.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
‘ஓம்’ ($AUM$, $Om$) என்ற ஒலி இந்த பிரபஞ்சத்தின் முதல் மந்திரமாகும். ‘ஓம்’ என்பது ஒரு மந்திரம் மட்டுமல்ல; அது பிரபஞ்சத்தின் முதல் அதிர்வாகும். பிரபஞ்சத்தின் புனிதமான ஒலி, பிரம்மாவின் முதல் ஓசை, எல்லாவற்றின் சாராம்சமுமாகும். இது 'அ' (விழிப்பு நிலை), 'உ' (கனவு நிலை), 'ம்' (ஆழ்ந்த உறக்க நிலை) ஆகிய மூன்று ஒலிகள் சேர்ந்து உருவாகும் ஒரு படைப்பு. இது படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தத்துவங்களையும் குறிக்கிறது. ஆக, உலக இயக்கத்தைக் குறிப்பது ‘ஓம்' என்ற மந்திரம்.
அதனால்தான் இது பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரின் சக்தியை ஒருங்கே தருகிறது. அதுமட்டுமின்றி, ஓம் என்ற ஒலி பிரபஞ்சத்தின் தொடக்கம், நிலைநிறுத்தல் மற்றும் முடிவின் ஒலியாகக் கருதப்படுகிறது. ஓம் எனும் ஒலியை உச்சரிக்கும் போது நம்முடைய மூளையின் அதிர்வுகள் சீராகி, மனம் அமைதியடைகிறது.
தியானம் தொடங்கும் முன் ‘ஓம்’ என்று மூன்று முறை சொல்வது நம் உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் ஒரே அதிர்வில் இணைக்கிறது. இது கடவுளின் மூச்சு என்றும், பிரபஞ்சத்தின் இதயத் துடிப்பாகவும் கருதப்படுகிறது. நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு அதிர்வு உண்டு; ஆனால் ‘ஓம்’ என்ற ஒலி அனைத்திற்கும் மூல அதிர்வாகும்.
அதனால்தான் உலகெங்கிலும் உள்ள பல்வேறு மதங்களிலும் ‘ஓம்’ போன்ற ஒலிகள் காணப்படுகின்றன. ஓம் (Om), ஆமென் (Amen), ஆமீன் (Amin), ஹூம் (Hum) - இவை அனைத்தும் ஒரே சக்தியின் வெவ்வேறு வடிவங்களே. நாசா (NASA) விஞ்ஞானிகள், பிரபஞ்சம் உருவான தருணத்தில் ஒரு பேரொலி எழுந்ததாகவும், அது இன்றும் பிரபஞ்சமெங்கும் எதிரொலிப்பதாகவும் கூறுகின்றனர். அந்தப் பேரொலிதான் ‘ஓம்’ என்கிறார்கள்.
அதாவது, ‘ஓம்’ என்பது பிரபஞ்சத்தின் உயிர்த்துடிப்பு. தினமும் காலை, மதியம் மற்றும் மாலை என மூன்று வேளைகளிலும் ‘ஓம்’ என்று உச்சரித்துப் பாருங்கள்; அப்போது நீங்கள் உணரும் அமைதியை விவரிக்க வார்த்தைகள் போதாது.
ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் பெருமானே, ஓம் சிவாயநம என்று சொல்லும் போது அந்தந்த தெய்வங்களிடம் என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள் தெரிந்தும் தெரியாமலும் நாம் வேண்டுகிறோம். காலம் கனிந்து வரும்போது, இந்த மந்திரத்தைச் சொன்னதற்கான பலன் உறுதியாகக் கிடைக்கும்.
வாய்விட்டு ஜெபிக்காமல் மனத்திற்குள் ‘ஓம்’, ‘ஓம்’, என்று ஜபிக்க வேண்டும் இல்லாவிட்டால் ஓ...ம் என நீட்டியும் மனதால் ஜபிக்கலாம். கிழக்கு பார்க்க அமர்ந்து கண்களை மூடி ஜபிப்பது நன்று. ஜபிக்க ஆரம்பித்தவுடன் பலன் கிடைத்துவிடாது; குறைந்தது ஒரு லட்சம் முறை உரு ஏற்றிய (உச்சரித்த) பின்னரே பலன் கிடைக்க ஆரம்பிக்கும். ஒரு லட்சம் முறை ஜபித்த பிறகு, உங்கள் உடலில் மின்சக்தியும் காந்த சக்தியும் ஏற்படுவதை நீங்கள் நன்றாக உணர முடியும்.
எனவே தான், எல்லா மந்திரங்களையும் ‘ஓம்’ என்று துவங்குகின்றனர். பிரணவம் என்பதற்கு ‘என்றும் புதியது' என்று பொருள். ஆம்...கடவுள் என்றும் நிலையானவர் என்பதால் ‘என்றும் நிலையான கடவுளான முருகனை, சிவனை, கிருஷ்ணனை வணங்குகிறேன்’ என்று அவரவர் இஷ்ட தெய்வத்தை ‘ஓம்’ என்று கூறி பிரார்த்திப்பர்.
ஓம் என்ற இந்த ஒலி கடவுளின் மூச்சாகும்.
மொத்தத்தில் ஓம் என்பது பிரபஞ்சத்தின் ஒலி, இறைவனின் வெளிப்பாடு, மற்றும் மனிதனின் விழிப்புணர்வு நிலைகளின் சாராம்சம் ஆகும், இது மன அமைதிக்கும் ஆன்மிக வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.
நாம் சாதாரணமாக காதுகளை நம் கைகளால் மூடி எடுத்தால் போதும் ‘ஓம்’ என்ற ஒலியை நாம் கேட்க முடியும்.