
முருகன் என்றால் அழகு என்று அர்த்தம். பெயருக்கு ஏற்றார் போல் அழகுற காட்சி தருபவர் திருச்செந்தூரில் அருள்பாலிக்கும் செந்தில் ஆண்டவர். முருகப்பெருமான் சூரனை அழிக்க படைவீடு அமைத்து தங்கிய இடம் திருச்செந்தூர். சந்தன மலையை குடைந்து இந்த திருக்கோவில் ஓம் என்ற பிரணவ வடிவில் கட்டப்பட்டுள்ளது. வியாழ பகவான் அறிவுரைப்படி திருச்செந்தூரில் படைவீடு தேவதச்சனால் உருவாக்கப்பட்டது. மூலவர் பாலசுப்பிரமணியர் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
சண்முகர் திருக்கல்யாண கோலத்தில் வள்ளி, தெய்வானையோடு தெற்கு நோக்கி மூல உற்சவராக காட்சி தருகிறார். ஆவணி, மாசி மாதங்களில் உருகு சட்டை சேவை தந்து வெட்டி வேர் சப்பரத்திலிருந்து சிவப்பு சாத்தியும், வெள்ளை சாத்தியும், பச்சை சாத்தியுமாக சண்முகர் அருள்பாலிக்கிறர்.
திருச்செந்தூர் முருகன் கோவில் சிறந்த குரு பரிகார தலமாகும். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி ஆவணி மற்றும் மாசி திருவிழாக்களில் சுவாமி சண்முகப் பெருமான் சிவன், பிரம்மா, விஷ்ணு அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
மூலவரான முருகப்பெருமான் மிகப்பெரும் சிவபக்தரான சூரபத்மனின் ஆணவத்தை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி மூலம் அகற்றி சூரபத்மனையே தனது மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும், உருமாற்றி தனது அருகே வைத்துக்கொண்டார். அதுமட்டுமின்றி உலகில் அநீதியை அழிக்க சிவபெருமான் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிவந்த பொறி என்பதால் முருகனும் சிவ அம்சம் என பக்தர்கள் வழிபடுகின்றனர்.
இதனை நினைவு கூறும் விதமாகவே இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆவணி, மாசி திருவிழாக்களில் ஏழாம் நாள் அன்று சுவாமி சண்முகர் தங்கச்சப்பரத்தில் சிவப்பு சாத்தி முன்புறம் சிவன் அம்சமாகவும், பின்புறம் நடராஜர் அவதாரத்திலும் காட்சியளிக்கின்றார்.
அதேபோல முருகப்பெருமான் எட்டாம் திருநாள் காலையில் வெள்ளை சாத்திச்சப்பரத்தில் பிரம்மா அம்சமாகவும், பகலில் பச்சை சாத்தி பச்சை கடைச்சல் சப்பரத்தில் விஷ்ணு அம்சமாகவும், பக்தர்களுக்கு அருள்பாலித்து உலகில் படைக்கும் கடவுள் பிரம்மாவும், காக்கும் கடவுள் விஷ்ணுவும் மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக சிவனும் தானே என உணர்த்தும் விதமாக முருகன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
பச்சை சாத்தி கடைச்சல் சப்பரத்தில் எழுந்தருளும் ஆறுமுக பெருமானை தரிசிப்பதால் நம் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களும், எடுக்கும் காரியங்களில் அனைத்திலும் வெற்றியும், வீட்டில் செல்வ செழிப்பும் கிடைத்து வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக அமையும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த மாசித் திருநாள் ஏற்கனவே திருச்செந்தூரில் நடைபெற்று வருகின்றது. ஞாயிறு அன்று ஸ்ரீ சண்முகர் உருகுசத்தை சேவையிலும், குமார விடங்க பெருமான் பல்லக்கிலும், தங்கச்சப்பரத்தில் சிவப்பு சாத்தியும் அருள்பாலித்தார். திங்கள் அன்று வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தியும், பச்சை சாத்தி பச்சை கடைச்சல் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார் ஆறுமுகப்பெருமான்.
முருக பக்தர்களே செந்தில் ஆண்டவனின் பச்சை சாத்தி கோலத்தைக் கண்டு பேரருள் பெற திருச்செந்தூருக்கு சென்று வாருங்களேன். அந்த செந்தில் ஆண்டவனை கண்ணாரக் கண்டு பதினாறும் பெற்று பெருவாழ்வும் வாழலாமே!
(திருச்செந்தூர் தல வரலாறு என்ற நூலில் இருந்து தொகுப்பு)