

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவூர் என்னும் கிராமத்தில் ஸ்ரீ சிங்காண்டீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. திருவூர் கிராமம் சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் வழியில் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புராண காலத்தில் ரிஷ்ய சிங்கீஸ்வரம் என அழைக்கப்பட்ட இக்கோவில் பிற்காலத்தில் திருவூர் என மருவியதாகவும் கூறப்படுகிறது.
தல சிறப்புகள்:
தசரத மன்னருக்கு புத்திர காமேஷ்டி யாகம் செய்த ரிஷ்ய சிருங்கர் என்னும் முனிவர் பூஜித்ததால் இத்தலத்திற்கு புராண காலத்தில் 'ரிஷ்ய சிங்கீஸ்வரம்' என்று பெயர். ரிஷ்ய சிருங்க முனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம் உள்ள மிகவும் பழமையான கோவில் இது. சோழர்களால் கட்டப்பட்ட கோவில். ஸ்ரீ சிங்காண்டீஸ்வரர் என்பது ஈசனின் திருநாமம். உத்பலாம்பிகா என்பது அம்பிகையின் பெயர்.
கிழக்கு நோக்கிய கோவில் மூன்று நிலை ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. விஜயநகர மன்னர்களின் சின்னத்துடன் கல்வெட்டு பலகைகளும் கோவில் கோபுரத்திற்கு அருகில் காணப்படுகின்றன. ராஜகோபுரம் விஜயநகர காலத்தில் கட்டப்பட்டது.
கஜப்ருஷ்ட விமானம், கோஷ்டத்தில் விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அர்த்த மண்டபத்தில் ராமேஸ்வரர், திருநாகேஸ்வரர், ஜம்புகேஸ்வரர் (திருவானைக்காவல்) மற்றும் ரிஷ்ய சிங்காதேஸ்வரர் ஆகியோர் தூணின் நான்கு பக்கங்களிலும் காணப்படுகின்றனர்.
வெளிப்பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனாவுடன் முருகன், சந்திரன், சூரியன், சிங்கார பைரவர், சப்த கன்னிகள், நாகர் மற்றும் வள்ளலார் போன்ற சிலைகள் உள்ளன. இங்கு நவகிரகங்கள் சன்னதி இல்லை. காரணம் ராஜகோபுரத்தின் உச்சியில் அஷ்டதிக் பாலகர்கள் இருப்பதால் நவகிரங்களுக்கு என்று தனி சன்னதி கட்டப்படவில்லை என்று சொல்கின்றனர்.
சோழர் மற்றும் பாண்டியர் கால கல்வெட்டுகள்:
புராதானமான இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டு பின்பு பாண்டியர்களாலும் புதுப்பிக்கப்பட்டது. இங்கு சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மிகவும் பழமையான இக்கோவிலில் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் முதல் சோழ மன்னர் விஜய கண்ட கோபாலன் வரை மொத்தம் 12 கல்வெட்டுகள் கோயிலுக்குள் இருக்கின்றன.
ஓம்காரேஸ்வரர்:
ஈசான மூலையில் உள்ள திருமந்திர மண்டபத்தில் ஓம்காரேஸ்வரர் சன்னிதி அமைந்துள்ளது. சுமார் 2000 வருடங்கள் பழமையானதாக கருதப்படும் இந்த லிங்கத் திருமேனியின் ஆவுடையார், ஆலயத்தின் தெற்கே உள்ள கூவம் நதியில் சுமார் 20 அடி ஆழத்தில் கிடைக்கப்பெற்றது. ஆவுடையாருக்கு பொருத்தமான பாணம் ராமஜென்ம பூமியான அயோத்தியிலிருந்து சென்னை பக்தை ஒருவரால் வழங்கப்பெற்றது. நமசிவாய எனும் மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இந்த லிங்கத்திற்கு பக்தர்கள் தங்கள் கைகளால் பாலாலும், தண்ணீராலும் அபிஷேகம் செய்யலாம்.
பிரார்த்தனைகள்:
திருமண பாக்கியம், புத்திரப்பேறு வேண்டி பிரதோஷ தினங்களில் பக்தர்கள் கலச நீர் ஏந்தி சிவபுராணம் பாடி, கோவிலை வலம் வந்து நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் செய்வது இந்த ஆலயத்தினுடைய தனி சிறப்பாகும்.
இங்கு துலாபார காணிக்கை செலுத்தும் வழிபாடும் உள்ளது.
எப்படி செல்வது?
கோவில் அதிகாலை 5:30 மணி முதல் 12 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
சென்னை பூந்தமல்லி-திருவள்ளூர் பேருந்து மார்க்கத்தில் அரண்வாயில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கோவிலுக்கு செல்லலாம்.