
ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களும் சிவபெருமானை வழிபட்ட தலம் திருமறைக்காடு. தற்போது வேதாரண்யம் என்று அழைக்கப்படும் திருமறைக்காட்டில் (மறை – வேதம், காடு – ஆரண்யம்) அருள்புரியும் மறைக்காட்டீசர் வேதாரண்யேஸ்வரரை நான்கு வேதங்களும் இடையறாது பூஜித்து வந்தன.
கலியுகத்தின் தொடக்கத்தில், இனியும் பூமியில் இருப்பது உசிதமல்ல என்று உணர்ந்த வேதங்கள், திருமறைக்காடு கோவிலின் முன்பக்கக் கதவைப் பூட்டிவிட்டுச் சென்றுவிடுகின்றன. அப்போது முதல் அந்த ஊர் மக்கள் பக்கவாட்டில் உள்ள சிறிய வாசல் வழியாகச் சென்று இறைவனை வணங்க ஆரம்பித்தனர். பல ஆண்டுகாலம் இந்த நிலையே தொடர்ந்தது.
ஒவ்வொரு ஊரிலும் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று தரிசித்து, பதிகங்களைப் பாடிவந்த திருநாவுக்கரசரும் (அப்பர்) திருஞானசம்பந்தரும் ஒருசேர திருமறைக்காடு வந்தடைந்தனர். கோவிலின் முன்பக்கக் கதவு மூடியிருக்கவே, மக்கள் அனைவரும் திட்டிவாசல் கதவு வழியாகக் கோவிலுக்குச் சென்று வருவதைக் கண்டு துணுக்குற்றனர். அங்கிருந்த சிவனடியார்களிடம் கோவிலின் பிரதான வாசல் கதவு மூடியிருப்பதன் காரணத்தைக் கேட்டறிந்தனர். வேதங்களைக் கற்றுத் தெளிந்த மறையோர்கள் பலர் முயன்றும் தாழிட்ட கதவுகளைத் திறக்க முடியவில்லை என்பதைத் தெரிந்து கொண்டனர்.
திருஞானசம்பந்தர் உடனே நாவுக்கரசரை நோக்கி,
“அப்பரே! வேதங்கள் ஆராதித்த வழியில்தான் நாம் கோவிலுக்குள் செல்ல வேண்டும். எனவே பூட்டியிருக்கும் கதவைத் திறக்க நீங்கள் பதிகம் பாடுங்கள்,” என்று அன்புடன் கேட்டுக் கொண்டார்.
“பண்ணின் நேர்மொழி யாளுமை பங்கரோ
மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே”
என்று பத்து பதிகங்களைப் பாடி முடித்தார் அப்பர்.
ஆனால் கதவு திறக்கவில்லை. நாவுக்கரசர் மிகவும் வருந்தினார். கலக்கத்துடன் பதினோராவது பதிகத்தைப் பாடியதும், ஆலயத்தின் மணிகள் தாமாகவே ஒலிக்க, கதவின் தாழ்ப்பாள் தானாகவே விலகி கதவு திறந்தது.
அங்கு கூடியிருந்தவர்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர். சம்பந்தர் மகிழ்வுடன் அப்பரை நோக்கினார்.
தொண்டர்களும், அடியார்களும் பின்தொடர, இருவரும் வேதாரண்யேஸ்வரரை பூஜித்து, பதிகங்கள் பாடி மனம் கசிந்தனர். வெளியே வந்ததும் நாவுக்கரசர் சம்பந்தரைப் பார்த்து,
“சம்பந்தரே! இந்தத் திருக்கதவு தினந்தோறும் திறக்கவும் அடைக்கவும் வேண்டும். இந்த நடைமுறை வழக்கத்தில் வரவேண்டும். எனவே கதவை மூட நீர் பதிகம் பாட வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார்.
உடனே சம்பந்தர்,
“சதுரம் மறைதான்
துதிசெய் துவணங்கும் மதுரம் பொழில்சூழ்
மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத்
தருள்செய்க எனக்குன்
கதவந் திருக்காப்புக்
கொள்ளுங் கருத்தாலே”
என்ற பதிகத்தைப் பாடியதும் கதவுகள் தானாகவே மூடிக்கொண்டு தாளிட்டுக் கொண்டன.
அனைவரும் மனம் நெகிழ்ந்து சிவனைத் துதித்து, சம்பந்தரைப் போற்றினர்.
“நான்கு வேதங்களும் சிவபெருமானால் உருவாக்கப்பட்டவை. சிறப்புமிக்க வேதங்கள் வழிபட்ட கதவைத் திறக்க நான் பதினோரு பாடல்களைப் பாட வேண்டியிருந்தது. ஆனால் கதவை அடைக்க உங்களின் ஒரு பாடலே போதுமானதாக உள்ளதே,” என்று நாவுக்கரசர் சம்பந்தரிடம் முறையிட்டு வருந்தினார்.
ஞானசம்பந்தர் விடுவாரா…
“அப்பரே! அப்படியல்ல. நீங்கள் நாவுக்கே அரசர் அல்லவா. தங்கள் பாடலைக் கேட்டுக்கொண்டே இருக்க இறைவன் விரும்பியதால்தான் உங்களை பதினோரு பதிகங்களைப் பாட அனுமதித்து ரசித்திருக்கிறார்.
ஆனால் நான் ஒரு பாடலைப் பாடியதுமே போதுமென்று நினைத்துவிட்டாரே மறைக்காட்டீசர்,” என்று கண்கலங்கினார் திருஞானசம்பந்தர்.
சம்பந்தர் கலங்கியதும் அப்பர் பொறுத்துக் கொள்வாரா?
“சம்பந்தரே! இறைவன் உங்கள் பாடலைக் கேட்க விரும்பியதால்தான், உங்கள் கண் நோகக் கூடாதென்று ஞானப்பால் கொடுக்கச் செய்து உங்களைப் பாட வைத்தார். நீங்கள் தாளம் போடும்போது கை நோகக் கூடாது என்று பொன் தாளம் அருளினார். உங்கள் கால் நோகக் கூடாதென்று முத்துச்சிவிகை தந்தார். இப்போது தங்கள் வாய் நோகக்கூடாது என்று நினைத்துவிட்டார். அதனால்தான் ஒரே பதிகத்தில் கதவைத் தாழிட வைத்துவிட்டார்,” என்று வாஞ்சையுடன் சொன்னதும், கூடியிருந்த அனைவரும் ஆரவாரம் செய்து இருவரையும் போற்றி வணங்கினார்கள்.
இந்த நிகழ்வு இத்தலத்தில் இன்றளவும் மாசி மாதத்தில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் ஏழாம் நாள் நிகழ்வில் கொண்டாடப்படுகிறது.