காத்யாயனியின் மகிமை!

Kathyayani Amman
Kathyayani Amman
Published on

காத்யாயனி என்பது இந்து மதத்தில் நவராத்திரி கொண்டாட்டங்களில் துர்கா வழிபாட்டின்போது ஆறாவது நாளில் வழிபடப்படும் சக்தியின் பெயராகும். காத்யாயனியின் வடிவம் நான்கு அல்லது பத்து அல்லது பதினெட்டு கைகளால் சித்தரிக்கப்படுகிறது. இது அமரகோசம் என்ற சமஸ்க்ருத அகராதியில் தேவி ஆதி பராசக்திக்கு வழங்கப்பட்ட இரண்டாவது பெயர் ஆகும். இந்த அகராதியில் தேவி பார்வதியின் மற்ற பெயர்களாக உமா, காத்யாயனி, கவுரி, காளி, ஹைமாவதி, ஈஸ்வரி போன்ற பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. புராணங்களில் சீதா, ருக்மணி, காத்யாயனி ஆகியோர் தங்களின் கணவரின் நலனுக்காக வேண்டிய பெண் தெய்வங்களாக போற்றப்படுகிறார்கள்.

சாக்தம் என்ற வழிபாட்டு முறையில் அவர் சக்தி, துர்கா ஆகியோருடன் தொடர்புடைய தெய்வமாக கருதப்படுகிறார். இவர் தீயனவற்றை அழிக்க வந்த ஒரு போர்க்குணம் கொண்ட தெய்வங்களான பத்ரகாளி மற்றும் சண்டி போன்ற தெய்வ வடிவங்களுடன் தொடர்புடைய தெய்வ வடிவமாக வணங்கப்படுகிறார். பதஞ்சலி முனிவரின் மகாபாஷ்யா என்ற நூலில், காத்யாயனி காளி மற்றும் துர்கை போன்ற தெய்வங்களைப் போன்று சிவப்பு நிறத்திலான சிலைகளாக உருவகப்படுத்தப்பட்டுள்ளார்.

கடவுளின் தன்னிச்சையான கோபத்திலிருந்து உருவாக்கப்பட்ட தெய்வ வடிவமாகவும், சிங்கத்தின் மீதமர்ந்து வந்து மஹிஷாசுரா என்ற அரக்கனைக் கொல்லும் நோக்கத்தை உடைய தெய்வமாகவும் கந்த புராணம் கூறுகிறது. இந்த தேவியின் மகிமைகள் தேவி-பகவத புராணம் மற்றும் தேவி மகாத்மியம் ஆகியவற்றிலும் விவரிக்கப்பட்டுள்ளன. மார்க்கண்டேய புராணத்தின் ஒரு பகுதியிலும் இந்த தேவியின் வடிவம் பற்றி மார்க்கண்டேய முனிவரால் கூறப்பட்டுள்ளது.

இந்து மத மரபில் இத்தேவி வடிவம் யோகம் மற்றும் தாந்த்ரீகம் சார்ந்த நூல்களில் ஆக்கினை சக்கரம் அல்லது மூன்றாவது கண் எனப்படும் மையத்தை ஆசி வழங்கித் தூண்டியெழச் செய்யும் சக்தி வடிவமாகப் போற்றப்படுகிறது.

வாமன புராணத்தில் மகிசாசூரன் என்ற அரக்கனை அழிக்கும் பொருட்டு பல்வேறு கடவுள்களின் சக்திகளின் ஒருங்கிணைப்பின் காரணமாக உருவான தெய்வமாகவும் கூறப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட பல்வேறு கடவுளர்களின் சக்திகளின் ஒருங்கிணைப்பினால் வெளிப்பட்ட ஆற்றலின் கதிர்களானது காத்யாயனர் என்ற முனிவரின் ஆசிரமத்தில் குவிக்கப்பட்டு காத்யாயனரால் சரியான வடிவம் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டவராக இத்தேவி அறியப்படுகிறார். இதன் காரணமாகவே இத்தேவியானவருக்கு காத்யாயனி என்ற பெயரும் தோன்றியதாக புராணம் கூறுகிறது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: காதலுனுக்காக காதலி நிர்மாணித்த கோயில்!
Kathyayani Amman

காளிகா புராணத்தில், காத்யாயனாரால் முதலில் வழிபடப்பட்டதால் காத்யாயனி என்ற பெயர் வரப்பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த இரு புராணங்களுமே இத்தேவியின் வடிவத்தை துர்க்கையின் பூத வடிவமாகவும், நவராத்திரி நோன்பு விழாவின் ஆறாம் நாளில் வழிபடப்படும் தெய்வ வடிவமாகவுமே கூறுகின்றன.

மகிசாசுரன் என்ற அரக்கனால் தேவலோகத்தில் இந்திரன் முதலியவர்களை துன்புறுத்தப்பட்டதாகவும், அவனை எதிர்க்க முடியாத தேவர்கள் பிரம்மனிடம் சென்று முறையிட்டதாகவும், பிரம்மனின் வழிகாட்டுதலின்படி எல்லோரும் சென்று திருமாலிடம் முறையிடச் சென்றதாகவும், அந்த நேரத்தில் அங்கு சிவனும் இருந்ததாகவும், இதைக் கேட்ட திருமாலும், சிவனும் பெருங்கோபம் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

சிவன், திருமால், பிரம்மன் முதலியவர்கள் கோபத்திலிருந்தும் ஒவ்வொரு ஆற்றலும் கிளம்பிற்று. இந்த ஆற்றல்களையெல்லாம் ஒன்று திரட்டி காத்யாயன முனிவர் ஆசிரமத்திற்குக் கொண்டு சென்றனர். அம்முனிவர் தம்முடைய ஆற்றலையும் அதனுடன் சேர்க்க எல்லா ஆற்றல்களும் கூடி காத்யாயனி என்ற பெயரில் ஒர் அழகான பெண் வடிவமாக உருவானதாகவும் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த தேவியே சிங்க வாகனத்தில் ஏறி மகிசாசுரனை அழித்ததாகவும் வாமன புராணம் கூறிச் செல்கிறது.

திருமணமான பெண்கள் தொடர்ந்து ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் காத்யாயினி தேவியை உபாசனை செய்து வருவதன் மூலம் வாழ்வில் சகல நலன்களையும் பெற முடியும்.

இதையும் படியுங்கள்:
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள்!
Kathyayani Amman

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com