
கோயிலுக்குள் தரிசனத்துக்குச் செல்லும் பக்தர்கள் முதலில் துவார பாலகர்களின் எதிரில் நமஸ்கரித்து, உட்செல்ல அனுமதி பெற்று, பிறகே மூல ஸ்தானத்தை வழிபடச் செல்ல வேண்டும் என்பது ஆலய தரிசன விதி. நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருக்கக்கூடிய காவல் தெய்வமும் இவர்கள் தான். ‘துவாரா’ என்ற சொல் வாயிலைக் குறித்திடும் வடமொழிச் சொல்லாகும். அச்சம் தரும் உருவத்தோற்றம், அச்சம் தரும் வட்ட விழிகள், தந்த பற்கள், கைகளில் ஏந்திய ஆயுதங்கள் போன்றவை இதன் பொதுவான கலை அம்சம் ஆகும்.
திருகுற்றாலநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் உள்ள துவாரபாலகர்கள் ஒருவருக்கொருவர் உரையாடுவது போல் தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால் மிகவும் தனித்துவமானது. இந்தக் கோயிலில் நெருப்பு, பூமி, நீர், காற்று மற்றும் விண்வெளி ஆகியவற்றைக் குறிக்கும் பஞ்சபூத லிங்கங்களும் உள்ளன
சென்னை-புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் கல்பாக்கத்தில் இருந்து 31 கிமீ தொலைவில் உள்ள செய்யூரில் உள்ளது கந்தசுவாமி கோயில் 27 பூத வேதாள கணங்கள் வணங்கும் கோயில் இது. இங்கு முருகப்பெருமானுடன் வள்ளியும், தெய்வானையும் தனித்தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்கள். இங்கு சோமநாதரும், மீனாட்சி அம்மனும் அருள் பாலிக்கும் இவர்களின் சன்னதி நுழைவு வாயிலில் துவாரபாலகர்களாக பிரம்மாவும், மகா விஷ்ணுவும் வீற்றிருந்து அருள்பாலிப்பது சிறப்பிற்குரியது. இத்தலத்தில் வழிபட்டால் மும்மூர்த்திகளின் அருளைப் பெறலாம்.
கும்பகோணம்-திருவைகாவூரிலுள்ள வில்வவனநாதர் ஆலயத்தில் துவாரபாலகர்கள் இல்லை. இங்கே நந்தி வாயிலை (கிழக்கு) நோக்கி திரும்பியிருப்பதைக் காணலாம். இத்தல வரலாறு படி வேடனைப் பிடிக்க எமன் வர, துவாரபாலகர்களும், ஏனையோரும் தடுக்க வெளியே செல்ல, மீறி வருபவனைத் தடுத்து விரட்ட இவ்வாறு திரும்பி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் இக்கோயிலில் துவாரபாலகர்கள், நவக்கிரகங்கள் இல்லை எனப்படுகிறது. ஆனால் அர்த்தமண்டபத்தில் வாயிற்படியின் இருபுறங்களிலும் விஷ்ணுவும், பிரம்மனும் எங்குமே காணப்படாத நிலையில் துவாரபாலகர்களாக நிற்கிறார்கள்.
திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள திருவெறும்பூர் எனும் ஊரில் உள்ளது, எறும்பீஸ்வரர் ஆலயம். இங்கு சுமார் 250 அடி உயரமுள்ள குன்றின் மீது எறும்பீசர் கோயில் உள்ளது. 125 படிக்கட்டுகள் ஏறி ஆலயம் செல்ல, இங்கு சிவபெருமான் கருவறைக்கு முன் இடது வலது புறங்களில் இரண்டு துவாரபாலகர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் கோபமான முகத்துடனும், மறறொருவர் சாந்தமான முகத்துடனும் காணப்படுகிறார்கள். கோபம், ஆணவம் போன்ற குணங்களை கொண்டிருக்கும் ஒருவர் சிவனை வணங்கிய பிறகு சாந்தமான மனதுக்கு மாறி விடுகிறார். இதுவே இங்குள்ள துவாரபாலகர்கள் அமைப்பின் தத்துவம்.
வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் 30 கிமீ தொலைவில் உள்ளது. பெரிய அய்யம்பாளையம் இங்குள்ள உத்தமராயபெருமாள் கோயிலில் உள்ள துவார பாலகர்கள் சிலை விஷேமானது. இவர்களது சிலை அரிதாய் கிடைக்கும் சிவப்பு நிறமான ஒரு வகை கற்களால் உருவாக்கப்பட்டது.
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலும் ஒன்று. 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒருசேர அருள்பாலிக்கிறார்கள். சங்கை அரைத்து உருவாக்கிய 12 அடி உயர பெரிய நந்தியை இங்கே காணலாம். சீதை மற்றும் ராமர் லட்சுமணனுடன் நின்ற கோலத்தில் பல இடங்களில் தரிசித்திருப்பீர்கள். ஆனால் இங்கு சீதா ராமர் அமர்ந்த கோலத்திலும், லட்சுமணரும், ஆஞ்சநேயரும் துவாரபாலகர்களாக உள்ளதை இங்கே மட்டுமே காணலாம்.
தஞ்சை பெரிய கோயிலின் மகா மண்டபத்தில் காணப்படும் கருவறையின் ஒவ்வொரு திசையிலும் காணப்படும் துவாரபாலகர்கள் பல்வேறு வகையான ஆயுதங்கள் கொண்டு இருப்பது தனிச்சிறப்பு. அதை போன்று மேல் தளத்தில் உள்ள பிறை மாடங்கள் எல்லாவற்றிலும் வில்லேந்தி சிவபெருமான் வடிவமே காணப்படுகிறது. இது வேறெங்குமில்லாதது.
மதுரையில் இருந்து 16 கிமீ தொலைவில் சோழவந்தான் செல்லும் வழியில் உள்ளது திருவேடகம் இங்குள்ள ஏடகநாதர் கோயிலில் அம்பாள் ஏலவார் குழழி கருவறை வாசலில் துவாரபாலகிகளுக்கு பதிலாக துவார பாலகர்கள் தான் உள்ளனர். இவர்களுக்கு புடவை தான் சாத்தப்படுகிறது.
ஈரோடு நகரத்தின் மிகவும் புனிதமான மற்றும் சிறப்பான கோவில்களில் ஒன்றாக கருதப்படும் கஸ்தூரி அரங்கநாதர் கோவில் பெரிய வரலாற்றுப் பின்னணியை கொண்ட கோவிலாகும்.பொதுவாக பெருமாளின் துவாரபாலகர்களான ஜய, விஜயர்கள் கருவறையின் வெளிப்புறத்தில் வலது, இடது பக்கங்களில் இருப்பார்கள். ஆனால், இங்கே துவாரபாலகர்கள் இருவரும் கருவறையில் பள்ளிகொண்டுள்ள பெருமாளின் திருப் பாதங்களின் அருகில் உள்ளனர்.
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் பேருந்து சாலையில் பாலாற்றைத் கடந்து, சென்றால் குரங்கணில் முட்டம் வாலீஸ்வரர் ஆலயம் உள்ளது. இங்கே வாலீஸ்வரர் எளிய வடிவில் கம்பீரத்துடன் காட்சி தருகின்றார். இவரே 'கொய்யாமலர்நாதர்' என்றும் அழைக்கப்படுகிறார், கருவறையில் வழக்கமாக காணப்படும் துவாரபாலகர்களுக்குப் பதிலாக, வலம்புரி விநாயகரும், முருகப்பெருமானும் அமைந்துள்ளனர். இத்தல இறைவனை வழிபட்டால், முன்வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.