நின்ற கோலத்தில் உருகிய பெருமாள்... இன்றும் இருக்கும் அந்த பாதங்கள்! எங்கே?

லிங்க வடிவையும், திருமாலின் பாதங்களையும் ஒருசேரத் தரிசிக்கும் சிலிர்ப்பூட்டும் அனுபவம்.
Sambandhar and shiva lingam
Otha Uruguesar TempleCredits: AI Image
Updated on
deepam strip
deepam strip

காஞ்சிபுரத்தில் உள்ள ஐந்து பாடல்பெற்ற தலங்களில் ஒன்று திருக்கச்சிமேற்றளி. (திருகச்சியேகம்பம், திருவோணகாந்தன்தளி, கச்சி அனேகதங்காவதம், திருக்கச்சிநெறிக் காரைக்காடு ஆகியவை மற்ற நான்கு திருத்தலங்களாகும்).

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பிள்ளையார் பாளையம். இங்கு திருமேற்றளீஸ்வரர் ஆலயம் உள்ளது. இது 'திருக்கச்சிமேற்றளி' என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில்தான் மகாவிஷ்ணு தவம் செய்தார். அவர் ஏன் தவமிருந்தார்? அவரது விருப்பம் நிறைவேறியதா? அதைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

சிவரூபம் பெற விரும்பிய திருமால்

திருப்பாற்கடலில் ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் திருமாலுக்கு, திடீரென்று சிவபெருமானின் லிங்க வடிவத்தைப் பெறவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதை ஈசனிடம் முறையிட்டார் மகாவிஷ்ணு. "இது சாத்தியமில்லை" என்று சிவபெருமான் கூறினாலும், திருமால் விடுவதாக இல்லை. 'சிவரூபம் அடைந்தே தீருவது' என்ற தீர்மானத்தோடு சிவபெருமானை எண்ணித் தவமிருந்தார். மகாவிஷ்ணுவின் மன உறுதியால் மகிழ்ந்த ஈசன், அவருக்கு அருள்புரிய நினைத்தார்.

"காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கச்சிமேற்றளியில் சுயம்புவாக அருளும் என்னை நோக்கித் தவம் செய்து வழிபட்டால், உங்கள் விருப்பப்படி லிங்க ரூபம் அடையலாம்," என்று ஈசன் அருளினார்.

திருமாலும் அவ்வண்ணமே ஈசனை நோக்கித் தவமிருந்தார். காஞ்சி நகரில் வேகவதி நதிக்கரையில், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் தவம் செய்தார்.

சம்பந்தரின் பதிகமும் ஓத உருகீசரும்

சிவபெருமானின் திருத்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டிருந்த திருஞானசம்பந்தர், திருக்கச்சிமேற்றளிக்கு வந்து சேர்ந்தார். தவக்கோலத்தில் நின்றிருப்பவர் ஈசனே என்று கருதி, ஆலயம் இருக்கும் தெருவின் தொலைவிலேயே நின்று சிவனை நினைத்துப் பதிகம் பாடத் தொடங்கினார்.

ஞானசம்பந்தரின் பாடலுக்கு ஈசனே மயங்கினார் என்னும்போது, மகாவிஷ்ணு உருகாமல் இருப்பாரா? சம்பந்தர் பாடப் பாட, நின்ற கோலத்தில் தவம் செய்துகொண்டிருந்த திருமால் உருகினார். சம்பந்தர் பதிகத்தைப் பாடி முடிக்கும்போது, பாதம் வரை உருகிவிட்டார் திருமால்.

பாதம் வரை உருகிய திருமாலின் வடிவம் சிவலிங்கமாக மாறியது. பதிகம் முடிந்து சம்பந்தர் பாடுவதை நிறுத்தியதால், திருமாலின் பாதங்கள் மட்டும் உருகாமல் அப்படியே தங்கிவிட்டன. சம்பந்தரின் பாடலுக்கு உருகிச் சிவலிங்க சொரூபமாக மாறியதால், இவர் “ஓத உருகீசர்” என்று அழைக்கப்படலானார்.

ஆலயத்தின் சிறப்புகள்

காஞ்சிபுரம் அருகே பிள்ளையார் பாளையத்தில் உள்ள திருமேற்றளீஸ்வரர் ஆலயத்தில், 'ஓத உருகீசர்' கிழக்கு நோக்கித் தனிச் சந்நிதியில் அருள்கிறார். அவருக்கு முன்னே திருமாலின் இரண்டு பாதங்கள் இருப்பதை இப்போதும் காணலாம்.

  • திருமேற்றளீஸ்வரர்: இவர் சுயம்புலிங்கமாகத் தனிச் சந்நிதியில் அருள்கிறார். மேற்குத் திசை நோக்கி இருக்கும் கோயில் (தளி – கோயில்) என்பதால் 'திருமேற்றளீஸ்வரர்' என்ற பெயர் வந்தது.

  • சம்பந்தர் சந்நிதி: இத்தெருவின் கீழ்க்கோடியில் சம்பந்தர் நின்று பாடிய இடத்தில் அவருக்குத் தனி ஆலயம் உள்ளது. திருமேற்றளி கோபுரத்தைக் கைகளைக் குவித்து வணங்கும் நிலையில் சம்பந்தரை இங்கு தரிசிக்கலாம்.

  • உற்றுக்கேட்ட முத்தீசர்: இத்தெருவின் நடுவில் இக்கோவில் உள்ளது. திருஞானசம்பந்தர் பாடியபோது, அதனருகில் இருந்து கேட்பதற்காகச் சிவபெருமான் இங்கு வந்து அமர்ந்ததாக வரலாறு கூறுகிறது.

இதையும் படியுங்கள்:
உடலோடு சொர்க்கம் சென்ற சங்ககாலப் புலவர்! - அறிவியலை மிஞ்சும் அதிசய வரலாறு!
Sambandhar and shiva lingam

தற்போது இக்கோவில் 'ஓத உருகீசர் ஆலயம்'(Otha Uruguesar Temple) என்றே பிரசித்தமாக உள்ளது. ராஜகோபுரமும் பிரதான வாசலும் ஓத உருகீசருக்கே உள்ளன. பிரம்மாண்டமான லிங்க வடிவையும், அதன் முன் உள்ள திருமாலின் பாதங்களையும் ஒருசேரத் தரிசிப்பது பக்தர்களுக்குச் சிலிர்ப்பூட்டும் அனுபவமாகும்.

logo
Kalki Online
kalkionline.com