
திருமலை என்றால் எப்படி ஸ்ரீனிவாச பெருமாள் மட்டும்தான் நம் நினைவிற்கு வருவாரோ, அப்படித்தான் திருச்சானூர் என்ற பெயரை கேட்டதுமே, ‘ஆஹா... அது பத்மாவதி தாயார் திருக்கோயில் கொண்டிருக்கும் தலமாயிற்றே’ என்றே நமக்கு எண்ணத் தோன்றும். திருப்பதி பெருமாளின் திருவான அந்த பத்மாவதி தாயார், திருச்சானூரைத் தேடி வந்தமர்ந்ததே அவளின் திருவருளால்தான்.
வால்மீகி ராமாயணம் உத்தர காண்டத்தில், தேவர்களின் குருவான ப்ருஹஸ்பதியின் மகன், குஷத்வஜரை பற்றி குறிப்பிட்டிருக்கிறார் வால்மீகி. ஒரு நாள் குஷத்வஜர் வேதம் ஓதிக்கொண்டிருந்தபோது அந்த வேதமே ஒரு பெண் குழந்தையாக வடிவெடுத்து அவர் முன் வந்து நின்றது. அப்படி தோன்றிய அந்தக் குழந்தைக்கு ‘வேதவதி’ என்றே பெயர் சூட்டி மகிழ்ந்தார் குஷத்வஜர்.