

கலியுக வரதனான வடபழனி ஆண்டவர் திருக்கோவில் சென்னையில் உள்ள வடபழனியில் அமைந்துள்ளது. திருமணத்தடை விலகவும், குழந்தைப்பேறு பெறவும் இத்தலத்து முருகனை வழிபடுகின்றனர். இவரை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும், வியாபாரம் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை. தென்பழனிக்கு செல்ல முடியாதவர்கள் வடபழனிக்கு வந்து தங்கள் குறைகளை சொல்லியும், நேர்த்தி கடன்களை நிறைவேற்றியும் செல்கின்றனர்.
மூலவர்: வடபழனி ஆண்டவர், வள்ளி, தெய்வானை அம்மன் சன்னதிகள்
தல விருட்சம்: அத்திமரம்
தீர்த்தம்: குகபுஷ்கரணி
1. தல சிறப்பு
இத்தலத்தில் பாத ரட்சையுடன் (காலணிகள்) முருகன் அருள்பாலிப்பது தனி சிறப்பாகும். செவ்வாய்க்கென்று அங்காரகன் சன்னதி இத்தலத்தில் தனி சன்னதியாக இருப்பது கூடுதல் சிறப்பாகும். பழனிக்கு செல்ல முடியாத பக்தர்கள் இத்தலத்து ஆண்டவரை வழிபடுகின்றனர். முருகப்பெருமான் தாமரை பீடத்தின் மீது இருப்பது போன்றும், வலது பாதத்தை முன் வைத்திருப்பது போன்றும் அமைந்துள்ளது. இங்கு தினமும் தங்கத்தேர் இழுக்கப்படுகிறது. ராஜகோபுரம் 72 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சாதுக்கள் பிரதிஷ்டை செய்த தலமாதலால் இத்தலத்து இறைவனை வணங்குவது மிகவும் சிறப்பு.
இக்கோவிலில் பல தெய்வங்களுக்கு தனி சன்னதிகள் உள்ளன. வரசித்தி விநாயகர், சொக்கநாதர், மீனாட்சி அம்மன், காளி, பைரவர், மகாலட்சுமி, வள்ளி தேவசேனா சமேத சண்முகர் சந்நிதிகளும் உள்ளன. இக்கோவிலின் முன்புற ராஜ கோபுரத்தில், கந்தபுராண காட்சிகள் வண்ணமயமாக விளக்கப்பட்டுள்ளன.
2. நேர்த்திக்கடன்
இங்கு முக்கியமான நேர்த்திக்கடன் முடி காணிக்கையாகும். அத்துடன் வேல் காணிக்கையும் செலுத்தப்படுகிறது.
3. தல புராணம்
1890 ஆம் ஆண்டு எளிய ஓலைகூரை கொட்டகையுடன் இக்கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலின் தலபுராணத்தில் முருக பக்தரான அண்ணாசாமி நாயக்கர் என்பவர் முதலில் இருந்த கொட்டகையை அவரின் சொந்த வழிபாட்டிற்காக அமைத்தார் என்றும், அங்கு தென்பழனி முருகனின் வண்ணப் படத்தை வைத்து வழிபட்டார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
4. பாவாடம்
அவர் ஒரு சமயம் தீவிர வயிற்று வலியால் அவதிப்பட, அந்நோய் தீருவதற்கு அவர் தவறாமல் திருத்தணி மற்றும் திருப்போரூர் சென்று முருகப் பெருமானை வழிபட்டு வந்தார். பின்பு தென்பழனி யாத்திரையின் போது ஒரு சாது சொல்லியதற்கு இணங்க தான் தங்கி இருந்த கொட்டகையில் பழனி முருகனின் உருவப்படத்தை வைத்து வழிபட ஆரம்பித்தார். தன்னுடைய நாக்கை அறுத்து முருகனுக்கு காணிக்கை செலுத்தினார். இதற்கு 'பாவாடம்' என்று பெயர். பாவாடம் காணிக்கையால் அவருடைய வயிற்று வலி நீங்கியது. அண்ணாசாமி தம்பிரானுக்கு தனி சன்னதி, கோவிலில் நுழையும் பொழுதே வலப்புறத்தில் உள்ளது.
5. சித்தர்கள் சமாதி
அவருக்குப் பின் அவருடைய சீடரான ரத்தினசாமி செட்டியார் என்பவரால் 1865 ஆம் ஆண்டு தென்பழனியில் உள்ளது போல சிலை செய்து கோவில் கட்டப்பட்டது. இவரும் அண்ணாசாமி தம்பிரான் போல 'பாவாடம்' தரித்து, குறி சொல்லும் ஆற்றலைப் பெற்றார். ரத்தினசாமி தம்பிரானின் சீடரான பாக்கியலிங்கத் தம்பிரான் காலத்தில் கர்ப்பக்கிரகம், உட்பிரகாரம் மற்றும் கருங்கல் மண்டபம் போன்றவை கட்டப்பட்டன. இந்த மூன்று தம்பிரான்களின் சமாதியும் நெற்குன்றம் போகும் வழியில் அமைந்துள்ளது. இந்த மூன்று சித்தர்களுக்கும் ஆலயம் அமைக்கப்பட்டு பௌர்ணமி பூஜை மற்றும் குருபூஜை போன்றவை சிறப்பாக நடைபெறுகிறது.
6. திருவிழாக்கள்
இங்கு தமிழ் மாதம் 12டிலும் விழாக்கள் நடைபெறுகின்றன. வைகாசி விசாகத் திருவிழா 11 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா சூரசம்காரத்துடன் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. 6 நாட்களும் முருகப்பெருமானுக்கு லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
கோவில் காலை 5 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.