சிலருக்கு தூக்கத்தில் பேசுகிற பழக்கம் இருக்கும். அடுத்த நாள் அதைப் பற்றி கேட்டால் அவர்கள் தாங்கள் தூக்கத்தில் பேசியதை நினைவில் வைத்திருப்பதில்லை. தூக்கத்தில் பேசுவதும் நடப்பதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது கிடையாது. ஆனால், அவை இரண்டுமே மருத்துவத் துறையில் பாரசோம்னியா (Parasomnia) என்று அழைக்கப்படுகிறது. தூக்கத்தில் பேசுவது பொதுவாக பாதிப்பில்லாதது, இதற்கு எந்த மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை என்றாலும் அவை நம்முடன் சேர்ந்து உறங்குபவர்களின் தூக்கத்தை கெடுத்து தொந்தரவு செய்யும்.
காரணங்கள்:
* மரபியல் காரணமாகவும் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தூக்கத்தில் பேசும் பெற்றோருக்கு தூக்கத்தில் பேசும் குழந்தைகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறுகின்றனர்.
* பெரியவர்கள் தூக்கத்தில் பேசுவதற்கு பல வெளிப்புற காரணங்கள் உள்ளன. குடும்பப் பிரச்னைகள், வேலை தொடர்பான மன அழுத்தம், மது அருந்துதல் போன்றவை காரணங்களாக இருக்கலாம்.
* மன அழுத்தம் காரணமாகவோ, போதுமான தூக்கமின்மை காரணமாகவோ அல்லது போதுமான ஓய்வு பெறாதபோதோ அவை நம் தூக்கத்தின் தரத்தை பாதித்து பேசும் பழக்கத்தை ஏற்படுத்தலாம்.
* எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகளாகக் கூட தூக்கத்தில் பேசும் பழக்கம் உண்டாகலாம்.
பொதுவாக, 6 மணி நேரம் தூங்கும்பொழுது சில நேரம் லேசான உறக்கமும், சில நேரம் ஆழ்ந்த உறக்கமும் என நம் தூக்கத்தில் பல கட்டங்கள் உள்ளன. ஆனால், தூக்கத்தில் அசாதாரணமாக ஏதேனும் ஒன்றை செய்யும்போது (பேசுவது, நடப்பது என) அது பெரிய பிரச்னையாக இல்லாமல் தோன்றினாலும் கவனிக்க வேண்டியதே.
பொதுவாக, சிறு குழந்தைகளுக்கு தூக்கத்தில் பேசும் பழக்கம் இருக்கும். அதுவும் ஆண்களிடம்தான் இந்தப் பழக்கம் அதிகமாக இருக்கின்றன என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. தூக்கத்தில் முணுமுணுப்பது அவர்கள் கண்ட கனவுடைய தொடர்பாக இருக்கலாம் அல்லது வாழ்வில் நடக்கும் விஷயம் தொடர்பாகக் கூட இருக்கலாம். வயது வந்தவர்களும் இது மாதிரி தூக்கத்தில் பேசுவது சாதாரணமானதுதான். ஆனால், இந்தப் பழக்கம் தொடர்ந்து நடக்கும்போதுதான் ஏதேனும் உளவியல் பிரச்னை இருக்கிறதா என்று மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியம் வருகிறது.
தூக்கத்திற்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் இந்த செயல்கள் குறிப்பாக தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருந்தால் தடுக்கி விழுந்து அடிபடவோ, காயம் ஏற்படவோ நேரிடலாம்.
தீர்வுகள்:
* தூக்கத்தில் பேசுவது, நடப்பது போன்ற பழக்கங்களை கட்டுக்குள் கொண்டு வர முதலில் இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை, சாதாரணமானதுதான் என்று நம்ப வேண்டும்.
* அடுத்ததாக, தூங்கப்போகும் நேரத்தையும், எழுந்துகொள்ளும் நேரத்தையும் தினமும் ஒரே சீராகக் கடைபிடிக்க வேண்டும்.
* தூங்கும் அறையில் வேறு எந்த வேலைகளையும், அதாவது டிவி பார்ப்பது, ஆபீஸ் பணிகளை செய்வது, மொபைல் போன்களை நோண்டுவது என எந்த வேலைகளும் செய்யாமல் இருக்க வேண்டும். படுக்கச் செல்வதற்கு ஒரு மணி நேரம் முன்பு அனைத்து கேட்ஜஸ்களையும் அணைத்து விடுவது நல்லது.
* இரவு நேரத்தில் மது அருந்துவது, காஃபின் நிறைந்த உணவுகளான காப்பி, டீ போன்ற பானங்கள், கலோரிகள் நிறைந்த உணவுகளை தவிர்த்து விட வேண்டும். இவையெல்லாம் நம்மை தடையின்றி ஆரோக்கியமான தூக்கம் பெற உதவும்.