நெல்லை மாவட்டத்தின் மிக முக்கிய அடையாளமாகவும், பெண்களுக்கான தலைசிறந்த கல்வி நிலையமாகவும் திகழும் சாரா டக்கர் பள்ளி மற்றும் கல்லூரி எதற்காக அமைக்கப்பட்டது என்று பார்க்கலாம் . கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் படித்த பள்ளி, கல்லூரி தான் இந்த எஸ்டிசி STC - அதாவது சாரா டக்கர் கல்லூரி (Sarah Tucker College).
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்த 18-ம் நூற்றாண்டு. அந்தக் காலக்கட்டத்தில், பிரிட்டன் பெண்மணியான சாரா டக்கர் என்பவரின் அண்ணன் ஜான் டக்கர், திருநெல்வேலியில் சர்ச் மிஷனரி சொசைட்டியில் (church missionary society CMS) மருத்துவப் பணியை செய்து வந்தார். அந்த சமயத்தில், ஜான் டக்கர் திருநெல்வேலியில் தான் சந்திக்கின்ற சில சுவாரஸ்யமான சம்பவங்களை பற்றி பிரிட்டனில் இருக்கும் தனது தங்கை சாரா டக்கருக்கு அவ்வப்போது கடிதமாக எழுதுவார். ஏனென்றால், அந்தப் பெண் சாரா டக்கர் ஒரு மாற்றுத்திறனாளி. 2 கால்களும் போலியோ பாதித்த பெண்.
வீட்டுக்குள்ளேயே தான் இருப்பார். அதனால் அவருக்கு பொழுது போக வேண்டும் என்பதற்காகவும், இந்தியா என்ற ஒரு நாட்டை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தனது தங்கைக்கு ஜான் டக்கர் கடிதம் எழுதுவதை வழக்கமாக வைத்திருந்தார். தன் அண்ணன் எழுதிய கடிதங்கள் வாயிலாக இந்தியாவில் பெண்கள் கல்வி அறிவு இல்லாமல் இருப்பதை அறிந்து வேதனை அடைந்தார் சாரா. அதே வேளையில் நெல்லையில் CMS ல் இருந்த தனது தோழிகள் மூலமாக நெல்லையில் பெண்களுக்கு கல்வி அவசியம் என்பதை அறிந்து கொண்டார்.
கடிதங்களை படித்த சாரா டக்கருக்கு ரொம்ப வேதனையானது. 'என்னடா இது. நம்மளே கால் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி. நாமளே இவ்வளவு படிச்சிருக்கோம். சிந்தனையாளராக இருக்கிறோம். ஆனால், இந்தப் பெண்கள் எந்த படிப்பறிவும் இல்லாமல், இருக்கிறார்களே' என்று வருந்தினார் சாரா டக்கர்.
காரணம் இங்கிலாந்து வேல்ஸ் பகுதியில் அப்போது ஆண்களும் பெண்களும் சமம். பெண்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்ற அமைப்பில் இணைந்து போராடி வந்தார் சாரா. சாரா இயற்கையாகவே எழுத்தாற்றல் மிக்கவர். அதனால் பெண்கள் கல்விகாக என்று பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி நிதி திரட்டி 20 பவுன் நகையை சேகரித்தார்.
உடனே தன்னிடமிருந்த 20 பவுன் நகையை ஜான் டக்கருக்கு அனுப்பி வைத்து, "அண்ணா, எனக்காக தயவுசெய்து நெல்லையில் பெண்களுக்காக ஒரு பள்ளியையும், கல்லூரியையும் தொடங்கு " என்று சொல்கிறார். தங்கையின் பேச்சை தட்டாத ஜான் டக்கரும், சாரா டக்கர் பெயரிலேயே ஒரு பள்ளியை பெண்களுக்காக நெல்லையில் மூதலூர் எனும் கிராமத்தில் 1843 ம் ஆண்டு நிறுவினார்.
