

திருவாரூர் மாவட்டத்தில் அரிசிலாற்றங்கரையில் அமைந்துள்ள ஊர் திருமாகாளம். அம்பர் மாகாளம், கோயில் திருமாகாளம் போன்ற புராதனப் பெயர்களும் இத்தலத்திற்கு உண்டு.
அம்பன், அம்பாசுரன் என்ற இரு அசுரர்களும் சிவபெருமானிடம் வரம்பெற்றவர்கள். இவர்கள் இருவரும் பார்வதி தேவியைத் திருமணம் செய்ய விரும்பினர். இதை அறிந்த பார்வதி தேவி மகாகாளி அவதாரம் எடுத்து, மயிலாடுதுறை அருகே அம்பர் என்னுமிடத்தில் வதம் செய்தார். இதனால் அம்பிகைக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க, சிவபெருமானைப் பூஜித்து தோஷம் நீங்கப்பெற்றார். அதனால் இறைவன் மகாகாளநாதர் எனப்பட்டார்.
வடக்கே உஜ்ஜைனியில் அருளும் மகாகாளநாதர் போல், இங்கே மகாகாளநாதர் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக அருள்கிறார்.
அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான சோமாசிமாறர் இத்தலத்தில் தன் மனைவியுடன் வசித்துவந்தார். சிறந்த சிவபக்தரான இவருக்கு சோமயாகம் செய்யவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. யாகத்தின் அவிர்பாகத்தை திருவாரூர் தியாகராஜனாகிய சிவபெருமானே நேரில் வந்து பெறவேண்டும் என்ற பேரவா இருந்தது அவருக்கு.
சரி, இதற்காக சிவபெருமானை நேரில் வரச் சொன்னால் வருவாரா? எப்படி அவரை அழைப்பது? சிவபெருமானின் அணுக்கத் தொண்டரான சுந்தரமூர்த்தி சுவாமிகளின் நட்பைப் பெற்றால், அவர்மூலமாக இதற்கு ஒரு வழி பிறக்கும் என நினைத்தார். சுந்தரர் தீராத இருமலால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதை அறிந்து, தினமும் அவருக்கு தூதுவளை இலையைக் கொடுத்தனுப்பினார். இருமல் ஓரளவுக்கு குணமானதும், தினமும் தூதுவளை கொடுத்தனுப்பியது யார் என விசாரித்து, சோமாசிமாற நாயனாரைக் காண வந்தார் சுந்தரர்.
தன்னைக் காண வந்த சுந்தரரை உபசரித்து, தான் நடத்தும் யாகத்தின் அவிர்பாகத்தைப் பெற இறைவனை அழைத்துவர சுந்தரரிடம் விண்ணப்பம் வைத்தார் சோமாசிமாறர். சுந்தரரும்
அதற்கு இசைந்து ஈசனிடம் வேண்ட, இறைவனும் அதற்கு ஒத்துக்கொண்டார்.
“அப்படியே ஆகுக. வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் நடக்கும் யாகத்திற்கு வருவேன். என்னைக் கண்டறிந்து அவிர்பாகம் அளிக்கவேண்டியது நாயனாரின் கடமை,” என்றார் ஈசன்.
சிவபெருமானே வருவதாகச் சொன்ன தகவல் ஊரெங்கும் பரவியது. அதனால் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் முனிவர்கள், வேதவிற்பன்னர்கள், ஆன்றோர்கள் யாகத்திற்கு வந்தனர். யாகம் சிறப்பான முறையில் நடந்துகொண்டிருந்தது. அப்போது, நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாக மாற்றி, இறந்துபோன ஒரு கன்றினைச் சுமந்தபடி, வெட்டியான் வேடம் கொண்டு சிவபெருமான் வந்தார். தலையில் மதுக்குடத்தைச் சுமந்தபடி பார்வதிதேவியும், பிள்ளையாரும், முருகனும் சாதாரண மனித முகத்துடன் யாகத்திற்கு வந்தனர்.
இவர்களைக் கண்ட வேதவிற்பன்னர்களும் மற்றவர்களும் யாகத்தின் தூய்மை களங்கப்பட்டதாக எண்ணினர். அதனால் அங்கிருந்த கூட்டம் யாகசாலையிலிருந்து வெளியேற ஆரம்பித்தது. நாயனாரும் அவர் மனைவியும் என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பி நிற்க, குறிப்பால் வந்திருப்பவர் யார் என விநாயகப் பெருமான் உணர்த்தினார். மகிழ்ந்த சோமாசிமாற நாயனார், அவிர்பாகத்தை சிவபெருமானிடம் கொடுத்து வணங்கி நின்றார்.
