
திருக்கார்த்திகை திருநாளென்பது தீபங்களை ஏற்றி இல்லத்திலும், உள்ளத்திலும் ஒளி பெற இறைவனை வணங்கும் ஓர் ஒப்பற்ற தீப ஒளி திருநாளாகும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தை சிறப்பாக கருதி, திருகார்த்திகை என பெயரிட்டு, வீடுகளிலும், கோயில்களிலும், விளக்கேற்றி சிறப்புடன் கொண்டாடி வருகின்றனர்.
வயல்களிலும், கோயில்களிலும், பனை மற்றும் தென்னை ஓலை கொண்டு சொக்கப்பனை உருவாக்கி, அதனை அக்கினிக்கு இரையாக்கி ஒளிரும் பிழம்பை ஈசனாக நினைத்து வணங்கி வருகின்றனர். கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் இக்கார்த்திகை தீப விழா மூன்று விதமாக வெவ்வேறு நாட்களிலும் அனுசரிக்கப்படுகிறது.
1 குமாராலய தீபம்: கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தை முருகனுக்கு உரியதாக கருதி அந்நாளில் முருகன் ஆலயங்களில் தீபமேற்றி வழிபடுகின்றனர். இது குமாராலய தீபம் ஆகும்.
2 விஷ்ணுவாலய தீபம்: கார்த்திகை மாதத்தில் வரும் ரோகிணி நட்சத்திரம் கிருஷ்ணருக்கு உரியதாகும். இந்நாளில் பெருமாள் ஆலயங்களில் தீபமேற்றி கொண்டாடுவதை விஷ்ணு வாலய தீபம் என்று அழைக்கிறார்கள்.
3 சர்வாலய தீபம்: கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று வீடுகளிலும், ஆலயங்களிலும் விளக்கேற்றி கொண்டாடுவதற்கு சர்வாலய தீபம் என்று பெயர்.
இதிகாச வரலாறு: இந்து சமய தொன்ம படி பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகியோர் முறையே படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலை செய்வதாக நம்பப்படுகிறது. அதில் படைத்தல் தொழில் செய்யும் பிரம்மனுக்கும், காத்தல் தொழில் செய்யும் விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற யுத்தம் தொடங்கியது. அதற்கு பதில் தேடி இருவரும் சிவனிடம் சென்றனர்.
இவர்களின் வாதத்தை கேட்ட ஈசன் பிரமாண்ட சோதி வடிவெடுத்தார். தன்னுடைய அடியையும், முடியையும் யார் கண்டு வருகிறார்களோ அவர்களே பெரியவர் என்று சொல்ல இருவரும் களத்தில் இறங்கினார். ஈசனின் அடி தேடி திருமால் வராக உருவெடுத்து மண்ணிற்குள் செல்ல, பிரம்மன் அன்ன பறவையாகி முடியைத் தேடி பறந்தார். எவ்வளவு அடியில் சென்றும் பாதத்தை காணாத திருமால் தனது தோல்வியை ஒத்துக்கொண்டு சரணடைந்தார்.
ஆனால் மேலே சென்ற பிரம்மனுக்கு தோல்வியை ஒப்புக்கொள்ள மனம் வரவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தபோது ஈசனின் முடியிலிருந்து தாமரை மலரொன்று வீழ்ந்து கிடந்தது. அதை கண்ட பிரம்மன் மலரை எடுத்துக் கொண்டு ஈசனிடம் வந்தார். தான் முடியை கண்டுவிட்டதாகவும், அதற்கு இம்மலரே சாட்சி எனவும் வாதிட்டார்.
இதனால் கோபமடைந்த சிவன் தாமரை மலரை இனி நான் பூஜைக்கு ஏற்பதில்லை எனவும், பிரம்மனுக்கு பூமியில் ஆலயம் இருக்காது எனவும், சாபமிட்டார். தனது தவறை உணர்ந்து பிரம்மன் மன்னிப்பு கோரினார். பிரம்மனும், விஷ்ணுவும் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு ஈசனே பெரியவர் என்று வணங்கினர்.
தங்களுக்கு காட்சி அளித்த அதே சோதி வடிவில் மக்களுக்கும் காட்சி அளிக்க வேண்டும். என்று வரம் கேட்க ஈசனும் வரமளித்தார். அந்த வரத்தின்படி திருகார்த்திகை திருநாளில் திருவண்ணாமலையில் ஈசன் சோதி வடிவாய் எழுந்து இன்றும் அருள் புரிகிறார் என்பது இந்து மக்களின் நம்பிக்கை ஆகும். இதுவே திரு கார்த்திகை ஜோதியின் வரலாறு.
பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து கார்த்திகை விரதம் இருப்பவர்களுக்கு வேண்டியது கிட்டும் என்பது ஐதீகமாகும். இத்தகைய சிறப்புடைய இந்நன்னாளில், நான் என்ற ஆணவத்தை அழித்து முழுமையாக இறைவனிடம் நம்மை சமர்பித்து, தீபமேற்றி, சோதி வடிவான இறைவனின் அருள் பெறுவோம்.