சாரா இங்கிலாந்திலிருந்து டீச்சர் டிரெய்னிங் புத்தகங்களை அனுப்பி வைத்தார். ஆரம்பத்தில் படிக்க வரத் தயங்கிய பெண்கள் பின்னர் படிக்க வரத் தொடங்கினர். அப்போது பெரும்பாலும் பிரிட்டிஷ் பெண்கள் தான் ஆசிரியையாக இருந்தனர். அதனால் டீச்சர் டிரெய்னிங் பள்ளியும் தொடங்கப்பட்டது. 13 வருடங்கள் எப்படி எப்படியோ பணத்தை திரட்டி நடத்தி விட்டார்கள். ஆனால், அதற்கு பிறகு அவர்களால் அதை நடத்த முடியவில்லை. ஸ்கூலையும், இழுத்து மூடிவிட்டார்கள்.
இதை அறிந்த சாரா டக்கரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இறுதி வரை திருமணம் செய்யாமலேயே, இங்குள்ள பெண்களை நம்மால் இன்னும் படிக்க வைக்க முடியலையே என்ற வருத்தத்திலேயே மனம் நொந்து படுத்த படுக்கையாகி 1857 ம் ஆண்டு டிசம்பர் 17 ம் தேதி காலமானார்.
சாராவின் இந்த மரணத்தை அருகில் இருந்து பார்த்த அவரது தோழிகளான சோஃபியா, மரியா, ஜோன்வா ஆகியோரால் அவரது இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படியாவது சாராவின் ஆசையை நிறைவேற்றிவிட வேண்டும் என்று எண்ணிய அவர்கள், லண்டனில் இரவு பகலாக சுற்றி பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு 811 பவுன் தங்கத்தை சேர்த்து சாராவின் அண்ணன் ஜான் டக்கருக்கு அனுப்பி வைத்தார்கள். எங்கள் தோழி சாரா டக்கரின் ஒரே ஆசை நிராசையாக மாறிவிடக் கூடாது. மீண்டும் சாரா டக்கர் பள்ளியையும், கல்லூரியையும் ஆரம்பியுங்கள். அங்கிருக்கும் ஏழை பெண்களை படிக்க வையுங்கள் என்றார்கள்.
அதன் படி 1895 ம் ஆண்டு பாளையங்கோட்டையில், சாரா டக்கர் எனும் பெயரில், தென் இந்தியாவின் முதல் பெண்கள் கல்லூரி தொடங்கப்பட்டது .
இதற்கு முழுக்காரணம் இங்கிலாந்து நாட்டில் வெல்ஸ் பகுதியில் 1825 ம் ஆண்டு பிறந்த சாரா டக்கர் எனும் மாற்று திறனாளி பெண். இதன் பின்னர் தான் நெல்லையில் பல கல்லூரிகள் தொடங்கப்பட்டு பாளையங்கோட்டை தென் இந்தியாவின் ஆக்ஸ்போர்டு ஆனது.
இன்றைக்கு வரைக்கும் மூன்று தலைமுறை பெண்களுக்கு, கல்வி செல்வத்தை கொடுத்திருக்கிறது சாராள் டக்கர் பள்ளியும், சாரா டக்கர் கல்லூரியும். ஆனால், சாரா டக்கர் ஒரு முறை கூட இந்தியாவுக்கு வந்ததே இல்லை. திருநெல்வேலியை அவர் பார்த்ததே இல்லை. பாளையங்கோட்டை எப்படி இருக்கும் என்று கூட அவருக்கு தெரியாது. இந்திய பெண்கள் எப்படி இருப்பார்கள் என்பதும் தெரியாது. அவர் நினைத்திருந்தால், தனது அண்ணன் எழுதிய கடிதத்தை படித்து சிரித்துவிட்டு கடந்திருக்க முடியும். ஆனால் ஏதோ ஒரு தேசத்தில் பிறந்து வளர்ந்த பெண்கள், கல்வியறிவு இல்லாமல் இருக்கிறார்களே.. அவர்களின் வாழ்க்கையை எப்படியாவது முன்னேற்றிவிட வேண்டும் என்று கனவு கண்டாரே சாரா டக்கர். அவர் தான் நிஜமான தேவதை.