
1. சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் தியாகராஜ சுவாமி கோயிலில் 27 நட்சத்திரங்கள் இங்கு சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு. அந்த 27 நட்சத்திரங்களும் லிங்க வடிவில் உள்ளன. நந்தி தேவருக்காக சிவபெருமான் பத்ம தாண்டவம் ஆடிய தலம். இங்கு நந்திக்கு தனியே நந்தீஸ்வரர் கோயில் உள்ளது. நந்தி மனித உருவில் காட்சியளிக்கிறார். மணற்பரப்பிலேயே நடந்து செல்லும்படி கோயில் பிரகார நடைபாதை அமைந்திருப்பது இங்கு மட்டுமே.
2. சிவாலயங்களில் பொதுவாக ஒரு அம்மன் சன்னதி இருக்கும் நிலையில், சிதம்பரத்திலிருந்து 20 கி.மீ தொலைவில் திருக்கூடலையாற்றிலுள்ள நர்த்தவல்லவலேஸ்வரர் ஆலயத்தில் ஞானசக்தி மற்றும் பராசக்தி என இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. ஞானசக்தி சன்னதியில் குங்குமம் மற்றும் பராசக்தி சன்னதியில் விபூதி பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்த அம்மன்களை வழிபடுவதன் மூலம் கல்வி அறிவு மற்றும் ஆற்றல் பெருகும் என்பது நம்பிக்கை. மறதி பிரச்சினை உள்ளவர்கள் இங்கு வந்து வழிபட நல்ல பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
3. சென்னை திரிசூலம் திரிசூலநாதர் கோயிலில் நரசிம்மரின் உக்ரம் தணிக்க வந்த சரபேஸ்வரர் இங்கு அழகாக ஒரு தூணில் காட்சியளிக்கிறார். சரபேஸ்வரருக்கு 'சரபம்' என்ற பறவையின் இறக்கை இருக்கும்.
ஆனால் இங்கு சரபேஸ்வரர் இறக்கை இல்லாமல் இரண்டு முகங்கள், இரு கைகளில் மான் மழு ஏந்தி, மற்ற இரு கைகளால் நரசிம்மரை பிடித்த வண்ணம் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் சரபேஸ்வரரை காண்பதும் வெகு அபூர்வம். யம பயம் போக்கும் சரபேஸ்வரரை நெய் தீபம் ஏற்றி வழிபடுகின்றனர்.
4. தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் பல பெயர்களில் அய்யனார் அருள்பாலித்து வருகிறார். இவற்றுள் ஆதி முதல் சைவ வழிமுறைகளை கடைபிடித்து வரும் ஒரே கோயில் என்ற சிறப்பை பெற்றது ராஜபாளையம் அருகில் உள்ள சேத்தூர் ஆதிபுத்திரங் கொண்ட அய்யனார் கோவில் தான்.
5. பெரம்பலூரில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில், 23 கி.மீ. தொலைவில் உள்ள வெங்கனூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது பழமலைநாதர் கோயில். இங்கு எங்கு திரும்பினாலும் "கிளிகள்" வடிவங்கள் காணப்படுகின்றன. இது வேறு எங்கும் இல்லாதது. எனவே, இந்த கோயிலை "கிளி கோயில்" என்கிறார்கள். இங்குள்ள கிளிகள் பெரும்பாலும் தலையில்லாமல் இருப்பது ஆச்சரியமானது.
6. செங்கோட்டை செல்லும் வழியிலுள்ள ஊர் புளியங்குளம், இங்குள்ள பாண்டிய ராஜா கோயிலில், சிவன், நாராயணனோடு பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பேர் மற்றும் கெளரவர்கள் நூறு பேருக்கும் சிலைகள் உள்ளன. வழிபாடும் நடக்கிறது. இது இங்கு மட்டுமே உள்ள தனிச்சிறப்பு.
7. திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் குடி கொண்டுள்ள அன்னை கமலாம்பிகை உலக உயிர்களையெல்லாம் மேன்மையடையும் பொருட்டு ஒரு கால் மீது மற்றொரு காலை போட்டு குட்டிகாசனத்தில் தவம் இருக்கிறார். இந்த கோலத்தை உலகில் வேறெங்கும் காண இயலாது. இதே கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அன்னை நீலோத்பலாம்பிகை தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவரது திருக்கரத்தில் கருங்குவளை மலரினை ஏந்தியவாறு நின்றவண்ணம் காட்சியளிக்கிறார். இவர் அருகில் இவ்வன்னையின் தோழி முருகனை தன் தோளில் சுமந்து நிற்க, அம்பிகையின் இடது திருக்கரம் முருகனின் சுட்டுவிரலைப்பற்றிய வண்ணம் காணப்படுகிறது. இது வேறெங்கும் காணமுடியாத சிறப்பாகும்.
8. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு செங்கோட்டு வேலவரின் கோயில் சன்னதி அருகில் அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளது . இந்த கோவிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மற்றும் செங்கோட்டு வேலவர் யோக வல்ல சித்தர்களால் உருவாக்கப்பட்ட வெண் பாசனத்தால் ஆனதாக கூறப்படுகிறது. இதனால் தான் அர்த்தநாரீஸ்வரர் அபிஷேகத்துக்கு பால், இளநீர் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் வெண்ணிறமான காட்சி தருகிறார். இவரின் காலடியில் நீர் ஊற்று ஒன்றும் உள்ளது. அதன் மத்தியில் ஒரு பேழையில் மரகத லிங்கமும் உள்ளது. பக்கத்தில் ஒரு மண்டபத்தில் உள்ள கற்சுவரில் 9 துவாரங்கள் உள்ளது. ஆண்டில் மூன்று நாட்கள் சூரியனின் கதிர்கள் இதன் வழியே அர்த்தநாரீஸ்வரர் மீது விழுகிறது இது இங்கு மட்டுமே உள்ள சிறப்பு.
9. பொதுவாக சிவபெருமான் தன் தலையில் கங்கையை சூடியிருப்பது வழக்கம். ஆனால், தஞ்சையின் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் திருவையாறு செல்லும் வழித்தடத்தில் அமைந்துள்ள கோடியம்மன் கோவிலில் மட்டுமே அம்மன் தன் தலையில் சிவபெருமானையே சூடியிருப்பது சிறப்பாகும். எனவே, இக்கோயிலில் அம்மனுக்குரிய சிங்க வாகனத்திற்கு பதிலாக நந்தி வாகனம் அமைக்கப்பட்டுள்ளது.
10. கும்பகோணத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும், சுவாமிமலையிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது திருப்புள்ள பூதங்குடி வல்வில் ராமர் கோயில். எல்லா ராமர் கோயில்களிலும் ராமர் நின்ற கோலத்தில் காட்சி தருவார். ஆனால், இந்த வல்வில் ராமர் கோயிலில் சங்கு சக்கரம் மற்றும் நான்கு கரங்களுடன் ராமர் சயன கோலத்தில் காட்சி தருகிறார். இவர் கிழக்கு திசை நோக்கி புஜங்க சயன கோலத்தில் சோபன விமானத்தின் கீழ் சயனித்தவாறு பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். இப்படி ராமர் வேறு எங்கும் இல்லை.