
திருவான மஹாலக்ஷ்மி தாயாரிடமிருந்து கிடைக்கப்பெறுவதுதான் ‘திருவருள்.’ திருவை விட்டு திருமால் பிரியவே மாட்டார். அதேபோலதான், அந்தத் திருமாலை விட்டு திருவான தாயாரும் பிரியவே மாட்டாள்.
பரம்பொருளான அந்தத் திருமாலுக்கு அடையாளமாக, லக்ஷ்ணமாக இருந்து கொண்டு திருமாலின் 5 நிலைகளிலும் அப்பெருமாளோடு சேர்ந்தே இருந்து நம்மை எல்லாம் குளிரக் குளிர காப்பதற்காகவே காத்துக்கொண்டிருப்பவள் திருமகள்தான். பர, வ்யூஹ, விபவ, அர்ச்சா, அந்தர்யாமி என்பதே அந்த ஐந்து நிலைகள். பர நிலையில் அதாவது பரமபதத்தில், ‘யஸ்யா வீக்ஷ்ய முகம்’ என்று திருமகளின் பார்வை செல்லும் வழியை மார்க்கமாகக் கொண்டுதான் திருமால் இவ்வுலகையே சிருஷ்டிக்கிறாராம். அடுத்தது, வ்யூஹ நிலையில், திருப்பாற்கடலில் அந்தப் பரந்தாமனோடு சேர்ந்தே பாம்பணை மேல் இருக்கிறாள் திருமகள். விபவ நிலை என்பது திருமால் திருஅவதாரங்கள் செய்யும் நிலை. இந்த அவதாரக் காலங்களிலும் கூடவே இருக்கிறாள், இருந்திருக்கிறாள் திருமாலை விட்டுப் பிரிந்தறியா திருமகள். நான்காவது நிலை, அந்தர்யாமி நிலை. நம் அனைவரது இதயக்குகைக்குள்ளும், அணுவுக்குள் அணுவாக நம் உள்ளங்களிலும் உறைகின்றாள் லோகேஷ்வரியான திருமகள். ஐந்தாவது நிலை என்பது அர்ச்சா நிலையாகும். அதாவது, திருக்கோயில்களில் திருமாலின் திருமார்பில், திருமாலின் மருவாகவே இருக்கிறாள் திருமகள்.