
காசி, காஞ்சி, மதுரா, துவாரகை, உஜ்ஜைன், ஹரித்வார், அயோத்யா என்பவை இந்தியாவில் ஏழு புண்ணிய நகரங்கள் என்கிறது கருட புராணம். அந்த புண்ணிய நகரமான காஞ்சிபுரத்தில் உள்ள இந்த 11 கோவில்களை உலக பாரம்பரிய சின்னங்களாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. வேறு எந்த மாவட்டத்திற்கும் கிடைக்காத பெருமை இது.
கைலாச நாதர் கோவில்: முழுக்க முழுக்க சுண்ணாம்புக் கல் மற்றும் கருங்கற்களால் காட்டப்பட்ட கோவில். 'தென் திசை கைலாயம் ' என்று அழைக்கப்படும் இந்த கோவிலை பல்லவ மன்னன் ராஜசிம்மன் கட்டினான். 10 அடி உயர லிங்கம் மற்றும் 8 கை சிவன் மற்றும் அழகிய சிற்பங்கள் இக்கோவிலுக்கு பெருமை சேர்க்கின்றன. கோவில் உட்பிரகாரத்தில் வலம் வருவதற்கான நுழைவு வாயில் குகையை போன்ற அமைப்பில் தரையோடு தரையாக ஒட்டியுள்ளது ஆச்சரியமானது.
பிறவாதீஸ்வரர் ஆலயம்: காஞ்சி நகரின் முதல் கோவில். இதுவும் இராஜசிம்ம பல்லவர் கட்டியது தான்.
இரண்டு அடுக்கு விமானத்தை உடைய இக்கோவிலின் கருவறை எண் கோணவடிவில் உள்ளது இதன் சிறப்பு. சிவராத்திரி அன்று மட்டும் திறக்கப்படும் கோவில்.
இரவாதனேஸ்வரர் கோவில்: பல்லவ மன்னன் நரசிம்மவர்மனால் கிபி 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. யானை ஈசனை வணங்கிய தலம். கோவில் கருவறை சுவர்களில் கலைநயமிக்க சிற்பங்கள் உள்ளன. சிறிய நுழைவு வாயில் கொண்ட விமானம் இல்லாத கோவில்.
வைகுண்ட பெருமாள் கோவில்: காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலிருந்து 18 கிமீ தொலைவில் உள்ள. இந்தக் கோயிலின் தனித்துவம் , செங்குத்தாக மூன்று அடுக்குகளில் உள்ள கருவறை ஆகும். பெரும்பாலான கோயில்களில் உள்ள ஒரே சந்நதி போல் இல்லாமல், இந்தக் கோயிலில் மூன்று சந்நதிகள் ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்துள்ளன. இங்குள்ள சிங்க வடிவ தூண்களின் வரிசை பார்ப்பவர்களை கவர்ந்திழுக்கிறது.
முக்தீஸ்வரர் கோவில்: பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் கட்டிய கோவில் சதுர வடிவிலான மூன்று நிலைகள் கொண்ட விமானமும், வட்ட வடிவ கருவறையும் இதன் சிறப்பு. மணற்கற்களால் கட்டப்பட்ட கோவில்.
வரதராஜ பெருமாள் கோவில்: 1053ம் ஆண்டு சோழர்களால் கட்டப்பட்டு பின்னர் பாண்டியர், சேரர், பல்லவர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டது. இக்கோவில் சிற்பங்கள் பார்ப்போரை வியக்க வைக்கும். குறிப்பாக ஒற்றை கல்லில் செதுக்கப்பட்டு ஆடிக் கொண்டிருக்கும் சங்கிலி.
ஏகாம்பரேஸ்வரர் கோவில்: பஞ்சபூத தலங்களில் ஒன்றான இந்த கோவிலை இரண்டாம் நரசிம்மவர்மன் கட்டினார். இக்கோவில் கோபுரத்தை கட்டியவர் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர். இங்க காணப்படும் மற்றொரு அற்புதம் 3500களுக்கும் மேற்பட்ட பழமையான மாமரம். இந்தக் கோவிலில் 1008 சிறிய சிவலிங்களுடன் உள்ள பெரிய சிவலிங்கம் ஒன்று காண்பவரை வியக்க வைக்கிறது. மேலும் பல்வேறு வடிவங்களில் சிவலிங்கங்கள் கோவிலைச் சுற்றிலும் வைக்கப்பட்டுள்ளன.
ஜூரவாதிஸ்வரர் கோவில்: 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான கோவில். இக்கோவில் கோபுர விமானத்தில் நான்கு புறமும் ஜன்னல்கள் உள்ளன. காய்ச்சல் , ஜூரம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடும் போது இந்த கோபுர ஜன்னல் வழியே வருகிற காற்று மற்றும் வெளிச்சம் பக்தர்களின் நோய் தீர்ப்பதாக ஐதீகம். இந்த கோவில் கருவறையில் கருங்கல்லான ஜன்னல் உள்ளது.
பாண்டவ தூதப் பெருமாள் கோவில்: காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருப்பாடகம் . இங்கு 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த திருக்கோவில் திராவிட பாணி கோயில் பல்லவர்களால் கட்டப்பட்டது, 4 அடுக்கு ராஜகோபுரம், கொண்டுள்ளது.
இந்தக்கோவிலில் மூலவராக வீற்றிருக்கும் பாண்டவ தூதப் பெருமாள் என்ற கிருஷ்ணர் 25 அடி உயர்த்தில், அமர்ந்த நிலையில் மூலஸ்தானத்தில் காட்சி தருவது இந்த தலத்தில் மட்டுமே. இது வேறு எங்கும் காண முடியாத சிறப்பான அம்சமாகும்.
யதோத்தகாரி பெருமாள் கோயில் : சின்ன காஞ்சிபுரத்தில் ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் கோயில். ஆண்டாளுக்கு இங்கு தனி சந்நிதியுள்ளது. அவர் நின்ற திருக்கோலத்தில் சுமார் 6 அடி உயரத்தில் சிலையாக உள்ளார் சிற்பக் கலை அம்சம் உள்ள இது. பார்க்க வேண்டிய ஒன்றாகும். பொதுவாக திருமால் எழுந்தருளியுள்ள தலங்களில் சயன திருக்கோலமானது இடமிருந்து வலமாக அமைந்திருக்கும். ஆனால் இங்கு மட்டும் யதோத்தகாரிப்பெருமாள் வலமிருந்து இடமாகச் சயனித்துள்ளார் என்பது சிறப்பாகும்.
உலகளந்த பெருமாள் கோயில்: 108 ‘திவ்ய தேசங்களில்’ ஒன்றாக கருதப்படும் இந்த கோயில் இந்தோ-திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. பிரமாண்டமான மண்டபங்களும், சிற்பங்களும் ஒன்றுகூடி உங்களை வரவேற்கும். உலகளந்த பெருமாளின் உருவம் 35 அடி (11 மீ) உயரத்திற்கு மேல் உள்ளது, இடது காலை உடலுக்கு செங்கோணமாகவும் தரையில் இணையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது . இது காமாக்ஷி அம்மன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது .