

இருதயாலீஸ்வரர் கோவில் திருவள்ளூர் மாவட்டத்தில் திருநின்றவூரில் அமைந்துள்ள சிவன் கோவிலாகும். இந்த கோவில் சுமார் 1000 ஆண்டு முதல் 2000 ஆண்டுகள் வரை பழமையான கோவிலாகும்.
மூலவர் இருதயாலீஸ்வரர், தாயார் மரகதாம்பிகை இருவரும் அருள்பாலிக்கிறார்கள். இருதய நோய் உள்ளவர்கள் இங்கு திங்கட்கிழமை தோறும் வந்து வழிபட்டு பூரண குணம் அடைகிறார்கள். மேலும் பூசலார் நாயனார் வாழ்ந்த ஸ்தலமாகவும் உள்ளது. தலவிருட்சம் இலுப்பை மரம்.
சுவாமி கிழக்கு நோக்கியும் அம்பாள் தெற்கு நோக்கியும் அருள்புரிகிறார்கள். சுவாமி விமானம் கஜ பிரிட்ஷம் அமைப்பில் உள்ளது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பூசலார் நாயனார் சிறந்த சிவ பக்தர் ஆவார். அவர் தனது மனதிலேயே சிவனுக்கு ஆலயம் கட்டினார். திருநின்றவூரில் உள்ள சிவலிங்கம் கோவிலுக்கு மேற்கூரைகள் எதுவும் கிடையாது.
வெயிலிலும், மழையிலும் நனைந்து கொண்டு இருக்கும். இந்த சிவலிங்கத்தை பூசலார் நாயனர் தினசரி பூஜித்து வந்தார். தன்னிடம் பொருள் வசதி எதுவும் இல்லாததால் பல வருடங்களாக தனது மனதிலேயே சிவனை வைத்து ஆலயம் கட்டி வழிபட்டு வந்தார். அதே நேரத்தில் காஞ்சிபுரத்தில் ஒரு பல்லவ மன்னன் ஒரு பிரம்மாண்டமான சிவன் கோவிலை கட்டினார். இருவரும் ஒரே நேரத்தில் கோவிலை கட்டி முடித்தனர்.
ஒரே நாளில் இருவரும் கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்தனர். அன்று இரவு சிவன் மன்னனது கனவில் தோன்றி திருநின்றவூரில் பூசலார் நாயனார் என்பவர் எனக்கு கோவில் கட்டி உள்ளார். அந்த கும்பாபிஷேகத்திற்கு நான் செல்ல வேண்டும். எனவே நீ வேறு ஒரு நாளில் கும்பாபிஷேகத்தை வைத்துக் கொள் என்றார்.
மன்னனும் அதை ஏற்று திருநின்றவூர் சென்றான். அங்கே பலரிடமும் கோவில் எங்கு இருக்கிறது என்று கேட்டான். ஒருவருக்கும் கோவில் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை. உடனே பூசலார் நாயனாரை சென்று தேடிச் சென்றான்.
அவரிடம் சென்று மன்னன் விஷயத்தை கூறியதும் பூசலார் நாயனார் தன்னிடம் பொருள் வசதி ஏதும் இல்லை. எனவே சிவனுக்கு என் மனதிலேயே கோவில் கட்டினேன் என்றார். இதைக் கேட்ட மன்னன் ஆச்சரியமடைந்தான்.
இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து கொண்டான். பூசலார் நாயனாரின் விருப்பத்தை நிறைவேற்ற மன்னன் முடிவு செய்தான். அதோடு இல்லாமல் திருநின்றவூரில் சிவனுக்கு ஒரு பெரிய ஆலயத்தை கட்டிக் கொடுத்தார். அங்கு சிவனுக்கு பிரதிஷ்டை செய்து அதற்கு இருதயாலீஸ்வரர் என்ற நாமத்தையும் சூட்டினான். இந்தகோவிலில் சிவனின் மூலஸ்தானத்தில் பூசலார் நாயனார் சிலையும் உள்ளது சிறப்பானதாகும்.
இதய நோய் உள்ளவர்கள் திங்கள் கிழமை தோறும் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். அவர்களுக்கு இதய நோய் குணமாவதாக நம்பப்படுகிறது. தங்களது கோரிக்கை நிறைவேறியதும் மீண்டும் பக்தர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். நோயாளிகளைத் தவிர சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் உள்ள இருதய மருத்துவர்களும் இங்கு அதிக அளவில் வந்து தங்களிடம் வரும் நோயாளிகள் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்கின்றனர். எனவே இங்கு திங்கட்கிழமை தோறும் இருதய நோயாளிகளும் இருதய டாக்டர்களும் அதிக அளவில் கூடுகின்றனர்.
காலை 6 மணி முதல் 12 30 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 30 மணி வரை நடை திறந்து இருக்கும்.
மகா சிவராத்திரி, தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கார்த்திகை, பிரதோஷம், பங்குனி உத்தரம், வைகாசி விசாகம் போன்ற பண்டிகைகள் சிறப்பாக நடைபெறும். திங்கட்கிழமை விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
இந்தக் கோவிலில் உள்ள சுற்று பிரகாரங்களில் விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன், நடராஜர், நந்தி தேவர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. சிவன் பூசலார் அடியாரை நாயனார் என்ற பட்டம் வழங்கி தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.
பூசலார் நாயனார் தன் இதயத்தில் வைத்து சிவனை பூஜித்த காரணத்தால் இங்கே இதய நோயாளிகள் அதிக அளவில் வந்து வழிபட்டு செல்கின்றனர். அவர்களது இதய நோயும் விரைவில் குணமாகிறது.