கலைந்துசென்ற கூட்டம் திரும்பிவந்து நடப்பதை வியப்போடு பார்க்க, தியாகராஜரும் அம்பிகையும் நிஜ ரூபம் காட்டி, நாயனாருக்கும், அவர் மனைவிக்கும் அருள்புரிந்தனர். இந்த நிகழ்வு இப்போதும்கூட, வருடாவருடம் வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் வெகு விமரிசையான விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது திருவாரூர் தியாகராஜர் வெட்டியான் கோலத்தில், பதினேழு மூர்த்தங்களுடன் புறப்பட்டு வரும் அழகைக் காண இந்தப் பிறவி போதாது.
இத்தல இறைவி பயஅட்சயாம்பிகை, ராஜமாதங்கி, மதங்க மகரிஷி குழந்தை பாக்கியம் வேண்டி இத்தலத்தில் பிரார்த்தனை செய்தார். அவருக்கு “ராஜமாதங்கி” என்ற குழந்தை பிறந்தது. அன்னை பார்வதிதேவியே மகளாக வந்து பிறந்ததால், அன்புடன் போற்றி வளர்த்தார் மகரிஷி. குழந்தை வளர்ந்ததும், சிவபெருமான் தோன்ற வேண்டும் வரத்தைக் கேட்டதும், “நான் தங்களுடன் இத்தலத்தில் தினமும் திருமணக் கோலத்தில் இருக்க விரும்புகிறேன்,” என்று அன்னை வேண்டினார். எனவே இங்கே திருமணத் தடை உள்ளவர்கள் வேண்டிக்கொள்ள, சுப வாழ்க்கை அமைகிறது.
இத்தலத்தில் அருளும் விநாயகர் ஆதி மனிதமுகத்துடன் அருள்வது கூடுதல் சிறப்பு. சோமாசிமாறர் நடத்திய யாகத்திற்கு மனித முகத்துடன் வந்ததால், அப்படியே இங்கே தங்கிவிட்டார்.
சோமாசிமாற நாயனாருக்குக் காட்சிகொடுத்து அருளிய இறைவனே இத்தலத்தில் “காட்சிகொடுத்த நாதர்” என்று போற்றப்படுகிறார். யாகத்திற்கு அம்பிகை மதுக்குடத்துடன் வந்தார் அல்லவா. அன்னையின் தலையில் இருந்த குடத்திலிருந்து கள் பொங்கிய இடம் “பொங்கு சாராயநல்லூர்” (தற்போது கொங்கராய நல்லூர்) என்று அழைக்கப்படுகிறது.
இறைவன் சுமந்துவந்த பறை தானாக அடிபட்ட இடம் “அடியுக்க மங்கலம்” (தற்போது அடியக்கமங்கலம்) என்று அழைக்கப்படுகிறது. ஈசன் இறந்த கன்றை ஏந்திய இடம் “கடா மங்கலம்” என்று இன்றும் அழைக்கப்படுகிறது. சோமாசிமாற நாயனார் யாக குண்டம் அமைத்து யாகம் செய்த இடம் அம்பர் மாகாளத்திற்கும் அம்பர் பெருந்திருக்கோயிலுக்கும் இடையில் உள்ளது. அந்த இடத்தில் ஒரு மண்டபம் உள்ளது.
தற்போது அந்த இடம் “பண்டாரவாடை திருமாளம்” என்று அழைக்கப்படுகிறது. இன்றும் சோமயாகம் உற்சவம் இங்குதான் நடக்கிறது. யாகம் நடந்த இடத்தில் “ஐயம் தீர்த்த விநாயகர்” என்று தனி கோவில் இருப்பதையும் காணலாம்.
மாகாளம் என்ற பெயரில் சிவத்திருத்தலங்கள் இந்தியாவில் மூன்று இடங்களில் உள்ளன. வட இந்தியாவில் உள்ள உஜ்ஜயனி மகாகாளம், தொண்டைநாட்டுத் தலமான இரும்பை மாகாளம் மற்றும் அம்பர் மாகாளம் என்னும் இத்திருத்தலம்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here