பன்னிரண்டு லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்குச் சமமான பாணலிங்கம் தோன்றிய கதை!

Baanalingam
Baanalingam
Published on

பாணலிங்கம் என்பது லிங்க வடிவத்தில், வழவழப்பான தன்மையுடன் இருக்கும் ஒரு வகைக் கல். அவற்றின் மேற்புறத்தில் பூணூல் அணிந்திருப்பது போன்ற ரேகை அமைப்பு இயற்கையாகவே இருக்கும். கல்லால் செய்யப்பட்ட ஆயிரம் சிவலிங்கங்களுக்கு, ஒரு ஸ்படிக லிங்கம் சமமானது. அதே போல் பன்னிரண்டு லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்குச் சமமானது ஒரு பாணலிங்கம் என்கிறார்கள்.

பாணலிங்கம் என்பது, பாணம் எனப்படும் நீரில் தாமாக உற்பத்தியாகிறது என்ற கருத்தும் இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் உள்ள நர்மதை நதியில், தானாகவே தோன்றக்கூடிய பாணலிங்கம் அதிகமாகக் கிடைக்கின்றன.

இந்தப் பாணலிங்கத்தின் தோற்றத்துக்கு ஒரு கதை இருக்கிறது. அந்தக் கதை இதுதான்:

சிவலிங்க வழிபாட்டின் மகிமை, சிவபூஜை செய்வதால் கிடைக்கும் பலன்கள் போன்றவைகளைப் பற்றி, முனிவர் ஒருவர் தனது சீடர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாகச் சென்ற பாணாசுரன் என்ற அசுரன் அதைக் கேட்க நேரிட்டது. அதனைக் கேட்ட அசுரனுக்குத் தானும் சிவபூஜை செய்து, நல்ல பலன்களை அடைய வேண்டுமென்கிற எண்ணம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சிவபெருமானை நோக்கிக் கடுமையாகத் தவமிருக்கத் தொடங்கினான். அவனது தவத்தில் மகிழ்ந்த இறைவன், அவன் முன்பாகத் தோன்றி, “உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்று கேட்டார்.

உடனே பாணாசுரன், "ஆயிரம் தலைகள் கொண்டும், இரண்டாயிரம் கைகளுடனும் சர்வேஸ்வரனான உம்மை வழிபட விரும்புகிறேன். அந்த வழிபாட்டைச் செய்வதற்காக எனக்குப் பதினான்கு கோடி சிவலிங்கங்கள் வேண்டும்" என்று கேட்டான். சிவபெருமானும் அவன் வேண்டிய வரத்தை அளித்தார்.

இதையும் படியுங்கள்:
கங்கை தெரியும்; குப்த கங்கை எங்குள்ளது தெரியுமா?
Baanalingam

அதன் பிறகு சிவபெருமான், தனது பூத கணங்களின் மூலமாக, பாணாசுரனுக்குப் பதினான்கு கோடி சிவலிங்கங்களைத் தந்தருளினார்.

அதைக் கொண்டு பாணாசுரன் பல காலமாக வழிபாடு செய்தான். அவன் வழிபட்ட சிவலிங்கத் திருமேனிகள் அனைத்தும் ‘பாணலிங்கம்’ என்று அழைக்கப்படுகின்றன.

பாணாசுரன் வழிபட்ட அந்த லிங்கங்களே, பாணாலிங்கமாக ஆற்றில் கிடைக்கிறது என்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com