ஆன்மீகக் கதை: அன்னம் வழங்க ஈசன் அளித்த அட்சய பாத்திரம்!

வறுமை நீங்க உணவு தந்து அருளியதால், இந்த ஊரில் உள்ள ஈசன் ஓதனவனேஸ்வரர், சோற்றுத்துறை நாதர் என்று அழைக்கப்படலானார்.
Shiva and Akshaya Patra
Shiva and Akshaya Patra spiritual short storyImg credit: AI Image
Published on
deepam strip
deepam strip

பிறவிப் பிணி தீர வீடுபேறு அருளும் ஈசன், பக்தர்களின் பசிப்பிணையையும் தீர்க்க அன்னம் வழங்கினார் எங்கே?

“பண்டை வினைகள் பறிய நின்ற

அண்ட முதல்வன் அமலன் இடமாம்

இண்டை கொண்டன் பிடைஅ றாத

தொண்டர் பரவுஞ் சோற்றுத் துறையே”

- சுந்தரர் (திருச்சோற்றுத்துறை பதிகம்)

தஞ்சாவூரிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருச்சோற்றுத்துறையில் அருளும் ஈசனுக்கு ஓதனவனேஸ்வரர், தொலையாச்செல்வர், சோற்றுத்துறைநாதர் போன்ற பெயர்கள் உண்டு.

முன்னொரு காலத்தில் திருச்சோற்றுத்துறையில் கடுமையான பஞ்சம் நிலவியது. வானம் பொய்த்தது; நீர் நிலைகள் வறண்டன; விளைநிலங்கள் பாளம்பாளமாய் வெடித்துக் காணப்பட்டன. வாயில்லா ஜீவன்கள்கூட பட்டினியால் உயிரிழந்தன.

உத்தானன் என்பவன் மிகவும் சிரமப்பட்டு எண்ணெய் சேகரித்து கோவிலுக்கு விளக்கேற்றி வந்தான். அவனும் ஒரு நாள் பசியில் மயங்கி விழுந்தான். அதன்பிறகு கோவில் இருண்டுகிடந்தது. அருளாளர் என்னும் சிவ பக்தர் இறைவனிடம் சரணடைந்தார். ஊரின் பஞ்ச நிலை அவரை மிகவும் நிலைகுலைய வைத்தது.

“இறைவா! இப்படியா சோதிப்பது? எதற்கு இவ்வளவு பெரிய தண்டனை? உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நீ, இப்படி பட்டினியில் உயிர்கள் மடிவதைக் கண்டும் இரங்காமல் இருப்பது ஏனோ? கண்ணுக்குத் தெரியாமல் கல்லுக்குள் இருக்கும் தேரைக்கு அருளும் அருளாளனுக்கு, கண்முன் இத்தனை உயிர்கள் அழிவதைக் கண்டும் அருள மனமில்லையா? கருவுக்குள் இருக்கும் சிசுக்களும், கர்ப்பிணிப் பெண்களும் மாளும் கொடுமையைக் கண்கொண்டு பார்க்கமுடியவில்லை. உன் தலையில் இருக்கும் கங்கையின் சில துளிகள் இங்கே சிந்தட்டும். அர்த்தநாரீஸ்வரா! உன்னில் பாதியாக இருக்கும் அன்னை இளகிய மனம் கொண்டவள். அவளின் கடைக்கண் பார்வையாவது பூமியில் விழட்டும்,” என்று கதறினார் அருளாளர்.

இதையும் படியுங்கள்:
சிந்திக்க, சிறக்க... நீதிக் கதைகள் 2
Shiva and Akshaya Patra

“என் உயிரையும் எடுத்துக்கொள்,” என்று கதறியபடி கோவிலின் வாயிற்படியில் முட்டிக்கொண்டார். நெற்றியிலிருந்து ரத்தம் வழிந்தது. அருளாளரின் மனைவி திருநகைப்பிராட்டியார் தடுத்தும் அருளாளர் நிறுத்தவில்லை. ரத்தம் வழிந்து மூர்ச்சையானார். திருநகைப்பிராட்டியார் தவித்து இறைவனிடம் மன்றாடினார். திடீரென்று இடி இடித்து மின்னல் வெட்டி மழைத்துளிகள் ஒவ்வொன்றாக விழுந்து, சிறிது நேரத்தில் பெருமழை கொட்டியது. மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் நனைந்தனர்.

“அருளாளா! எழுந்திரு. காவிரிக் கரையின் புதரில் சிக்கியிருக்கும் அட்சய பாத்திரத்தை எடுத்து ஊர் மக்களின் பசிப்பிணி தீர்ப்பாயாக. பூமி நனைந்து பயிர்கள் செழித்து வளர்ந்து பலன் தரும்வரை இந்த அட்சய பாத்திரம் அன்னம் வழங்கும்,” என்று அசரீரியாக அருளினார் அம்மையப்பர்.

அருளாளரும் அட்சய பாத்திரம் கொண்டு மக்களின் பசியைப் போக்கினார். வறுமை நீங்க உணவு தந்து அருளியதால், இந்த ஊரில் உள்ள ஈசன் ஓதனவனேஸ்வரர், சோற்றுத்துறை நாதர் என்று அழைக்கப்படலானார். (ஓதனம் – உணவு)

இதையும் படியுங்கள்:
டைனோசர்களை விட பழமையான பாறையின் 'உச்சி'யில் பிள்ளையார்! எங்கே?
Shiva and Akshaya Patra

சப்தஸ்தான தலங்களுள் திருச்சோற்றுத்துறையும் ஒன்று. திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழு ஊர்த் திருவிழாவில் திருவையாறுக்கு முதல் இடம். சித்திரை மாதம் பௌர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தில், ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு, ஒவ்வொரு சப்தஸ்தான தலத்துக்கும் செல்வார். அந்தந்த திருத்தலங்களில் உள்ள பெருமான் அவரை எதிர்கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்கும் சென்று, மறுநாள் ஏழு மூர்த்திகளும் திருவையாற்றை அடைவர்.

இத்தலத்தில் அன்னை அன்னபூரணி, ஒப்பிலாம்பிகை என்னும் பெயரில் அருள்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com