

திருச்சியில் ரயிலை விட்டு இறங்கும்போதே மணி பதினொன்று. காலை தரிசனம் பார்க்காமல் வாயில் பச்சைத் தண்ணி ஊற்றுவதில்லை என்று விரதமெடுத்திருந்தான் விக்னேஷ்.
வயலூர் முருகனைப் பார்த்து, அரக்கப் பரக்கப் பறந்து சமயபுரம் போய் மாரியம்மனை வணங்கிவிட்டு, வழியில் ‘கால்டாக்ஸி’ டிரைவருக்கும் சேர்த்தே ‘லஞ்ச்’ வாங்கிக் கொடுத்து (ஏதோ பெரிய சாதனை பண்ணின நினைப்பில்) மலைக்கோட்டை ‘உச்சிப் பிள்ளையாரை’ தரிசிக்க ஓடினான்.
டிரைவர் மனிதாபிமானமுள்ளவர். நல்ல ஹோட்டலில் லஞ்சுக்கு வண்டியை நிறுத்தினார். ‘லஞ்ச்’ உபயத்திற்குப் பிரதி உபகாரமாக உச்சிப்பிள்ளையார் கோயில் வாசலில் வண்டி நிறுத்தி இறக்கிவிட்டார். உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது.
விக்னேஷிற்குக் கொஞ்சம் வாய்க் ‘கொலஸ்டிரால்’ அதிகம். ’சபரிமலையே ஏறினவன். உச்சிப்பிள்ளையார் மலை (Ucchi Pillayar story) என்ன பெரிசா?!’ மனம் கொழுப்பில் குதிக்க, விறுவிறுவென ஏறினான். பத்துப் படி கூட ஏறி இருக்க மாட்டான், மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. வேர்த்து ஊத்தியது!
காலில் ஆணி வேறு, ‘விண்! விண்’!ணென்று வலிக்க, முக்கித் தக்கி ஏறுகையில் முன் தள்ளியிருந்த குறைக்க முடியாத தொப்பை குறைவது கண்ணில் கால்விரல்கள் தென்படத் தெரிந்தது!!. 'நல்லதுதானே? தொப்பை குறைந்தால்…?!’ நினைத்துக் கொண்டு நடையைக் கட்டினான்.
கால்வாசி ஏறியிருக்க மாட்டான். மனசு அல்லாடியது நடக்க மாட்டாமல். சின்னஞ்சிறு பெண்கள், வாலிபர்கள் என எல்லாரும் மலைக் கோட்டை பகவானைப் பார்க்க குதித்தபடி கும்மாளமிட்டு ஏற, வயது வேறு வாட்டியது.
ஏதோ ஒரு கடைக்காரன் பூட்டிய தன் கடைவாசலில் வெள்ளை நிற பிளாஸ்டிக் சேரை விட்டுப் போயிருக்க, உட்கார்ந்தான் ஆசு வாசப் படுத்திக் கொள்ள! இறங்கிப் போயிடலாமா? சே! இறங்கணும்னாலும் இத்தனை படியும் இறங்கணுமே?!
மனசுக்குள் ஒரு கேள்வி... "பிள்ளையாரப்பா.. உனக்காகத்தானே இந்த உடம்பை வைத்துக் கொண்டு, இந்தக் காலை வைத்துக் கொண்டு மலைஏறி வந்திருக்கேன்?!.”
அழாக்குறையாய்க் கேட்க, மலைக் கோட்டைப் படியில்... (சித்தராய்த்தான் இருக்கணும்) யாருக்கோ கேட்க ‘காளமேகப்புலவர் பாட்டை உரக்கவே பாடினார்!’ அது விக்னேஷ் காதுகளில் விழுந்தது.
“அப்பன் இரந்து உண்ணி
ஆத்தா மலைநீலி! ஒப்பரிய
மாமன் உரிதிருடி –
சப்பைக்கால் அண்ணன்
பெருவயிற்றான்….!”
"ஸ்டாப் பீளீஸ்!" என்று நிறுத்தச் சொல்லி, யோசித்தான்... "ஆயிரம் வரங்கள் கேட்க மலையேறி வந்ததுக்கே மலைச்சுபோய் ஒப்பாரி வக்கிறயே.. கை ஏந்தற உனக்கே இத்தனை வலிக்குதே…? உன்னை மாதிரி ஓரயிரம் பேருக்குக் கேட்டதெல்லாம் குடுக்க தினம் தினம் தானும் தன் சப்பைக் காலையும் தொப்பை வயிறையும் இழுத்துட்டு மலை ஏறுற வினாயகரை ஒரு கணம் நினைத்துப் பார்…! கேட்க வர்றவன் பெருசா..? கொடுக்கறவன் பெருசான்னு?!" என்றது மனம்.
எட்டிப் பார்க்கையில் சித்தர் யாருமில்லை... ஆனால் இன்னும் சில அடிகளில் தரிசனம் என்பது புலப்பட விக்னேஷுக்கு வலி வந்த இடம் தெரியாமல் பறந்தது!