
பிரம்மா தன் மனைவி சரஸ்வதி தேவியை அவமதிப்பு செய்ததால், அவர் இட்ட சாபத்தால், அவருக்கு கோயில்கள் அதிகம் இல்லை என்பது புராண வரலாறு. வட இந்தியாவில் இந்து புராணங்களின்படி பிரபஞ்சத்தை உருவாக்கிய பிரம்மாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரே கோயில், ராஜஸ்தானின் அனசாகர் ஏரிக்கு அப்பால் அமைந்துள்ள புஷ்கர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. பிரம்மா இந்துக் கடவுள்களின் மும்மூர்த்திகளில் ஒருவர். இந்த பிரம்மா கோயிலில் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற வெள்ளி நாணயங்களைத் தரையில் பதிக்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். அடியார்களின் பாதம் பட்டு அந்நாணயங்கள் தேய்ந்து போவது போல துன்பங்கள் தீர்ந்துவிடும் என்பது அவர்களின் நம்பிக்கை.
இந்தியாவில் இரண்டு இடங்களில் பிரம்மா கோயில்கள் உள்ளன. ஒன்று ராஜஸ்தான் அஜ்மீரிலுள்ள புஷ்கர். மற்றொன்று தமிழ் நாட்டில் திருச்சி அருகில் உள்ள திருப்பட்டூரில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயில். பிரம்மாவுக்கு பிரம்மாண்ட சிலையுடன் தனி சன்னதி அமைந்திருப்பதும் இங்குதான். இத்திருக்கோயில் திருச்சியிலிருந்து வடக்கே சுமார் 32 கி.மீ. தொலைவில் உள்ளது. மங்கலம் தந்து வாழ்க்கையைச் சிறக்கச் செய்பவர் பிரம்மா என்பதால், இக்கோயிலில் பூஜையின்போது பிரம்மாவுக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை படைத்து மஞ்சள் பிரசாதம் தருகின்றனர்.
திருச்சி கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள உத்தமர் கோவிலில் சரஸ்வதி தேவிக்கு தனி சன்னதி உண்டு. இங்கு மஞ்சள் பொடியை பிரசாதமாக வழங்குவர். இங்கு மட்டும் தான் பிரம்மா தன் மனைவி சரஸ்வதியுடன் அருள்பாலிக்கிறார் வேறு எங்கும் இப்படி இல்லை.
பொதுவாக பிரம்மாவுக்கு தனி கோயில்கள் இருப்பதில்லை. சில கோயில்களில் கோஷ்டத்தில் தனியே வீற்றிருப்பார். ஆனால் தஞ்சை திருவையாறு பாதையில் 8 கிமீ தொலைவில் உள்ள திருக்கண்டியூர் பிரம்ம சிரகண்டீசர் கோயிலில் பிரம்மாவும் சரஸ்வதியும் தம்பதி சமேதராக வீற்றிருக்கிறார்கள். புன்னகை ததும்பும் பிரம்மாவின் கோலத்தை இங்கு தவிர வேறெங்கும் காண முடியாது.
நான்கு தலைகளுடன் "நான்முகன்" என்ற பெயரில் அருளும் பிரம்மா, கோவை மாவட்டம் கூளநாயக்கன்பட்டி மலையாண்டி சுவாமி கோயிலில் கருவறையில் புடைப்புச் சிற்பமாக ஒரே ஒரு தலையுடன் தனது கைகளில் தர்ப்பை வேள்வியில் பயன்படுத்தி வரும் கரண்டியுடன் அருள்பாலிக்கிறார். இதேபோல் மதுரை அருகே ஒத்தக்கடை வேதநாயகம் பெருமாள் கோயிலில் பிரம்மா ஒரு தலையுடன் அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
மகா விஷ்ணுவின் நாபி காலத்திலிருந்து தோன்றியவர் பிரம்மா. அவரிடம் இருந்த வேத நூலை அரக்கர்கள் இருவர் பறித்துச் சென்று கடலின் அடியில் ஒழித்துக் வைத்தனர். அதோடு பிரம்மாவுக்கு தொல்லை கொடுத்து வந்தனர். அந்த வேத நூல்களை மீட்டு, அந்த அரக்கர்களையும் அழித்தார் விஷ்ணு. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பெருமாளை ஒரு திருவாதிரை நாளில் வந்து பூஜித்தார். அந்த தலம் தான் மதுரை அருகில் உள்ள திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மதுரைக்கு வடக்கே 12 கி.மீ. தொலைவில் ஒத்தக்கடை அருகே, திருமோகூர் அமைந்துள்ளது. இதற்காக பிரம்மாவால் உருவாக்கப்பட்டது தான் இங்குள்ள பிரம்ம தீர்த்தம்.
தமிழ்நாட்டில், கும்பகோணம் நகரில் சரசுவதி-காயத்ரீ சமேதராக பிரம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மட்டும் தான் இந்தியாவில், பிரம்மனுக்கு தினசரி பூசை செய்யப்படுகிறது. இதனை ’பிரம்மன் கோயில்' என்று உள்ளூரில் கூறுவர். பொதுவான பெயர் வேதநாரயணன் கோயில். மூலவர் சன்னதியின் வலப்புறம் உள்ள சன்னதியில் பிரம்மா உள்ளார். அவருடைய வலப்புறம் சரஸ்வதியும், இடப்புறம் காயத்ரியும் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள கொடுமுடி என்னும் ஊரில் உள்ள மகுடேஸ்வரர் கோவிலில் பிரம்மா கோயில் உள்ளது. வன்னி மரத்தடியில் மூன்று முகம் கொண்ட பிரம்மாவின் சந்நிதி உள்ளது. இந்த வன்னி மரம் பிரம்மாவின் வடிவமாக பார்க்கப்படுகிறது. இந்த வன்னி மரத்தின் ஒரு பகுதியில் முட்களும், மற்றொரு பகுதி முட்கள் இல்லாமலும் உள்ளது. ஆண் மரமாக கருதப்படும் இந்த வன்னி மரத்தில் பூக்கள் பூப்பதில்லை, காய்கள் காய்ப்பதில்லை என்பது சிறப்பம்சம்.
சிவபெருமானை ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலத்துடன் இருக்கும் வித்தியாசமான கோலத்தில் சிவனை கடலூர் மாவட்டம் தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில் காணலாம். இங்கு திருமால் சங்கு ஊதிய படியும், பிரம்மா மத்தளம் வாசிக்கும் படியும் அதற்கேற்ப சிவன் நடனமாடும் வடிவத்தை காணலாம். இது மிகவும் அபூர்வமானது. விவசாயம் செழிக்க இங்கு வந்து வேண்டிக் கொள்கிறார்கள்.
முருகப்பெருமானின் ஆறுமுகங்களுக்கும் தனித்தனியாக பூஜை நடக்கும் ஒரே கோயில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலுள்ள முத்துக்குமாரசாமி கோயில். கோயில்களில் பிரம்மா நின்ற நிலையில் தான் இருப்பார். ஆனால் இங்கு அமர்ந்து இரண்டு கைகளையும் கூப்பி வணங்கிய நிலையில் இருக்கிறார். இவரது தரிசனம் மிகவும் விஷேசமானது.