

மூன்று வடிவங்களில் சிவன் அருளும் தலம் ; மாணிக்கவாசகர் கைப்பட எழுதிய ஓலைச்சுவடி, எழுத்தாணி உள்ள திருத்தலம் – எங்கே?
ஆதிகயிலாயம், அனாதி மூர்த்தித் தலம், குருந்தவனம், சதுர்வேதபுரம், ஆளுடையார் கோயில் எனப் பல சிறப்புப் பெயர்களுடன் திகழும் ஆவுடையார் கோயிலில் ஈசன் அருவம், அருவுருவம், உருவம் என மூன்று வடிவங்களில் நமக்கு அருள்புரிகிறார்.
சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இத்திருத்தலத்தில் சிவபெருமான் ஆத்மநாதர் என்று அழைக்கப்படுகிறார். ஆத்மநாதர் சன்னதியில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே உள்ளது. லிங்கத்திருமேனி இல்லை. அங்கே ஒரு குவளை சாத்தப்படுகிறது. குவளை உடலாகவும் அதனுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது. அருவமாக இருந்து ஆத்மாக்களைக் காத்தருள்வதால் இவருக்கு ஆத்மநாதர் என்ற பெயர் ஏற்பட்டது.
அருவமாக இறைவன் இருப்பதால், வழக்கமாக எல்லாக் கோயில்களிலும் இருப்பதுபோல் நந்தி, கொடிமரம், பலிபீடம் எதுவும் இங்கே இல்லை. இறைவன் அருவமாக இருப்பதால் அம்பிகையும் உருவமற்று அருவமாகவே அருள்புரிகிறார்.
அன்னை யோகாம்பிகை சந்நிதியில் யோக பீடமும் அதன் மேல் அம்பிகையின் பொற்பாதங்களும் உள்ளன. அம்பிகையைத் தரிசிக்க வாயில் கதவுகள் இல்லை. கருங்கல்லால் ஆன பலகணி (ஜன்னல்) உள்ளது. அதன் வழியாகவே அன்னையைத் தரிசிக்கவேண்டும்.
இக்கோயிலின் ஸ்தல விருக்ஷமாக குருந்த மரம் விளங்குகிறது. குருந்த மரமே சிவனின் வடிவமாகவும் வணங்கப்படுகிறது. அருவுருவமாக சிவன் குருந்த மரத்தில் அருள்கிறார்.
அரிமர்த்தன பாண்டிய மன்னன் தன் அமைச்சர் வாதவூரரிடம் (மாணிக்கவாசகர்) குதிரை வாங்கி வரப் பணித்தான். வாதவூரரும் குதிரை வாங்கி வர கிழக்குக் கடற்கரை பக்கம் கிளம்பினார். திருப்பெருந்துறையை அடைந்ததும் வாதவூரரின் மனதில் சிவாலயம் கட்டவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தார் ஈசன். குதிரை வாங்க வைத்திருந்த பொருளை, கோயிலைச் செப்பனிட செலவு செய்தார் வாதவூரர். இத்தலத்தில் உள்ள குருந்த மரத்தடியில் ஞானகுருவாக சிவபெருமான் வீற்றிருந்து, வாதவூரரை மாணிக்கவாசகராக ஆக்கியதால் அருவுருவமாக ஈசன் குருந்த மரத்தில் அருள்கிறார் என்று நம்பப்படுகிறது.
இக்கோயிலில் மாணிக்கவாசகரே உற்சவமூர்த்தியாக அருள்கிறார். சிவபெருமான் உருவமாக மாணிக்கவாசகர் வடிவில் அருள்கிறார்.
குதிரைகளை வாங்காமல் திரும்பிய மாணிக்கவாசகரை மன்னன் சிறையில் அடைக்க, இறைவன் நரிகளைப் பரிகளாக்கி திருவிளையாடல் புரிந்து, மாணிக்கவாசகர் பெருமையை மன்னனுக்கு உணர்த்தினார்.
இறைவன் நரிகளைப் பரிகளாக்கிய இடம் ‘நரிக்குடி’ என்று இன்றும் அழைக்கப்படுகிறது.
பாண்டிய மன்னனின் மந்திரி துண்டகன் பேராசை மிகுதியால் சிவபுரம் என்ற வளமான கிராமத்தை தனதாக்கிக் கொள்ள நினைத்தான்.
அந்த கிராமத்து நிலங்கள் தன் பூர்வீக சொத்து என்றும், கிராம மக்கள் அதை அபகரித்து வைத்திருப்பதாகவும் அரசரிடம் புகார் கொடுத்தான். அரசனும் அதை நம்பி மக்களை சிவப்புரத்திலிருந்து வெளியேறுமாறு கட்டளையிட்டான்.
கிராமத்தைச் சேர்ந்த 300 மக்களும் செய்வதறியாது ஆத்மநாதரிடம் முறையிட, இறைவன் முதியவர் வடிவில் வந்தார்.
