

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவுக்கு உட்பட்டதுதான் சேஷபுரி என்கிற திருப்பாம்புரம் கிராமம். இங்கு தான் அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோவிலுள்ளது (Shiva temple). இது தென்காளஹஸ்தி என்று பெயர் பெற்று, ராகு கேது தலமாக அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் பாம்புரநாதர் தொன்மை வாய்ந்த லிங்கமாகும். அம்பாள் வண்டு சேர் குழலியாகவும் எழுந்தருளி உள்ளனர். கோவில் பார்ப்பதற்கு சிறியதாக இருப்பினும் சக்தி மிகப்பெரியது. இங்கு இறைவனின் திருமேனி மீது நாகங்கள் தோலுரித்து மாலையாக விட்டுச் செல்வது விசேஷம்.
கைலாயத்தில் ஒரு முறை விநாயகர் சிவபெருமானை வழிபடும்போது இறைவன் கழுத்தில் இருந்து பாம்பு, விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது.
அதனால் கோபம் அடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தையும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகை தாங்கும் ஆதிசேஷனும், ராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் நாக சக்தியை இழந்து அல்லல்பட்டன.
சாப விமோசனம் வேண்டி ஈசனை துதிக்க, இறைவனும் மனம் இறங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினர்.
அவ்வாறே ஆதி சேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் ஜாமத்தில் கும்பகோண நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரநாதரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாப விமோசனம் பெற்றனர்.
ஆதிசேஷன் உடைய மூல விக்கிரகமும் உற்சவ விக்கிரகமும் இந்த கோவிலில் உள்ளன. சர்ப்பங்கள் தாங்கள் பாவம் விமோசனம் பெறும் பொருட்டு ஆலமர விழுதை நாராக கிழித்து அகத்திப்பூ மாலை தொடுத்து இறைவனுக்கு சாற்றி சிவனருள் பெற்ற தலம் இது.
மூன்றாம் ஜாமத்தில் இங்கு இறைவனை பூஜை செய்த அந்த நாகங்கள் ஆதிசேஷத் தீர்த்தம் ஏற்படுத்தி அதில் நீராடிய பின்னர் இறைவனுக்கு அணிவிக்க புஷ்பங்கள் ஏதும் கிடைக்காததால் அகத்திப்பூவை எடுத்து ஆலம் விழுதில் தொடுத்து அந்த மாலையை அணிவித்து வழிபட்டு பாவ விமோசனம் அடைந்தன. அது முதல் இந்த ஊரில் எங்குமே அகத்தி மரம் பூப்பதில்லை. ஆலமர விழுதுகள் தரையை தொடுவதில்லை.
இந்த கோவிலின் ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் இருக்கிறது..
2002 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பௌர்ணமி அன்று பாம்பு ஒன்று அங்கே சுவாமியின் மீது திருமாலையாக தன் சட்டையை உறித்துச் சென்ற காட்சிதான் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. கோவில் பிரகாரத்தில் இந்த சட்டையை முழு நீளத்தோடு பிரேமிட்டு மாட்டி உள்ளனர். இந்த தலத்தில் பாம்புகள் யாரையும் ஒன்றும் செய்வதில்லை.
கிபி ஏழாம் நூற்றாண்டில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த தலம் குடந்தை, திருநாகேஸ்வரர், நாகூர், கீழ்பெரும்பள்ளம், காளஹஸ்தி ஆகிய ஐந்து தலங்களின் பெருமைகளை ஒருங்கே பெற்ற ஸ்தலமாகும்.
இந்த தலத்தில் ராஜ கணபதி சுப்ரமணியர் ஆதிசேஷன் அம்பாள் ராகு கேது சன்னிதிகள் தனித்தனியாக உள்ளன. இந்த தலத்தின் தல விருட்சம் வன்னி மரமாகும். மரத்தடியில் நாக சிற்பங்கள் உயிரோட்டமாய் இருக்கின்றன..
கால சர்ப்ப தோஷம், ராகு திசை, கேது திசை, களத்திர தோஷம் போன்ற தோஷங்கள் உள்ளவர்கள் இந்த தலத்திற்கு வந்து பரிகாரம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்
மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரில் இருந்து மேற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த திருப்பாம்புரம் கோவில்.