தென்கயிலாயம் என்று சிறப்பிக்கப்படும் திருக்காளத்தி பஞ்சபூதங்களில் காற்றுக்கு உரிய தலமாகும். இக்கோயில் புராணத்தைப் பார்ப்போமா?
தேவ சிற்பியான விசுவகர்மாவின் மகன், ஊர்ணநாபன். அவன் சிற்பக் கலையில் வல்லவன். அதனாலேயே அவனுக்கு ஆணவம் மேலோங்கியது. உடனே பிரம்மாவுக்குப் போட்டியாகத் தானும் ஜீவன்களைப் படைக்கத் தொடங்கினான். அவன் சிற்பமாய் உருக்கொடுத்ததெல்லாம் உயிருடன் விளங்கலாயிற்று! இதனால் கடும் சீற்றம் அடைந்த பிரம்மன், ஊர்ணநாபனை சிலந்தியாகப் பிறக்குமாறு சபித்து விட்டான். அதைக்கேட்டு பதைபதைத்த ஊர்ணநாபன் சாப விமோசனம் கோரினான்.
சினம் தணிந்த பிரம்மன், அவனைத் தென் கயிலாயத்து வில்வ வனத்தில், நாவல் மர இலையில் வாழுமாறும், வனத்தில் இருக்கும் சிவனை வழிபட்டு வந்தால் சாபவிமோசனம் ஏற்படும் என்றும் கூறினான். ஊர்ணநாபனும் அவ்வாறே சிலந்தியாகப் பிறந்து அங்கே வாழ்ந்திருந்தான். சிற்ப ஞானமும், சிலந்தியின் வலை பின்னும் திறனும் ஒன்றிணைந்தன. இறைவன் திருமேனி மேல் வெயில் படாதவாறு வியக்கத்தக்க விதத்தில் வலை பின்னி வழிபட்டது அச்சிலந்தி.
ஆனால் அதே சிவனுக்கு ஒரு யானையும் பக்தனாக விளங்கியது. தன் சிவலிங்க பூஜைக்கு இடையூறாக சிலந்தி வலை இருப்பதைப் பார்த்து அதைத் தும்பிக்கையால் விலக்கியது. இதைப் பார்த்த சிலந்தி கோபம் கொண்டு மீண்டும் வலைப் பந்தல் பின்னியது. ஆனால் ஒவ்வொரு முறையும் யானையால் அது அழிக்கப்பட்டது. பொறுக்காத
சிலந்தி, யானையின் தும்பிக்கைக்குள் புகுந்து அதைக் கடித்தது. வலி தாங்காத யானை தும்பிக்கையை ஒரு பாறைமீது ஓங்கி அடிக்க உள்ளிருந்த சிலந்தி இறந்தது. அது கடித்ததால் யானையும் இறந்தது. உடனே அங்கே பிரத்யட்சமான கயிலைநாதன் இருவர் பக்தியையும் பாராட்டி மோட்சம் அருளினார்.
இந்தத் தலம் சீகாளத்தி என்றழைக்கப்படுகிறது. சீ என்றால் சிலந்தி, அத்தி என்றால் யானை. இறைவன், காளத்திநாதன் ஆவார்.
பொதுவாக கோயில் கருவறைகளில் காற்று நுழையாததால், உள்ளிருக்கும் எண்ணெய் விளக்குகள், சலனம் இன்றி நின்று, நிதானமாக எரியும். ஆனால் இங்கோ, விளக்குகள் காற்றில் மெல்ல அசையும்! காரணம், இந்த ஈசன் ஐம்பூதங்களில் ஒன்றான வாயுவுக்கு (காற்று) அதிபதியாகத் திகழ்வதுதான்.
கருவறை முன் கண்ணப்பன் எழுந்தருளியிருக்கிறார். இதற்கும் புராணம் இருக்கிறது.
வேடனான திண்ணன், ஒருமுறை காட்டில் மரங்களுக்கு நடுவில் ஒளிவீசும் சிவலிங்கத்தைப் பார்த்தான். அன்பு மீதூற, வேட்டையாடி வந்த மாமிசத்தை சிவலிங்கத்திற்குப் படைத்தான். அதையே தினசரி பழக்கமாக்கிக் கொண்டான்.
ஒருநாள், திண்ணன் இறைச்சியுடன் வந்தான். அப்போது லிங்கத்தின் ஒரு கண்ணிலிருந்து குருதி வழியக் கண்டான். பதறினான். பச்சிலைகளைப் பறித்து வந்து சாற்றினைப் பிழிந்து மருத்துவம் செய்தும் குருதி பொங்குவது நிற்கவில்லை. உடனே ‘கண்ணுக்குக் கண்‘ என்ற மருத்துவ முறைப்படி, ஒரு கூரிய அம்பினால் தன் விழியொன்றினை தோண்டி எடுத்து இறைவனின் கண்ணில் அப்பினான்.
குருதி நின்றது. ஆனால் மற்றொரு கண்ணிலிருந்து வழிய ஆரம்பித்தது. திண்ணன் அசரவில்லை. இரண்டாவதாக குருதி பொங்கும் கண் மேல் தனது இடது கால் பெருவிரலை அடையாளமாய் வைத்துக் கொண்டு, அம்பினால் தனது இன்னொரு கண்ணைப் பெயர்த்தெடுக்க முனைந்தான்.
அப்போது உமையவளோடு காட்சி தந்த ஈசன், அவனைத் தடுத்து, அவனது அன்பின் வலிமையைப் பாராட்டினார். கண்ணை அப்பியதால் அன்று முதல் ‘கண்ணப்பன்‘ என்று அழைக்கப்படுவான் எனக் கூறி, அவனுக்குப் பிறவியில்லாப் பெரும் பேறான முக்தியை அளித்தார். மேலும் சிறப்பளிக்க தன் கருவறைமுன் இந்த கண்ணப்ப நாயனாருக்கு இடமளித்திருக்கிறார் ஈசன்.
அம்பிகையின் பெயர் ஞானப் பூங்கோதை. திருமணம்/மகப்பேறு வேண்டுவோர், சௌபாக்கியவதியாகவும், சந்தான நாயகியாகவும் விளங்கும் அன்னையை வணங்கிப் பயன் பெறுகின்றனர்.
இத்தலத்தில் விநாயகர் சந்நிதி, பூமிக்கு அடியில் அமைந்துள்ளது. குறுகலான படிகள் வழியாக கீழே சென்று இவரை வணங்க வேண்டும்.
ராகு-கேது ஆகிய சர்ப்ப தோஷ நிவர்த்திக்காக இக்கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
சென்னையிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது திருக்காளஹஸ்தி.