“என்னிடம் உள்ள நிலப்பட்டயத்தைக் காட்டி உங்கள் நிலங்களை மீட்டுத் தருகிறேன். அப்படி மீட்டுத் தந்தால் முந்நூறில் ஒரு பங்கு எனக்களிக்க வேண்டும்,” என்றார்.
மக்களும் அதை ஏற்றுக்கொள்ள, மன்னனிடம் சென்று தன்னிடம் இருந்த பட்டயத்தைக் காட்டினார் முதியவர் வடிவில் இருந்த ஈசன். மன்னன் துண்டகனை அழைத்து விசாரிக்க, அவனும் போலியாகத் தயாரித்து வைத்திருந்த பட்டயத்தைக் காட்டினான். இரண்டில் எது நிஜம், எது போலி என்று தெரியாமல் குழம்பினான் மன்னன்.
“துண்டகா, ஒவ்வொரு பூமிக்கும் ஒரு தனித்தன்மை, அடையாளம் உண்டு. சிவபுரம் மண்ணின் தனித்துவம் என்ன?” என்று கேட்டான் மன்னன்.
“கோயிலின் வடகிழக்குப் பகுதி நிலம் மேடானது. எவ்வளவு அகழ்ந்தாலும் நீர் வராது,” என்றான் துண்டகன்.
“சுத்தப் பொய். நான் அங்கே நீரை வரவழைத்துக் காட்டுகிறேன்,” என்றார் முதியவர்.
உண்மையைக் கண்டறிய அனைவருடன் சிவபுரம் வந்தான் மன்னன். மேடான நிலத்தைத் தோண்டி நீரை வரவழைத்தார் சிவபெருமான். கங்கையை வரவழைத்தவருக்கு இது சாதாரண விஷயம்தானே.
துண்டகனின் நாடகத்தை உணர்ந்த மன்னன், அவனைச் சிறையில் அடைத்தான். சிவபுர மக்களுக்கு நிலம் திருப்பி வழங்கப்பட்டது.
மக்களும் இறைவனுக்கு வாக்களித்தபடி ஒரு பங்கை முதியவருக்கு வழங்க, அவர் மறைந்தார்.
சிவன் தண்ணீரை வரவழைத்துக் காட்டிய இடம், ஆவுடையார் கோயிலில் இருந்து சற்று தொலைவில் இப்போதும் இருக்கிறது. “கீழேநீர்காட்டி,” என்று இவ்விடம் அழைக்கப்படுகிறது. திருப்பெருந்துறை கோயிலின் பஞ்சாட்சர மண்டபத்தின் மேல்விதானத்தில் இந்த நிகழ்வு ஓவியமாக இருப்பதையும் காணலாம்.
இத்தலத்தில் இறைவனுக்கு ஆறு வேளையும் சுடச்சுட புழுங்கலரிசி சாதமே நிவேதனம் செய்யப்படுகிறது. அதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது.
இத்தலத்தில் சிவபெருமான் குருவாக இருந்து குழந்தைகளுக்கு கல்வி உபதேசம் செய்தார். அப்போது அவர்கள் வீட்டில் சமைத்த புழுங்கல் அரிசி சாதம், பாகற்காய், முளைக்கீரை போன்ற பதார்த்தங்களையே ஈசனும் தினமும் உண்டார். குழந்தைகளுடன் ஓடிப் பிடித்து விளையாடுவது, கண்ணாமூச்சி விளையாடுவது என குழந்தைகளை எப்போதும் உற்சாகமாக வைத்திருந்தார்.
ஒருநாள் கண்ணாமூச்சி விளையாட்டில் இறைவன் மறைந்து போனார். குழந்தைகள் மிகவும் வருந்தினர். அவர்கள் கனவில் சிவபெருமான் தோன்றி, தானே குருவாக வந்த விவரத்தைச் சொல்லி, இதுவரை தனக்களித்த உணவையே நைவேத்தியமாக இடச் சொன்னார்.
எனவே இப்போதும் ஆத்மநாதருக்கு ஆறு வேளையும் புழுங்கல் அரிசி சாதமே நிவேதனம் செய்யப்படுகிறது. ஒரு தவலையில் சாதம் வடித்து, கைப்படாமல் பாத்திரத்தோடு எடுத்துவந்து, அமுத மண்டபத்தில் உள்ள கருங்கல் மேடையில் கொட்டி நிவேதனம் செய்கிறார்கள்.
மாணிக்கவாசகர் கட்டிய இத்திருத்தலத்தில் இதுபோல் நிறைய அற்புதங்களையும், ஆச்சரியமூட்டும் சிற்பக்கலையையும் காணலாம். மாணிக்கவாசகர் கைப்பட எழுதிய ஓலைச்சுவடி, எழுத்தாணி ஆகியவை இன்னும் இங்கே உள்ளன.