தமிழ் வருடத்தின் பதினொன்றாவது மாதமான மாசியில், சூரியன் மகர ராசியிலிருந்து, கும்ப ராசிக்குள் பிரவேசிக்கிறான். சூரியன், கும்ப ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு 29 நாட்கள், 48.4 நாழிகைகள். ஆகவே, மாசி மாதம் 29 அல்லது 30 நாட்களைக் கொண்டிருக்கும். தற்போதைய குரோதி வருடத்தில், மாசி மாதத்தின் மொத்த நாட்கள் 30.
சில மாதங்களில், குறிப்பிட்ட திதிகள், நட்சத்திரங்கள் முக்கியமானதாகக் கருதப்படும். இன்னும் சில மாதங்களில், சில குறிப்பிட்ட தெய்வங்களுக்கு உகந்த மாதங்கள் என்று சொல்லப்படும். ஆனால், மாசி மாதத்தில் எல்லா நாட்களுமே புனிதமான நாட்கள். இந்த மாதத்தில் எல்லா கடவுளுக்கும் விசேடமான நாட்கள், பண்டிகைகள் உள்ளன.
ஆறு, கடல் ஆகியவற்றில், புனித நீராடுவதற்கு உகந்த மாதம் மாசி. இந்த மாதத்தில், புண்ணிய தீர்த்தங்களில் அமிர்தம் கலப்பதாகவும், ஆகவே, தீர்த்தவாரி செய்வது, நோயற்ற நீண்ட வாழ்விற்கு வழிவகுக்கும் என்பது நம்பிக்கை. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகம், மாசி மாதத்தில் நடைபெறும். கும்பமேளா, என்ற பெயரில், இந்த ஆன்மிக நிகழ்ச்சி, வட மாநிலங்களில் நடை பெறுகிறது.
சிவபெருமானின், 63 திருவிளையாடல்களில் பெரும்பாலானவை, இந்த மாதத்தில் நடைபெற்றன. ஆதியும், அந்தமும் இல்லாத ஜோதி வடிவினராக சிவபெருமான் காட்சி தந்தது, மாசியில் என்று புராணங்கள் கூறுகின்றன. ஈசனை, லிங்க வடிவமாக வழிபாடு செய்யத் துவங்கியது மாசி மாதத்தில். எல்லா மாதங்களிலும், சிவராத்திரி வந்தாலும், மாசி மாத சிவராத்திரி, மகாசிவராத்திரி என்று அனுசரிக்கப்படுகிறது. இந்த மாத சிவராத்திரி தினத்தில், பரமசிவன், அம்பிகையைத் திருமணம் செய்து கொண்டார். ஆகவே, மாசி மாதத்தில், திருமணமான பெண்கள், தங்கள் தாலி சரட்டை மாற்றிக் கொள்ளும் பழக்கம் உள்ளது.
ஹொய்சால வம்சத்தைச் சேர்ந்த வல்லாள மகாராஜர், திருவண்ணாமலையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். தன்னிடம் யாசகம் கேட்டு வருபவர்களுக்கெல்லாம், கேட்டதைக் கொடுக்கும் வள்ளலாக இருந்தார். அவரை சோதிக்க விரும்பிய சிவபெருமான், சிவனடியார் வேடத்தில் வந்தார். அந்த காலத்தில், பொது மகளிர் எனப்படும் தேவதாசி முறை இருந்தது. சிவனடியார், எனக்கு ஒரு தேவதாசி வேண்டும் என்று கேட்டார். சிவபெருமானின் மாயையால், பூத கணங்கள் மனித வடிவில் நகரிலிருந்த எல்லா தேவதாசிகளையும் சொந்தமாக்கிக் கொண்டன. மன்னரின் நிலையறிந்த மகாராணி, சொன்ன சொல் காப்பாற்றப் பட வேண்டும் என்று சிவனடியாரிடம் தான் செல்ல முடிவெடுத்தார்.
சிவனடியாருடன் தனித்து விடப்பட்ட மகாராணி, சிவனடியாரைத் தொட்டவுடன், சிவனடியார் மறைந்து அங்கு அழகான குழந்தை தோன்றி அழ ஆரம்பித்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடி வந்த மன்னர், குழந்தையை கையிலெடுத்து சமாதானம் செய்ய, குழந்தை மறைந்து, சிவபெருமான் பார்வதி தேவியுடன் காட்சி அளித்தார்.
வல்லாள மகாராஜா, மதுரை சுல்தானுடன் நடந்த போரில் கொல்லப்பட்டார். மகாராஜாவின் இறுதிக் கடனை, இறைவனே, திருவண்ணாமலையின் அருகில் ஓடும் கௌதம நதிக்கரையில் செய்து முடித்தார். இன்றும் பள்ளிகொண்டாப்பட்டு ஊரில், கௌதம நதிக்கரையில், மாசி பௌர்ணமியன்று, சிவபெருமான், மகனாக தனது தந்தை வல்லாள மகாராஜாவிற்கு திதி கொடுக்கும் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பக்தர்கள், நதியில் தீர்த்த நீராடி, பித்ருக்களுக்கு திதி செய்வது வழக்கம்.
பெருமாளின் மகாவிஷ்ணு அவதாரம் நடந்தது மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில். ஆகவே, மாசி மாத ஏகாதசி விரதம் நன்மையைக் கொடுக்கும். பார்வதி தேவி, தட்சனின் மகளாக அவதரித்தது மாசி மாதத்தில். சிவனை, மனதிலிருத்தி தவம் இருந்தது மாசியில். இந்த மாதத்தில் பெண்கள் அம்பிகையை வழிபட மகிழ்ச்சியான இல்லற வாழ்வு அமையும்.
சங்கடங்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ள விநாயகரை நினைத்து வழிபடும் நாள் சங்கடஹர சதுர்த்தி. மாசியில் வருகின்ற சதுர்த்தி மகாசங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. இந்த நாளில், விநாயகர் வழிபாடு சகல பாவங்களிலிருந்தும் விடுவிக்கும்.
பிரணவ மந்திரத்தின் பொருளை, தந்தையாகிய சிவபெருமானுக்கு, முருகப் பெருமான் விளக்கிய நாள் மாசி மாதம் பூச நட்சத்திரத்தில். மந்திர உபதேசம் பெறுவதற்கு ஏற்ற மாதம் மாசி. இந்த காரணத்தால், மாசியில் உபநயனம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.
இராமபிரான் மேல் அழகான தாலாட்டுப் பாடல்கள் அருளிய குலசேகர ஆழ்வார் பிறந்தது மாசிமாதம் புனர்பூச நட்சத்திரத்தில். எரிபத்த நாயனார் (அஸ்தம்), காரி நாயனார் (பூராடம்), கோச்செங்கட்சோழ நாயனார் (சதயம்), ஆகிய நாயன்மார்கள் அவதரித்தது மாசி மாதத்தில்.