
ஆச்சரியங்கள் பல அடங்கிய ஸ்தலங்கள் எத்தனையோ இந்த பூலோகத்தில் இருக்கின்றன. திருமகளின் திருப்பார்வையும், திருப்பாதமும் பட்ட அத்தனை இடங்களுமே அதியற்புதமான ஸ்தலங்களே. நரசிம்மர் திருஅவதாரம் செய்த இடம் என்று சொல்லக்கூடிய அஹோபிலத்தில் நவ நரசிம்மர்களில் ஒருவரான, மாலோல நரசிம்மராக திருமகளின் ப்ரிய நாயகனாக, பிரியா நாயகனாகக் காட்சி அளிப்பது ஒரு அழகு என்றால், அதே அஹோபிலத்தில் திருமகளின் அருட்பார்வை பெற்ற செஞ்சு குலத்தவர்களின் மாப்பிள்ளையாக அங்கே செஞ்சு லட்சுமியை திருமணம் செய்து கொண்டு பாவன நரசிம்மராகக் காட்சி அளிக்கும் அழகே அழகுதான்.
ஆதிசங்கரர் காபாலிகர்களால் தாக்கப்பட்டதும், நரசிம்மர் அவரைக் காப்பாற்றியதும், லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரத்தை அவர் இயற்றியதும் அஹோபிலத்தில்தான். அங்கே மஹாலக்ஷ்மியுடன் சேர்ந்து இருக்கும் நரசிம்மரை, மாலோல நரசிம்மரை அல்லவா ஆதிசங்கரர் தரிசித்திருக்க வேண்டும்? அதனால்தானோ என்னவோ நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம் என்று எழுதாமல் ‘லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம்’ என்று திருமகளோடு திருமாலையும் கொண்டாடி ஸ்தோத்திரம் பாடியிருக்கிறார் ஜகத்குரு. நரசிம்மரின் அருளும் அனுமதியும் இல்லாமல் நம்மால் அஹோபிலத்தை நெருங்க முடியாது என்பர் பெரியோர்கள்.