
ஜப்பான், சீனா, திபெத், மெக்சிகோ போன்ற உலக வேளாண் குடிகளின் வேளாண் பணிகள் ஜூனின் பிற்பகுதியில் (ஜூன் 21 solar solstice முதல்) தொடங்கும். தமிழகத்திலும் ஆடி மாதத்தில் விதைப்புப் பணிகள் (sowing seeds) தொடங்கி விடும். அம்மன் கோயில்களின் முளைப்பாரி விழா விதைப்பு சார்ந்த ஓர் வேளாண் வழிபாட்டுச் சடங்காகும்.
முளைக் கொட்டு விழா
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி மாதம் முளைக்கொட்டு திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். அம்மன் முன்னிலையில் முளைப்பாரி வளர்க்கப்படும். அம்மன் மட்டும் ஆடி மாதம் தனியாகக் கோயிலுக்குள் பல்லக்கில் வீதி வலம் வருவாள். அதனால் அவ் வீதிக்கு ஆடி வீதி என்று பெயர். அம்மன் சந்நிதியில் இளம் பெண்கள் முளைக் கொட்டு கொட்டுவார்கள்
முளைப்பாரியின் அறிவியல்
நடப்பு ஆண்டில் விளைச்சல் நன்றாக இருக்குமா என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்வதற்காக தை, மாசி, பங்குனி, ஆடி மாதங்களில் தமிழகத்தில் முளைப்பாரி வளர்ப்பர். முளைப்பாரி ஓர் முன்னறி அறிவியல் (pilot study). தட்டப்பயிறு, மொச்சை பயிறு, பச்சைப்பயிறு போன்றவற்றை ஒரு மண் சட்டியில் விதைத்து இருட்டு அறையில் வைத்து தண்ணீர் தெளித்து வளர்த்து அதன் வளர்ச்சியைக் கண்டு தெளிவர்.
ஆடிப்பட்டம் தேடி விதை
ஆடி மாதத்தில் நம் ஊர்களில் பெண்கள்
அவரை தொவர மொச்ச
அஞ்சு வகை ஆமணக்கு
எள்ளு சிறு பயறு
ஏத்த மதிப்பயறு
கடலை சிறு பயறு
காராமணிப் பயறு
என்று முளைப்பாரி பாடல்களில் பெயர்களைச் சொல்லிப் பாடுவார்கள் அடுத்ததாக அவர்கள் வயலில் நெல் விதைப்பு தொடங்கும்போது,
ஆத்தூர் கிச்சடி சம்பா
அல்லிலே லேலோ
அழகான நெல் எடுத்து
தில்லாலே லேலோ
அளவுடனே விதை விதைப்போம் அல்லிலே லேலோ
என்று பாடிக்கொண்டே விதைப்பபார்கள்.
முளைப்பாரி எடுத்தல்
அம்மன் கோவில்களில் முளைப்பாரி என்ற வளமைச்சடங்கு (fertility ritual) 15 நாட்கள் நடைபெறும். முதல் செவ்வாய் அன்று செவ்வாய் சாட்டுவர். அன்று விழா அறிவிக்கப்டும். விரதம் தொடங்கும். வளரிளம் பெண்கள் பயறு விதைகளை (முத்துக்கள்) வீடு வீடாக போய்ச் சேகரித்து வருவர்.
சிலர் தம் தம் வீடுகளில் வைத்து முளைப்பாரி வளர்ப்பர். சுற்றிலும் ஒரு துணியை கட்டி சூரிய ஒளி அதிகம் படாத வகையில் வளர்க்க வேண்டும். சில பகுதிகளில் கோயில்களில் தென்னங் கிடுகுகளால் மூடி வைத்து வாயில் வெள்ளைத் துணியை கட்டிக் கொண்டு எச்சில் தெறிக்காமல் கோயில் பூசாரி முத்து போட்ட மண் சட்டிகளுக்கு தண்ணீர் தெளிப்பர்.
வளர்ந்த முளைப்பாரி நல்ல பொன் நிறத்தில் காணப்பட்டால் அந்த ஆண்டு விளைச்சல் சிறப்பாக இருக்கும் என்பதை அறிந்து கொள்வார்கள்; நிறம் மங்கி காணப்பட்டால் அது வேண்டாம்.
மூன்றாம் செவ்வாய் அன்று அதாவது15 நாள் கழித்து வெளியே கொண்டு வந்து அம்மன் கோவில் முன்வைத்து சுற்றிலும் முளைப்பாரி பாடல்களை பாடி பின்பு தலையில் தூக்கிச் சென்று அருகில் உள்ள நீர் நிலைகளில் வளர்ந்த பயறு செடிகளை பிய்த்துப் போட்டுவிட்டு மண்ணையும் கொட்டி விட்டு வெறும் சட்டியை கொண்டு வருவர். இதை முளைப்பாரி கரைத்தல் என்பர்.
முளைக் கொட்டு
15 நாட்களும் கோவில் முற்றத்தில் முளைப்பாரி கொட்டுதல் என்ற ஆட்டம் நடைபெறும். சில ஊர்களில் ஆண்களும் தனியாக வளைதடி கொண்டு முளைப்பாரி கொட்டுவர். பெண்கள் வளைதடி கொண்டும் அல்லது கைகளைத் தட்டியும் முளைப்பாரி கொட்டுவர். இதற்குப் பெயர் கும்மி கொட்டுதல் அல்ல. முளைப்பாரி கொட்டுதல் ஆகும். இதற்கென்று முளைப்பாரி பாடல்கள் உண்டு. அப்பாட்டை பாடும் பெண்களும் ஆண்களும் தனித்தனியே அவரவர் பகுதியில் தொடர்ந்து பாடி வருவர்.
அம்மன் கோயில் முளைப்பாரியில் வேளாண்மையும் பாட்டும் ஆட்டமும் வளமைக் கோட்பாடும் அறிவியலும் இணைந்துள்ளதை உணரலாம்.