தற்போது மழலைப்பேறு வேண்டிக் காத்திருக்கும் தம்பதியர் பெருகி விட்டனர். அவர்கள் கவலையை போக்கி வீட்டில் குழந்தை தவழ வரம் தரும் ஆலயமாக அறியப்படுகிறது திருப்புல்லாணி - ஆதி ஜெகநாதப் பெருமாள் திருக்கோவில்.
ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ராமாயண வரலாறுடன் தொடர்பு உடைய ஸ்ரீ ஆதி ஜகந்நாத பெருமாள் கோவில் திருப்புல்லாணி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இது 108 திவ்ய தேச கோவில்களில் பிரசித்திபெற்ற ஒன்றாகும்.
விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோவிலுக்கு பெரும்பாலான பக்தர்கள் வருகை தந்து வழிபடுகிறார்கள். இந்த பழமையான கோயில் அதன் புனிதமான ஆன்மீகத் தன்மைக்காக மட்டுமல்லாமல் சுவாரஸ்யமான வரலாற்று பின்னணி மற்றும் அற்புதமான கட்டிடக்கலை சிறப்பிற்காகவும் நம்மை ஈர்க்கிறது.
சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோயிலுக்கு, பாண்டியர் ஆட்சி மற்றும் சேதுபதி மன்னர்களின் ஆட்சியின் போது பல்வேறு நன்கொடைகள் வழங்கப்பட்டதாக சான்றுகள் கூறுகிறது.
இது தற்போது தமிழ்நாடு அரசின் இந்து சமய மற்றும் அறநிலைய வாரியத்தால் பராமரிக்கப்படுகிறது.
திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் கட்டமைப்பு அழகு எளிதாக அங்கு செல்பவர்களை கவர்கிறது. கம்பீரமாக காட்சி தரும் 120 அடி கொண்ட 8 கோபுரநிலைகளும், தெளிவான நீர் நிரம்பிய சக்கர தீர்த்தம் என்று அழைக்கப்படும் கோயில் குளமும் இந்த கோவிலின் முக்கிய அம்சங்களாகும்.
தமிழ் இதிகாசமான கம்பராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்புடன் திருமங்கை ஆழ்வார் இந்த ஸ்ரீ ஆதி ஜெகந்நாதப் பெருமாள் கோவிலைப் பற்றியும் அதன் மகிமையைப் பற்றியும் தனது பாடல்களில் பாடியுள்ளதும் சிறப்பு.
இராமாயண காலத்தில் இராமபிரான் சீதாதேவியைத் தேடி தன் பரிவாரங்களுடன் இந்த இடத்திற்கு வந்தபோது, இரவு நேரமாகி விட்டதால், அங்கிருந்த புற்களைத் தலைக்கு அணையாக வைத்து ஓய்வு எடுத்ததால் அந்த இடம் புல்லணை என்று அழைக்கப்படுவதாக இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது. இருப்பினும் ஸ்ரீ ஆதி ஜெகந்நாத பெருமாள் கோவிலுக்குப் பின்னால் மேலும் பல புராணக்கதைகள் உள்ளன.
ராவணனை எதிர்த்துப் போராட இலங்கைக்குச் செல்லும் வழியில் சமுத்திர ராஜாவிடம், இலங்கைக்கு கடல் வழியாக செல்ல ஒரு வழி ஏற்படுத்த தர்ப்ப சயனம் என்று அழைக்கப்படும் புல்லில் படுத்துக் கொண்டு ராமர் பிரார்த்தனை செய்ததாக நம்பப்படுகிறது. ராமரின் வேண்டுதலை ஏற்ற சமுத்திர ராஜா கடலை நிதானமாகவும் தாழ்வாகவும் மாற்றிய பிறகு, இலங்கைக்கு ஒரு பாலம் கட்ட உதவியதாக வரலாறு உண்டு.
மற்றொரு புராணத்தின் படி, இந்த இடத்தில் உள்ள அரச மரத்தின் கீழ் ராமர் புல்ல மகரிஷியை சந்தித்ததாகவும் இலங்கைக்கு தனது பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு, ஸ்ரீ ஆதி ஜெகநாத பெருமாளிடம் ராமர் தனது பிரார்த்தனைகளை இந்த இடத்தில் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.
ஆதி ஜெகநாத பெருமாள், ராவணனைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட வில்லை ராமருக்கு வழங்கி அருள் புரிந்ததாகவும் வரலாறு.
குறிப்பாக ராமர் தந்தையான தசரத மன்னர் குழந்தை பேறு வேண்டி இங்கு யாகம் வளர்த்து பிரார்த்தனை செய்ததாக மற்றொரு புராணக்கதை உள்ளது. அவரது பிரார்த்தனைகளின் பலனாகவே அவருக்கு குழந்தைகள் பிறந்ததாக ஐதீகம்.
குழந்தை வரம் வேண்டி தசரதர் யாகம் வளர்த்த கோவில் என்பதால் 4 கி.மீ. தொலைவில் உள்ள சேதுக்கரையில் நீராடிவிட்டு வந்து திருப்புல்லாணி பெருமாளை வணங்கி அங்கு தரப்படும் பாயாசம் பிரசாதத்தை அருந்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது காலங்காலமாக இருந்துவரும் நம்பிக்கை.
இங்கு பிரதான தெய்வமாக தர்ப்ப சயன ராமர் அருள்கிறார். இறைவன் சாய்ந்த நிலையில் காட்சியளிப்பது இங்கு சிறப்பு. ஆதி ஜெகநாதரின் துணைவியார் பத்மாசினி, ஸ்ரீதேவி, பூதேவி, கிருஷ்ணர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகளும் உள்ளன. இந்த கோயிலில் உள்ள கிருஷ்ணரின் உருவம், பாம்பின் மீது நடனமாடுவதை சித்தரிக்கிறது.
மேலும் பட்டாபிஷேக இராமர் தனி சந்நிதியில் அழகாக எழுந்தருளியுள்ளது தனிச்சிறப்பு. அரசியலில் உயர் பதவிகள் வேண்டுபவர்கள் தரிசனம் செய்தால் நினைத்தது நடக்கும் என்றும் நம்பப்படுகிறது.
இங்கு சென்று வழிபட்டால் பிள்ளைச்செல்வம், பதவி வேண்டுவோரின் நேர்மையான வேண்டுதல் நிச்சயமாக நிறைவேறும்.