சிவப்பிரணமும் சக்தி பிரணவம் ஆகியவற்றின் சங்கமமாக உதித்த விநாயகர் பெருமான் கஜமுகாசுரனை அடக்கி பிரம்மபுத்திரிகளான கமலை, வல்லி ஆகியோரை மணந்தருளிய திருத்தலம், தம் தந்தையார் பெற்ற சாபத்தால் கருங்குருவியாக பிறந்த வியாழமுனிவரின் மகன் வலியன் கருங்குருவியாய் வந்து வழிபட்டு பேறு பெற்ற தலம், அகத்தியரும் அனுமனும் வந்து பூஜித்து போற்றிய மகிமை மிக்க திருத்தலம்... அதுவே திருவலிதாயம்.
சென்னையைச் சுற்றியுள்ள முக்கியமான சிவத்தலங்களான திருமயிலை, திருவான்மியூர், திருவேற்காடு, திருவிற்தக்கோலம், திருவாலங்காடு, திருவெண்பாக்கம் திருப்பாச்சூர், திருமுல்லைவாயில், திருவொற்றியூர், போன்ற அமைய பெற்ற கோயில்களின் நடுவில் திருவலிதாயம் அமைந்துள்ளது .
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இந்த ஆலயத்தில் மூன்று நிலை கோபுரம் அமைந்துள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் பரத்வாஜ தீர்த்தம் ஆகும். கோபுரத்தை ஒட்டிய கிழக்கு பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நவகிரக சன்னதியும் கோபுரத்தின் அருகே குருபகவான் தனி கோயிலையும் காணலாம்.
கோவிலின் உள்ளே இறைவன், திருவலிதாய நாதர் திருவல்லீஸ்வரப் பெருமான் ஆகிய நாமங்களுடன் லிங்க சொரூபமாக காட்சி தருகிறார். அன்னையின் திருநாமம் தாயம்மை, ஜகதாம்பிகை என பல பெயர்களில் வழங்கப்படுகிறது.
இந்த ஆலயம் குருபகவானின் பரிகார தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனெனில் இங்கு குரு பகவான் வந்து தங்கி இருந்து சிவபெருமானை வழிபட்டு பேரு பெற்றுள்ளார். பகவான் எனப்படும் குரு தன்னுடைய சகோதரரின் மனைவி மேனகையின் சாபத்தால் பெரும்பாதிப்பை சந்தித்தார். அதிலிருந்து விடுபட வழி தெரியாமல் தவித்த அவர், சிவபெருமானை நினைத்து வழிபட்டார். இதையடுத்து குரு பகவானின் முன்பாக தோன்றிய சிவபெருமான், "நீ திருவலிதாயம் திருத்தலம் சென்று என்னை நினைத்து தவம் செய். உனக்கான பலன் கிடைக்கும்," என்றார். அதன்படியே திருத்தலம் வந்த குருபகவான், இங்கேயே நெடுங்காலம் தங்கி இருந்து சிவனை நினைத்து தவம் செய்து தன்னுடைய சாபம் நீங்க பெற்றார். குருபகவான் சிவ பூஜை செய்து வழிபட்ட திருத்தலம் என்பதால் இது குரு பரிகாரத்தலமாக விளங்குகிறது.
இங்குள்ள குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி முல்லை பூவை கொண்டு அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து வந்தால் சகல விதமான தோஷங்களும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த திருத்தலத்தில் அருளும் குரு பகவானுக்கு வியாழக்கிழமை அன்று காலை மற்றும் மாலை வேளைகளிலும் குரு பெயர்ச்சி காலத்தின் போதும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகிறது. இதில் கலந்துகொண்டு குருபகவானை வணங்கினால் தோஷங்கள் அனைத்தும் நீங்கி நற்பலன்களை அடையலாம்.
(ஆலயங்கள் அற்புதங்கள் என்ற நூலில் இருந்து...)