யானையை நடுங்க வைத்த சிறு கோழி! ‘கோழியூர்’ ஆண்ட ‘கோழியோன்’ கட்டிய கோயில்!

Panchavarneswarar temple  and the chicken that trampled the elephant sculpture!
Panchavarneswarar temple
Published on
deepam strip
deepam strip

பூமியில் வாழும் விலங்குகளில் யானை மிகப்பெரிய விலங்கு என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதுபோலவே கோழி என்பது ஒரு சிறிய பறவை. கோழி ஒரு பறவையாக இருந்தாலும் அதனால் அதிக உயரத்திற்குப் பறக்க இயலாது. அப்படியிருக்க பலமில்லாத ஒரு சிறு கோழியால் பலம் பொருந்திய ஒரு மதயானையை அடக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறதல்லவா? தமிழ்நாட்டில் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த அப்படிப்பட்ட ஒரு ஆச்சரிய நிகழ்வினை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னர் தன் பட்டத்துயானை மீது அமர்ந்தவாறு நகர்உலா வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக யானைக்கு மதம் பிடிக்க அது இங்கும் அங்கும் ஓட, மன்னர் உட்பட அனைவரும் செய்வதறியாது திகைத்தனர். மதம் கொண்ட யானையை அடக்க இயலாமல் படைவீரர்களும் திகைத்துப்போய் செய்வதறியாது நின்றனர்.

ஈசன் மீது பெரும் பக்தி கொண்ட மன்னன் ஈசனை வேண்ட, அவரும் கருணை கூர்ந்து அப்பகுதியில் இருந்த ஒரு கோழியைத் தன் கடைக்கண்ணால் நோக்கினார். உடனே அந்த கோழியானது அசுர பலம் பெற்று பறந்து சென்று யானையின் மத்தகத்தின் மீது அமர்ந்து அதை குத்தித் தாக்கியது. கோழியின் அசுரத் தாக்குதலை சமாளிக்க முடியாத யானை திகைத்து நின்று பின்னர் மதநிலையானது விலகி சாந்தமானது. மதம் பிடித்த அந்த யானையை அடக்கிய கோழியானது அப்பகுதியில் இருந்த ஒரு வில்வ மரத்தின் கீழ் சென்று மறைந்து போனது.

சோழமன்னர் அந்த இடத்தை தோண்டிப் பார்க்க ஆணையிட, அங்கே ஒரு சிவலிங்கம் கிடைத்ததாகவும் அந்த ஈசனே மதயானையிடமிருந்து தன்னையும் தன் மக்களையும் காப்பாற்றியதாகவும் கருதிய மன்னர் அப்பகுதியில் ஈசனுக்கு கோயில் எழுப்பினார். அக்கோயிலே திருச்சியில் உறையூரில் இருக்கும் அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலாகும்.

இந்த சம்பவத்தின் காரணமாக உறையூருக்கு ‘கோழியூர்’ என்ற சிறப்புப் பெயரும், உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட சோழனுக்கு ‘கோழியோன்’ என்ற சிறப்பு அடைமொழியும் ஏற்பட்டன.

சோழர்களின் தலைநகரான உறையூரில் சாதாரண கோழி ஒன்று பெரும் யானையை வென்ற சிறப்பு வாய்ந்த சம்பவத்தை இளங்கோவடிகள் தனது சிலப்பதிகார காவியத்தில் புகார்காண்டத்தில் நடுநாண் காதையில் விவரித்துள்ளார். கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளைச் சந்தித்து உரையாடிய பின்னர் மூவரும் உறையூரை நோக்கிச் செல்கின்றனர். அந்த சமயத்தில் உறையூரின் பெருமையை இளங்கோவடிகள் ஒரு பாடலில் கீழ்கண்டவாறு விவரிக்கிறார்.

காவுந்தி ஐயையும், தேவியும், கணவனும், முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய புறம் சிறை வாரணம் புக்கனர் புரிந்துன்

– நாடுகாண் காதை, புகார்காண்டம், சிலப்பதிகாரம்

மூவரும் முறம் போன்ற செவியுடைய யானையும் (முறம் செவி வாரணம்) புறத்தே சிறகுகளைக் கொண்ட சேவலும் (புறம் சிறை வாரணம்) ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு யானையை சேவல் வென்ற பகுதியைக் கடந்து செல்லுகின்றனர் என இச்செய்யுளில் இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

இதையும் படியுங்கள்:
குழந்தையாக அவதரித்து தூமாசுரனை அழித்த தூமகேது விநாயகர்!
Panchavarneswarar temple  and the chicken that trampled the elephant sculpture!

உறையூர் அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில் (Panchavarneswarar Temple) மூலவர் கருவறையின் வெளிப்புறச் சுவற்றின் வலதுபுறத்தில் யானையின் மதத்தை கோழி அடக்கும் புடைப்புச் சிற்பத்தைக் காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com