
கடந்த சுமார் மூன்று மாத காலம் திருமகளின் திருவருளில் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம் அந்தத் திருமகளின் திருவருளால். மங்கள நாயகியாம் ஸ்ரீமகாலக்ஷ்மிக்கு இதோ இந்தப் பகுதியோடு மங்களம் சொல்ல இருக்கிறோம். ‘தாயே, அனைத்து விதமான மங்களங்களையும் நீயே தந்தருள்வாயே’ என்ற வேண்டுதலை தாயாரின் முன் வைப்போம். திருமகள் நாம் சொல்வதை நிச்சயம் செவிமடுத்துக் கேட்பாள். இம்மைக்கும் மறுமைக்குமான சகல செளபாக்கியங்களையும் நிச்சயம் தனது திருவருளால் நமக்கு அவள் அளித்தே தீருவாள். ஆழ்வார்களும், ஆசார்யர்களும் இத்திருமகளை தமது பாசுரங்களின் வழி, ஸ்லோகங்களின் வழி பாடி மகிழ்ந்து இருக்கிறார்கள். இந்த நிறைவு பகுதியில் அப்படிப் பெரியோர்களால் வணங்கப்பெற்ற திருமகளை அவர்களது ஸ்லோகங்களின் வழியே நாமும் வணங்குவோம், வணங்கி நல்லருள் பெறுவோம்.