
கருணையின் பிறப்பிடம், இருப்பிடம் எங்கே இருக்கிறது என்று பார்த்தால், சந்தேகமே இல்லாமல் திருமகளின் திருவடியிலும், அவளின் அன்பு பொங்கும் அந்தத் திருவிழியிலும்தான் என்று சொல்லிடலாம்.
‘கராக்ரே வஸதே லக்ஷ்மி
கரமத்யே சரஸ்வதி
கரமூலேது கோவிந்த:
ப்ரபாதே கரதர்ஸனம்’
என்கிறது ஒரு ஸ்லோகம். நம் கைகளின் நுனியில் வாசம் செய்கிறாள் மஹாலக்ஷ்மி. வாழ்க்கையில் நமக்குத் துன்பம் வரும்போதெல்லாம் கோயில்களுக்குச் செல்ல வேண்டிய சிரமத்தைக்கூட கொடுப்பதில்லை திருமகள். ‘இதோ பார் உன் உள்ளங்கையை, அதில் நான் வாசம் செய்கிறேன்… உனக்கு நம்பிக்கையைக் கொடுப்பதற்காகவே, உன்னைத் துவளவிடாமல் தடுப்பதற்காகவே உன்னுடனேயே வாசம் செய்கிறேன். அந்த நம்பிக்கையை நீ மனதில் வைத்துக்கொள். உன் முயற்சிகள் எல்லாம் வெற்றியில் முடியும்’ என்று நம் கையின் நுனியில் இருந்துகொண்டே தினமும் நமக்கு தன்னம்பிக்கை டானிக் புகட்டுகிறாள் தைரியலக்ஷ்மி. இந்தத் தாயாரின் கருணையை என்னவென்று சொல்வது?