மன்னன் நீலன், திருமங்கையாழ்வார் ஆன கதை!

Thirumangai Azhwar story
Thirumangai Azhwar story
Published on
deepam strip
deepam strip

ஒரு காலத்தில் நீலன் என்ற பெயரில் சிற்றரசனாகத் திகழ்ந்தவர் திருமங்கையாழ்வார் (Thirumangai Azhwar). அவரை, வைணவம் போற்றும் ஆழ்வாராக மாற்றிய பெருமை ஒரு பெண்ணையே சாரும். அந்த அற்புதம் நிகழக் களமாக அமைந்ததுதான் வெள்ளக்குளம் என்ற கிராமம்!

வானவீதியில் வந்துகொண்டிருந்த ஒரு கந்தர்வப் பெண், இந்த கிராமத்தில் உள்ள வெள்ளக்குளத்தில் நீராட விரும்பி இறங்கி வந்தாள். ஊரின் எழில் கண்டு மயங்கிய அவள் ஒரு மானிடப் பெண்ணாக இந்தப் பகுதியிலேயே தங்கிவிட்டாள். குமுதவல்லி என்று பெயரும் கொண்டாள்.

ஒருநாள் நீலனின் கண்வலையில் சிக்கிய குமுதவல்லி, உடனேயே அவனது மனசுக்குள்ளும் புகுந்து கொண்டாள். அந்தப் பெண்ணுக்காக தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் சமர்ப்பிக்கத் தயாரானான் நீலன். ஆனால் அவளோ, இவன் பெருமாள் பெருமையை உணர வேண்டும், போற்ற வேண்டும், பரப்ப வேண்டும்; அதற்கு தான் உற்ற துணையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டாள். ஆகவே அவனது காதலை தான் ஏற்க வேண்டுமானால், நீலன் ஒரு வைணவனாக மாற வேண்டும் என்றும் ஒவ்வொரு நாளும் ஆயிரம் வைணவ அடியார்களுக்கு உணவு படைத்திட வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடுத்தாள்.

இவற்றுக்கு உடன்பட்டு, மஹாவிஷ்ணுவை வணங்கும் அடியவனாக மாறினான் நீலன். தினமும் ஆயிரம் அடியார்களுக்கு அமுது செய்தான். விரைவில் கஜானா காலியானது. இனி பணத்துக்கு எங்கே போவது? அதனால் கொள்ளையடிக்கவும் துணிந்தான். காட்டுப் பகுதிக்குச் சென்று வழிப்பறியில் இறங்கினான்.

இதையும் படியுங்கள்:
திருக்குறுங்குடி கோயில் மர்மங்கள்: கண் சிமிட்டும் பெருமாளும், மூச்சு விடும் பைரவரும்!
Thirumangai Azhwar story

குறிப்பிட்ட நாளன்று அவனை முற்றிலுமாக ஆட்கொள்ள நினைத்த பெருமாள், பூர்ண மகரிஷியின் மகளான பூர்ணவல்லி என்ற திருமகளை மணந்துகொண்டு, மிகப் பெருஞ்செல்வமாக சீர் வகைகளைச் சுமந்தும், மதிப்பு வாய்ந்த ஆபரணங்களை அணிந்தபடியும் தம்பதி சமேதராக வந்துகொண்டிருந்தார். திருமண கோஷ்டியைப் பார்த்த நீலன் அவர்களை வழிமறித்தான். கத்தி காட்டி மிரட்டினான். அவர்கள் கொண்டுவந்திருந்த எல்லா நகைகளையும், பொருட்களையும் ஒரு மூட்டையாகக் கட்டினான். ஆனால் அதைத் தூக்க முயன்ற அவன் தடுமாறி விழுந்தான். விழுந்தவன் கண்களுக்கு மணமகன் காலில் அணிந்திருந்த மெட்டி தெரிந்தது. அதையும் கழற்றிக் கொடுக்குமாறு மிரட்டினான் நீலன். அவனே கழற்றிக்கொள்ளலாம் என்று திருமால் தெரிவிக்க, கீழே குனிந்து திருமாலின் பாதத்தை எடுத்துத் தன் மடிமீது வைத்துக்கொண்டு கழற்ற முயற்சித்தான்; இயலவில்லை. இறுதியாகத் தன் பற்களால் கடித்து இழுக்க முற்பட்டான். தன் உதடுகள் அந்தப் பாதத்தில் பட்ட அந்த விநாடியே பேரானந்த மின்னலால் தாக்கப்பட்டான்.

சுய உணர்வு பெற்று, அந்த மெட்டியை மட்டும் விட்டுவிட்டு, பிற நகை பொக்கிஷத்தை எடுத்துச் செல்ல முயன்றான். ஆனால், அந்த மூட்டையோ அசைந்தே கொடுக்கவில்லை. பரிதாபமாக திருமாலை ஏறிட்டுப் பார்த்தான். பளிச்சென்று முன் சங்கு சக்ரதாரியாக திருமால் தோன்றினார். அவ்வளவுதான், கரகரவென்று கண்கள் நீர் சொரிய, மளமளவென்று நாவும், உதடுகளும் பாசுரங்களை உதிர்த்தன.

இவ்வாறு ஒரு மங்கையால் உருவானவராதலால் இவர் திருமங்கை ஆழ்வார் ஆனார்!

இச்சம்பவத்துக்கு ஆதாரமான இந்த ஊர்க் கோயிலை வலம் வருவோமா?

கருவறையில் ஸ்ரீதேவி-பூமிதேவி சமேதராக அண்ணன் பெருமாள் கம்பீரமாக நின்றிருக்கிறார். இவர் ஏன் அண்ணன் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார்?

இதற்கும் திருமங்கையாழ்வாரே காரணம். அவர் ஒவ்வொரு திவ்ய தேசமாகச் சென்ற வகையில் திருப்பதி-திருமலைக்குச் சென்று ஸ்ரீநிவாசப் பெருமாளை உளமார தரிசித்தார். பிறகு வெள்ளக்குளம் வந்தபோது, அவருக்கு இந்தப் பெருமாள் வேங்கடவனைப் போலவே தோற்றமளித்திருக்கிறார். வேங்கடவனுக்கு அண்ணனோ என்று வியந்து இவரை அவ்வாறே அழைத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
பெருமாள் கோயில்களில் நவகிரக சன்னதி இல்லாதது ஏன்? பலருக்குத் தெரியாத ரகசியம்!
Thirumangai Azhwar story

இதனாலேயே அண்ணன் குடிகொண்டிருக்கும் கோயில் என்பதால் ‘அண்ணன் கோயில்‘ என்றே பிரபலமாகி உள்ளது. திருமலை – அலமேலுமங்காபுரம் போல அல்லாமல் இங்கே ஸ்ரீநிவாசப் பெருமாளும், அலர்மேல் மங்கைத் தாயாரும் அருகருகே தனித்தனி சந்நதிகளில் சேவை சாதிக்கிறார்கள்.

நீலனை திருமங்கையாழ்வாராக மாற்றிய குமுதவல்லித் தாயாருக்கும் தனி சந்நதி உள்ளது. பிள்ளைப் பேறளிக்கும் புனித தலம் இது. இங்கு வேண்டிக்கொண்டால் தடைகள் உடனே விலகி திருமணங்கள் எளிதாக நடந்தேறுகின்றன. ஆயுள் பலமும் அருளும் அற்புத தலம்.

சீர்காழியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த வெள்ளக்குளம் அண்ணன் கோவில்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com