
திருநெல்வேலி மாவட்டம் பண்பொழி எனும் ஊரில் திருமலை குமாரசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. மூலவர் குமாரசுவாமி. தீர்த்தம் பூஞ்சுனை தீர்த்தம். இங்குள்ள மூலவருக்கு 'மூக்கன்' என்ற ஒரு பெயரும் உண்டு. மலையேறி செல்லும் பொழுது விநாயகர் சன்னதிக்கு 16 படிக்கட்டுகள் உள்ளன. 16 படிக்கட்டுகளும் 16 செல்வங்களாக கருதப்படுகின்றன.
'திருமலை சேவகன்' என்பது திருமலை குமாரசுவாமி கோவிலில் உள்ள முருகப்பெருமானை குறிக்கும். இது 'திருமலை முருகன் பள்ளு' என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவில் பண்பொழியில் உள்ள ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது.
தேவார வைப்புத் தலமாகவும் கருதப்படும் இந்த முருகன் கோவில், தென்காசி மாவட்டம் செங்கோட்டையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், குற்றாலத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் பண்பொழியில் அமைந்துள்ளது.
இயற்கை சூழலும் சாரல் மழையும்:
மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டு மலையின் அடிவாரத்தில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது இக்கோவில். இங்குள்ள சாரல் மழையும், இயற்கையான சூழலும், முருகப்பெருமானின் தரிசனமும் நிச்சயம் மனதிற்கு ஒரு சிறப்பான அனுபவத்தைத் தரும்.
தென்காசி என்றாலே அருவிகள், அணைகள், கோவில்கள் என இயற்கை எழில் சூழ்ந்திருக்கும். சுற்றிலும் மரங்கள், உயர்ந்த மலைகள் என கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேல் என்று இருப்பதையும், மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து காற்றோடு வீசும் சாரல் மழையையும் நம்மால் ரசிக்காமல் இருக்க முடியாது.
திருமலை குமாரசாமியை தரிசிக்க 626 படிக்கட்டுகள் ஏறித்தான் செல்ல வேண்டும். படிக்கட்டுகளின் வழியாக மலை ஏறி செல்லும் பொழுது, இடும்பனுக்கும் தடுவட்ட விநாயகருக்கும் கோவில்கள் உள்ளன. மலை மீது வாகனங்களில் செல்வதற்கும் சாலை வசதி உள்ளது.
இத்தலத்தின் காவல் தெய்வமான தில்லைக் காளியம்மன், கோவிலின் வடக்கு பிரகாரத்தில், தனிக்கோவிலில், வடக்கு திசை நோக்கி எழுந்தருளி இருக்கிறாள். மலை உச்சியில் உள்ள கோவிலின் தீர்த்தத்தை 'அஷ்டபத்ம குளம்' என்று அழைக்கிறார்கள். இந்த குளத்திற்கு 'பூஞ்சுனை' என்ற பெயரும் உண்டு. தீர்த்தக் கரையில் சப்த கன்னியர்களின் திருமேனிகள் காணப்படுகின்றன.
தல வரலாறு:
ஒரு காலத்தில் திருமலைக் கோவிலில் ஒரு வேல் மட்டுமே இருந்ததாகவும் அங்கு பூவன்பட்டர் என்ற அர்ச்சகர் வேலுக்கு பூஜை, அபிஷேகம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஒரு நாள், பூஜையை முடித்துவிட்டு புளிய மரத்தடியில் ஓய்வுக்காக சிறிது நேரம் படுத்திருந்த போது, முருகப்பெருமான் கனவில் தோன்றி, "இந்த மலை எனக்கு சொந்தமானது. நான் இங்கிருந்து சற்று தொலைவில் உள்ள கோட்டைத் திரடு எனும் இடத்தில் சிலை வடிவில் இருக்கிறேன். அங்கு சென்று எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டி பார்த்தால் ஒரு சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும்," என்று அருளியதாகவும் அதனை பூவன் பட்டர் பந்தள நாட்டு அரசரிடம் தெரிவிக்க, அவர் சிலையை எடுத்து வந்து இங்கு பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது.
திருவிழாக்கள்:
இக்கோவிலில் சித்திரை முதல் தேதியில் படித் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். வைகாசி விசாகம், கந்த சஷ்டி, கார்த்திகையில் தெப்பம், தைப்பூசம் என விழாக்கள் விமர்சையாக கொண்டாடப்படுகின்றன.
கிழக்கு நோக்கிய கருவறையில் மூலவர் திருமலைக் குமரன் நான்கு திருக்கரங்களுடன் அருள் பாலிக்கிறார்.
துறவி சிவகாமி அம்மையார்:
இக்கோவிலில் திருப்பணி காலத்தில் கல் தூண்களையும் உத்தரங்களையும் மலையின் மீது இழுத்துச் செல்ல யானைகள் பயன்படுத்தப்பட்டன. பனைநார் கயிறு மூலம் உத்தரங்கள் மேலே இழுக்கப்படும். சில நேரங்களில் கட்டு அவிழ்ந்து தூண்கள் கீழே விழுவதுண்டு. அவற்றை, அப்பகுதியில் வசித்த துறவியான சிவகாமி அம்மையார் என்பவர் தன் உயிரை சிறிதும் பொருட்படுத்தாது "முருகா" எனக் கூறிக்கொண்டு, தன் தலையை கொடுத்து தடுத்து நிறுத்துவாராம். மறுபடியும் அந்த தூண்கள் மேலே இழுக்கப்படும் வரை தன் தலையால் தாங்கியபடி இருப்பாராம். இப்படி அற்புத சாதனையை நிகழ்த்தும் சக்தியை முருகப்பெருமான் அவருக்கு கொடுத்திருந்தார். அத்துடன் வாழை மட்டைகளில் செங்கல் ஏற்றிக்கொண்டு மலை உச்சிக்கு இழுத்துச் சென்றும் திருப்பணிகள் செய்துள்ளார். இவருக்கு கோவிலில் சிலை இருக்கிறது.
மலைப்பாதை:
திருமலை 500 அடி உயரம் உடையது. இதனை திரிகூடமலை என்றும் சொல்வார்கள். இரண்டு மலைகள் இந்த மலையினை தொட்டுக் கொண்டிருப்பது போல் தோன்றுவதால் திரிகூடமலை என பெயர் பெற்றது.
சப்த கன்னியர்:
மலை உச்சியில் உள்ள கோவிலின் தீர்த்தத்தை அஷ்டபத்ம குளம் என்றும் பூஞ்சுனை என்றும் அழைக்கின்றனர். இக்குளத்தில் குவளை எனும் மலர் தினம் ஒன்று பூத்ததாகவும், அதைக் கொண்டு கரையில் இருந்த சப்த கன்னிமார்கள் ஏழு பேரும் முருகனை பூஜித்ததாகவும் கூறப்படுகிறது. பொதுவாக சப்த கன்னியர்கள் சிலை சிவாலயங்களில் மட்டுமே காணப்படும். ஆனால் இந்த முருகன் தலத்தில் இங்குள்ள தீர்த்தக் கரையிலும் சப்த கன்னியர்கள் இருப்பது சிறப்பு.
கோவில் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.