

மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு முக்கியமான அரக்கன் யாரென்றால் சிசுபாலன் தான். கிருஷ்ண பகவானால் அந்த அரக்கனுடைய தலை துண்டிக்கப்பட்டது. அவன் செய்த பாவங்களை 100 முறை மன்னித்த பிறகு அவனைக் கொன்று விட்டார் கிருஷ்ணர். சிசுபாலனின் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. கோபம், பொறாமை மற்றும் வெறுப்பு எவ்வாறு ஒருவரின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதற்கான சிறந்த பாடமாகும்.
சிசுபாலன், சேதி மன்னன் தமகோஷனுக்கும் , அவரது மனைவி ஸ்ருதஸ்ரவஸ் என்பவருக்கும் பிறந்த மகன். மேலும் சிசுபாலனின் தாய் கிருஷ்ணருக்கு அத்தை ஆவாள். சிசுபாலன் பிறக்கும் போதே மூன்று கண்களுடனும் நான்கு கைகளுடனும் பிறந்தார், பிறக்கும் போது கழுதையைப் போலவும் கத்தினார், எனவே அவனுடைய பெற்றோர்கள் கோரமாக மற்றும் பார்ப்பதற்கே அருவருப்பாக பிறந்த அந்த குழந்தையை ஒரு காட்டில் கைவிட முடிவு செய்தார்கள்.
அவர்கள் குழந்தையுடன் காட்டின் வழியாக நடந்து சென்றபோது, ஒரு காட்டுப் பேய் அவர்கள் முன் தோன்றி, அந்தக் குழந்தை வலிமையாகவும் சக்தி வாய்ந்ததாகவும் வளரும் என்று கணித்தது. மேலும், இந்த குழந்தையைக் கொல்ல விதிக்கப்பட்டவன் இவனை கண்டு தன் மடியில் ஏந்தும்போது இவனுடைய அனைத்து குறைபாடுகளும் மறைந்துவிடும் என்றும் கூறியது.
சிசுபாலனின் தாய் அந்தக் குழந்தையை அரண்மனைக்கு வந்த அனைவரின் மடியிலும் வைத்தாள்; இருப்பினும், எதுவும் நடக்கவில்லை.
ஒரு நாள் அவன் தாய் தன் சகோதரரின் மகனான கிருஷ்ணரிடம் குழந்தையை மடியில் எடுத்து கொள்ளுமாறு கூறினார். கிருஷ்ணர், அந்தக் குழந்தையைத் தன் மடியில் எடுத்துக் கொண்டபோது, அந்தக் குழந்தை தனது மூன்றாவது கண்ணையும் கூடுதல் கைகால்களையும் இழந்தது. சாதாரணக் குழந்தையைப் போலவும் அழத் தொடங்கியது.
இதைக் கண்ட சிசுபாலனின் தாய் அதிர்ச்சி அடைந்து அழ ஆரம்பித்து விட்டாள். கிருஷ்ணரால் தான் தன் குழந்தைக்கு அழிவு என்பதை தெரிந்து கொண்டாள். ஆகவே அவள், தன் மகனுக்கு எந்தத் தீங்கும் செய்யக்கூடாது என்று கிருஷ்ணரிடம் வரம் கேட்டாள்.
கிருஷ்ணரும் சரி, ஆனால் ஒரு நிபந்தனை, சிசுபாலனுக்கு 100 தவறுகள் அல்லது பாவங்கள் வரை செய்ய அனுமதி அளிக்கிறேன். அதற்கு மேல் செய்தால் ந்ன் அவனை கொன்று விடுவேன் என்று தன் அத்தைக்கு வாக்களித்தார்.
சிசுபாலன் ஒரு பொல்லாத மனிதனாக வளர்ந்தான். அவன் கன்னிப் பெண்களைக் கடத்தி, பல்வேறு விதமான தீய செயல்களில் ஈடுபட்டான்.
அவன் வேண்டுமென்றே கிருஷ்ணர் அவர்களின் பல முறை குறுக்கிட்டு வம்பு செய்தான். ஒவ்வொரு முறையும் கிருஷ்ணர் அவனை மன்னித்தார்.
சிசுபாலனின் தாய்க்குக் கொடுத்த வாக்குறுதிக்காக கிருஷ்ணர் அவனை மன்னித்து கொண்டே இருந்தார்.
சிசுபாலன் கிருஷ்ணருக்கு எதிராக இருக்கும் துரியோதனனிடம் கூட்டு சேரந்தான்.
இந்திரபிரஸ்தத்தில் பாண்டவர்கள் நடத்திய ராஜசூய யாகத்தில் இவனுடைய முடிவுக்கான வேளை வந்தது.
அந்த யாகத்தில் கிருஷ்ணருக்கு முதல் மரியாதை வழங்குவதை சிசுபாலன் எதிர்த்தான், மேலும் கிருஷ்ணரை அவமதிக்கத் தொடங்கினான்.
அவன் கிருஷ்ணரையும் போருக்கு அழைத்தான். போரிலும் மன்னித்து கொண்டிருந்த கிருஷ்ணர் ஒரு கட்டத்திற்கு பிறகு, சிசுபாலனிடம், உன்னுடைய நூறு பாவங்கள் முடிந்து விட்டன. மேலும், "உன் தாய்க்கு வாக்களித்த படி எல்லா அவமானங்களையும் பொறுத்துக் கொண்டேன். இத்தோடு நான் அளித்த வாக்குறுதி நிறைவேறி விட்டது," என்று கூறினார்.
101வது அவமானத்தில் கிருஷ்ணர் சுதர்சன சக்கரத்தை எடுத்து அவனது தலையை வெட்டினார்.
இக்கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டு உண்மைகள்:
முலாவதாக, தவறு செய்தவன் நிச்சயமாக தண்டனையை அனுபவித்தே தீருவான்.
இரண்டாவதாக நாம் செய்கின்ற எல்லா வினைகளையும் அதாவது நல் வினைகள் மற்றும் தீய வினைகளையும் கடவுள் அவருடைய கணக்கில் வைத்திருப்பார். ஆகவே எதை செய்தாலும் யோசித்து கடவுளை மனதில் வைத்து கொண்டு செய்யுங்கள்...