

திரிபுரா மாநிலத்தில் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் ஏழு நாள் கர்ச்சி பூஜை, திரிபுரி மக்களின் 14 குலதெய்வங்களைப் போற்றும் முக்கிய திருவிழா. சதுர்தசா கோவிலில் உள்ள சிவன், விஷ்ணு, துர்கை உள்ளிட்ட தெய்வங்களின் தலைகள் கருவறையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு புனித நதியில் நீராட்டப் படுகின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்த விழா பக்தி, சடங்கு, சமூக ஒற்றுமையை வலியுறுத்துகிறது.
இந்த ஆஷாட அல்லது ஆடி மாதத்தில் நம் மாநிலத்தை பொறுத்தவரையில் அம்மனுக்கு திருவிழா நடத்துவோம். தீ மிதிப்போம். கூழ் ஊற்றுவோம். ஆனால், திரிபுரா மாநிலத்தில் இந்த ஆடி மாதத்தில் ஏழு நாட்களுக்கு வித்தியாசமான ஒரு விழாவை கொண்டாடுகிறார்கள். இப்பதிவில் விரிவாக அதை பற்றி பார்க்கலாம்.
திரிபுரா மாநிலத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில், திரிபுரி மக்களின் 14 குலதெய்வங்களைப் போற்றும் வகையில் கர்ச்சி பூஜை கொண்டாடப்படுகிறது. ஏழு நாட்களுக்கு நடைபெறும் இந்தத் திருவிழா, பக்தி, சடங்குகள் மற்றும் சமூக உணர்வின் ஒரு உயிரோட்டமான வெளிப்பாடாக திகழ்கிறது.
இந்த விழா ஆஷாட மாதத்தில் வரும் சுக்ல பட்ச அஷ்டமி நாளில் தொடங்குகிறது. அதாவது இது பொதுவாக ஜூலை மாதத்தில் நடைபெறும். இந்த ஆண்டு, இந்த மாதம் அதாவது ஜுலை 22ஆம் தேதி அன்று இந்த விழா துவங்கப்பட்டது.
இந்த விழாவில், பழைய அகர்தலா அருகே உள்ள சதுர்தசா கோவிலில் உள்ள 14 தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. இந்த 14 தெய்வங்களும் சதுர்தசா தேவதைகள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா, துர்கா, லட்சுமி, சரஸ்வதி, கார்த்திகேயன், கணேசன், பூமி, கங்கை, அக்னி, காமன், ஹிமவான் மற்றும் வருணன் ஆவார்கள்.
ஆண்டுக்கு ஒருமுறை, இந்த பதினான்கு தெய்வங்களின் தலைகளை அவற்றின் கருவறையிலிருந்து வெளியே கொண்டுவருகிறார்கள். பின்னர் அவற்றை ஒரு புனித நதியில் நீராட்டப்பட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக நிற்கும் வீதிகளின் வழியாக மீண்டும் கொண்டு வரப்படுகின்றன.
திரிபுரி மன்னர்களின் காலத்திலிருந்தே செய்யப்பட்டு வரும் இந்த சடங்கில், முழு உடல்களோ, விரிவான சிலைகளோ இல்லை மாறாக பூக்களாலும் குங்குமத்தாலும் அலங்கரிக்கப்பட்ட தலைகள் மட்டுமே உள்ளன.
இந்த “கர்ச்சி” என்ற சொல்லானது “க்யா” என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டதாக கருதப் படுகிறது. மேலும், “கர்” என்றால் “பூமி” மற்றும் “'பாவம்” என்றும் “சி” என்றால் “சுத்தம்” என்றும் பொருள்படும். இவை இரண்டும் இணைந்தால் கர்ச்சி என்ற சொல் உண்டாகிறது.
அதாவது பூமியையும் பாவத்தையும் சுத்தம் செய்வதாக பொருள். எனவே, இது பூமியைச் சடங்கு ரீதியாகச் சுத்தம் செய்யும் ஒரு திருவிழாவாகும். மேலும் இது பழங்குடியினத் தோற்றத்தை கொண்டது. இருந்த போதிலும், இதை பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாத சமூகத்தினர் என அனைவருமே கொண்டாடுகிறார்கள்.
திருவிழாவின் பின்னணியில் உள்ள புராணம்:
இந்த விழாவின் பின்னணியில் உள்ள புராணக் கதையின்படி, பூமித் தாய் அல்லது தாய் தெய்வம் இந்த குறிப்பிட்ட சமயத்தில் மாதவிடாய் அடைந்ததாகவும் மேலும் அந்த நாட்களானது 'ஆமா பேச்சி' அல்லது 'அம்பு பாச்சி' என்று அழைக்கப்படுவதாகம் கருதப் படுகிறது. தாய் தெய்வத்தின் மாதவிடாய் காலத்தில் பூமி அசுத்தமாகக் கருதப்படுவதால், இந்த நாட்களில் மண் உழப்படுவதில்லை. அவரது மாதவிடாய் முடிந்த பிறகு, பூமியைச் சடங்கு ரீதியாகத் தூய்மைப்படுத்தும் விதமாக இந்த 'கர்ச்சி பூஜை' நடத்தப்படுகிறது.
இந்த விழாவில் பக்தர்கள் தெய்வங்களுக்குப் பிரார்த்தனைகள், மலர்கள் மற்றும் பாரம்பரிய உணவு களைச் சமர்ப்பிக்கிறார்கள். வழிபாட்டின் ஒரு பகுதியாக, சடங்கு ரீதியாக விலங்குகளை பலி கொடுக்கிறார்கள். இந்தக் கொண்டாட்டத்தின்போது, பாரம்பரிய இசை, நடனம் மற்றும் சமூக விருந்துகள் உள்ளிட்ட பலவிதமான கலாச்சார நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. ஆக மொத்தத்தில் இந்த விழாவின் ஏழு நாட்களுமே மகிழ்ச்சி மற்றும் பக்தி நிறைந்த சூழலை உருவாக்குகின்றன.
இந்த ஆழமானத் தொகுப்பின் வாயிலாக இந்திய நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரம் மற்றும் திரிபுரா மாநிலத்தின் தனித்துவமான வழிபாட்டு முறைகளைப் புரிந்துகொண்டு, நமது ஆன்மீக அறிவை மேலும் விசாலமாக்கிக் கொள்ளலாம்.