

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகிலுள்ள சுண்டக்காய்பட்டியில் மலை மீது அமைந்துள்ள மிகவும் பழமையான தலம் கந்தர்மலை முருகன் கோவில் (Kandhar Malai Murugan Temple). 750 அடி உயரத்தில் உள்ள இக்கோவிலுக்கு செல்வதற்கு 250க்கும் மேற்பட்ட படிகள் உள்ளன. இங்குள்ள வேல்முருகன் நினைத்ததை நிறைவேற்றும் வல்லமை கொண்டவராக பக்தர்களால் வழிபடப்படுகிறார். கந்தர்மலையில் இன்றளவும் சித்தர்கள் வாழ்ந்து வருவதாக நம்பிக்கை நிலவுகிறது.
தல சிறப்பு:
ஒருமுறை முருகப் பெருமானோடு வள்ளியானவள் வனத்தில் இருக்கும் பொழுது திடீரென விக்கல் ஏற்பட்டதாகவும், நீண்ட நேரமாகியும் விக்கல் நிற்காததால், அதை நிறுத்துவதற்கு ஏதாவது வழி சொல்லும்படி முருகப்பெருமானிடம் வள்ளிதேவி வேண்ட உடனே முருகப்பெருமான், எந்த குளத்தில் சூரிய ஒளியும் சந்திர ஒளியும் படவில்லையோ அந்த குளத்திலிருந்து நீர் எடுத்துப் பருகினால் உடனே விக்கல் நின்று விடும் என்று கூறியுள்ளார். அதன்படி வள்ளி தேவி இந்த கந்தர்மலை குளத்திலிருந்து நீர் எடுத்து பருகியதும் விக்கல் நின்று விட்டதாக தல வரலாறு கூறுகிறது.
வள்ளி தேவி நீர் பருகியதாக கூறப்படும் இந்தக் குளம் 'வள்ளி குளம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த குளத்து நீரை எடுத்துப் பருகினால், தீராத நோய்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று பக்தர்கள் நம்புவதால், சுவாமி தரிசனம் செய்து முடித்ததும் வீட்டிற்கு இந்த தீர்த்தத்தை எடுத்துச் செல்கின்றனர். இந்த புனித தீர்த்தம் சகல தோஷங்களையும் தீர்க்கிறது என்கிறார்கள்.
கோவில் அமைப்பு:
இக்கோவில் 750 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 250 படிக்கட்டுகள் ஏறிச் சென்றால் முருகனை கண்குளிர தரிசிக்க முடியும். இங்குள்ள மலைக் குகையில் சக்திவாய்ந்த சித்தர்கள் பலர் தியானம் செய்திருக்கிறார்கள். இங்கு சித்தர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமாக மலை மீது உள்ள குகைக்குள் அதிகமான ருத்ராட்ச மணிகள் கிடைத்திருக்கின்றன. அத்துடன் இன்றளவும் சித்தர்களும், நாகங்களும் அரூபமாக இங்கே நடமாடிக் கொண்டிருப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.
இங்குள்ள இறைவன் 'கருமலை கந்தர் வேல்முருகன்' என்று அழைக்கப்படுகிறார். கோவிலுக்கு கிருபானந்த வாரியார் மற்றும் காஞ்சி ஜெயேந்திரர் போன்றவர்கள் வந்து வழிபட்டுள்ளனர்.
சகல தோஷங்களையும் நீக்கும் கந்தர்மலை வேல் முருகனை வணங்கிட குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணத் தடை நீங்கும், வியாபாரம் விருத்தியாகும், தீராத நோய்கள் தீரும் என்று மக்கள் நம்புகிறார்கள். தங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறியதும் மீண்டும் பக்தர்கள் மலையேறி முருகனை தரிசித்து வழிபடுகின்றனர். காவேரிப்பட்டினத்தில் இருந்து சுமார் 27 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு பேருந்து வசதிகள் உள்ளன. கோவில் தினமும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.
கோவிலில் வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறுகின்றன. பங்குனி உத்திரத்தன்று வள்ளி, தெய்வானை திருக்கல்யாண விழா இங்கு மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.