மார்கழி தட்சிணாயன புண்ய காலத்தின் கடைசி மாதமாகும். மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலைப் பொழுதென்பதால் தேவர்கள் ஒன்று கூடி மார்கழி மாத பிரம்ம முஹுர்த்தத்தில் சிதம்பரத்தில் நடராஜரை தரிசனம் செய்ய வருகிறார்களாம். வருடந்தோறும் மார்கழி மாத பௌர்ணமியன்று திருவாதிரை நட்சத்திரம் வருகிறது. இந்த திருவாதிரை நட்சத்திரம் சிவனுக்கு மிகவும் உகந்த நட்சத்திரம்.
சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அவற்றுள் முதன்மையானதும் மிக முக்கியமானதும் 'ஆருத்ரா அபிஷேகம் மற்றும் தரிசனம்' எனப்படும் மார்கழி மாத திருவாதிரை அபிஷேகம் ஆராதனைகளாகும். மார்கழி மாத திருவாதிரை தினத்தில் தில்லை நடராஜப் பெருமான் தேரில் வீதி வலம் வருவது கண்கொள்ளா காட்சியாகும். இக்காட்சியை தரிசிக்க பிற நாடுகளிலிருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் சிதம்பரம் வருவது வழக்கம்.
இதைத்தவிர, ஆருத்ரா தரிசனம் அன்று நடராஜப்பெருமானுக்கு களி நிவேதனம் செய்வது பற்றி ஒரு சம்பவம் கூறப்படுகிறது. சேந்தனார் என்பவர் ஒரு விறகுவெட்டி. இவர் ஒரு சிறந்த சிவபக்தர். அவர் தினமும் ஒரு சிவனடியாருக்கு அமுது செய்வித்த பின்பே தான் உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு நாள் மழையினால் அவரால் விறகு வெட்டி விற்க காட்டுக்குப் போக முடியவில்லை. அதனால் கையில் காசில்லாததால் உணவு ஏதும் வீட்டில் தயார் செய்ய முடியாமல் பரிதவித்திருந்தார்.
தமது அடியவர்களை சோதித்து அருள்பாலிப்பது சிவபெருமானுக்கு வழக்கம்தானே. எளிய விறகு வெட்டியான சேந்தனாரின் சிவபக்தியை உலகிற்கு காட்ட திருவுளம் கொண்டார் நடராஜப் பெருமான். சேந்தனாரையும் சோதிக்கும் விதமாக தாமே ஒரு சிவனடியாராக மாறி அவரது வீட்டு வாசலில் உணவு வேண்டி குரல் கொடுத்தார். சிவனடியாரைக் கண்ட சேந்தனாருக்கும் அவரது மனைவிக்கும் என்ன செய்வதென்று புரியாமல் வீட்டிலிருந்த கேழ்வரகு மாவில் களி செய்து சிவனடியாருக்குப் படைத்தனர். சிவனடியாராக வந்த ஈசன் அக்களியை மிக விருப்பத்துடன் உண்டதோடு மட்டுமல்லாமல், மீதமிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்காக வேண்டும் என சேந்தனாரிடம் கேட்டு வாங்கிச் சென்றார்.
மறுநாள் காலை வழக்கம் போல் தில்லையம்பதியில் உறையும் ஈசனின் கருவறையைத் திறந்த அந்தணர்கள் அதிர்ந்து போனார்கள். நடராஜப் பெருமானைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். செய்வதறியாமல் திகைத்துப்போன அவர்கள், தங்களுக்குள் கூடிப் பேசி இந்த சம்பவத்தைப் பற்றி அரசருக்குத் தெரிவிக்க முடிவு செய்தனர்.
முதல் நாள் இரவே நடராஜப் பெருமான் அரசரின் கனவில், தான் சேந்தனாரின் வீட்டுக்குக் களி உண்ணச் செல்வதாக தெரிவித்திருந்தார். அந்தணர்கள் வந்து தகவல் தெரிவித்ததும், உடனே சென்ற அரசர் சேந்தனாரைக் கண்டு அழைத்து வருமாறு தனது அமைச்சருக்கு ஆணையிட்டார். சேந்தனார் வந்ததும், அரசர் தாம் கண்ட கனவை சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் தனது வீட்டுக்குக் களி உண்ண வந்தது தில்லையம்பலத்தானே என்றறிந்ததும் மனமுருகி எம்பெருமானை வணங்கினார்.
இந்த நிகழ்வு நடந்தது மார்கழி மாத திருவாதிரை நாள் என்பதால் அதையொட்டி இல்லங்களில் திருவாதிரை அன்று 'களி' செய்து நடராஜருக்கு நிவேதனம் செய்யும் பழக்கம் ஏற்பட்டது. 'திருவாதிரைக்கு ஒரு வாய் களி' என்னும் சொலவடையும் வந்தது. இந்த ஆண்டு திருவாதிரை ஆருத்ரா தரிசன திருநாள் ஜனவரி 13ம் தேதி வருகிறது. நாமும் திருவாதிரை தினத்தன்று அருகிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று நடராஜப் பெருமானை தரிசித்து எல்லா நலன்களையும் பெறுவோம்.