மானிடரொடு விலங்குகட்கும் உண்டென்ற மேன்மையை உலகிற்குப் பறை சாற்றினாய் போற்றி!

இதையும் படியுங்கள்:
அடைக்கலம் புகுந்த அடியார்க்கு அபயம் தந்து காக்கும் தாயே, உமக்கே மங்களம்!
Tiruvaymoli

31. உயிர்களின் இறுதிக் கணக்கை முடிக்கும் எமதருமனுக்கு எருமை வாகனம் ஆனாய் போற்றி

32. யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல் எருது இருந்தாலும் தோள் கொடுக்கும் இறந்தாலும் தோல் கொடுக்கும் என்று எமக்கு உணர்த்தினாய் போற்றி!

33. கோயில் மாடு போல் வளர்ந்திருக்கிறாய் என்று உழைக்காமல் ஊர் சுற்றும் பிள்ளைகளை வைய அப்பாக்களுக்கொரு வசைமொழி தந்தாய் போற்றி!

34. கொம்பு சீவுவோர் என்றும் லாடம் அடிப்போர் என்றும் மாடு மேய்ப்போர் என்றும் பால் கறப்போர் என்றும் பலருக்கு வருவாய் ஈட்ட வழி ஈந்தாய் போற்றி!

35. பூம் பூம் பூம் மாட்டுக்காரன் வாசலில் நின்று 'அய்யாவுக்கு நல்ல காலம் பொறக்கப் போவுது' என்று சேதி சொல்லி பூம் பூம் பூம் என்று இசைக்க ஆமாம் என்று நீ அழகாகத் தலை ஆட்டி எம்மை வியக்க வைத்த திறம் போற்றி!

36. திராவிட நாகரிகம் எனும் சிந்து வெளி நாகரிகப் பண்பாட்டின் ஓர் அடையாளச் சின்னமாய் விளங்கினாய் போற்றி!

37. பொறுமையில் எருமை போல் என்று பொறுமைக்கொரு இலக்கணம் ஆனாய் போற்றி!

38. எருமை இருக்கும் வீட்டில் வறுமை இருக்காது எனும்படி வளர்த்த வீட்டுக்கு வஞ்சமின்றி பஞ்சமின்றி பாலும் பணமும் அருள்வாய் போற்றி

39. தன்னையே தருவதில் வாழைக்கு ஈடு சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு என்னும் கண்ணதாசன் வரிகளில் சாகாவரம் பெற்றாய் போற்றி!

40. உயிர் பிரிந்த பின்னும் மாட்டிறைச்சி புசிக்கும் மனிதர்க்கு உடல் தந்து உணவானாய் போற்றி!

41. இவை யாவுமாய் இன்னும் பலவுமாய்

உழவருக்கும், புலையருக்கும், மன்னவர்க்கும், மறையவர்க்கும்

தன்னலம் பாராமல் வேண்டியன நல்கும் தியாகச் சுடரே

நின் திருத்தொண்டு போற்றி! போற்றி! போற்றி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com