

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது அமிர்தவல்லி – சுந்தரவல்லி சமேத சுப்ரமண்யர் கோவில். இது ஒரு குடைவரைக் கோவில். இங்குதான் முருகப் பெருமான் வள்ளி பிராட்டியைக் கடிமணம் புரிந்து கொண்டார். பேரழகி என்பதால் வள்ளி, ‘சுந்தரவல்லி‘யானாள். இந்த அன்னையின் பெயரை வைத்தே ஊரும் வள்ளியூர் என்றானது. கோயிலில் வள்ளியம்மைக்குத் தனி சந்நிதி அமைந்திருப்பதும் இந்தப் பெயர்க் காரணத்துக்குப் பொருத்தமாக விளங்குகிறது.
இந்தப் பகுதியில் நம்பி என்ற வேடுவர் தலைவன் கோலோச்சி வந்தான். ஒருசமயம் வேடுவப் பெண்கள் மலைமீது தினைவனத்தில் பணிபுரியச் சென்றபோது ஒரு மரத்தடியில் பெண் சிசு ஒன்று அழுதபடி கிடந்ததைக் கண்டார்கள்.
அதை எடுத்துச் சென்று தலைவனிடம் ஒப்படைத்தார்கள். தெய்வீகப் பொலிவுடன் விளங்கிய அந்தக் குழந்தைக்கு அப்போதே ‘வள்ளி‘ என்று பெயர் சூட்டி தம் குழந்தையாக ஏற்று வளர்க்க ஆரம்பித்தனர் நம்பி தம்பதியர்.
வள்ளி, வேடுவப் பெண்ணாகவே வளர்ந்தாள். சிறுமிப் பருவம் அடைந்தவுடன், சம்பிரதாயப்படி அவளை தினைப்புனத்தைக் காக்கும் பணிக்கு அனுப்பி வைத்தான் நம்பி. முற்றி, அறுவடைக்காகக் காத்திருக்கும் தினைகளைக் கொத்தித் தின்ன வரும் பறவைகளை ஆலோலம் பாடியபடி, கவண்கல் வீசி விரட்டுவாள் வள்ளி.
அப்போது வான்வழியே சென்ற நாரதர் அவளுடைய தோற்றம் கண்டு வியந்தார். இந்த சுந்தரிக்கேற்ற சுந்தரன் முருகன்தான் என்று தீர்மானித்தார். உடனே மால்மருகனிடம் சென்று தான் கண்டதை விவரித்தார், முருகனும் வள்ளியை மணம் புரிய மனம் கொண்டான். வேடனாய் உருமாறிச் சென்றான். அவளைப் பார்த்ததும் மையல் கொண்டான்.
நேரடியாகவே தன்னை மணக்க விரும்புவதாக அவன் சொன்னபோது வள்ளி அதிர்ந்துதான் போனாள். வேடுவப் பெண்ணிற்கு வேடன்தான் பொருத்தம் என்றாலும், அது எப்படி திடுதிப்பென்று முடிவெடுப்பது?
வாலிப தோற்றத்தில் வந்து தன் காதலை அவளுக்குப் புரிய வைப்பது கடினம் என்றுணர்ந்த முருகன், பிறர் இரக்கப்படும் வகையில், முதியவராக மாறினான். வள்ளியை நெருங்கினான். அந்த நெருக்கத்தைக் கண்ட வள்ளி, ‘யோகித் தோற்றத்தில் ஒரு போகியா! பொல்லாத கிழவர் இவர்’ என்று புரிந்து கொண்டாள். உடனே அவரை விட்டு விலகி ஓடினாள்.
முருகன், தன் தமையன் விநாயகரை உதவிக்கு அழைத்தான். அவரும் தம்பியின் அவாவைப் புரிந்து கொண்டு யானையாக உருக்கொண்டு வந்து வள்ளியை பயமுறுத்தினார். பயந்துபோன அவள், ஓடிப்போய் வயோதிகர் மடியில் விழுந்தாள். பளீரென்று பேரொளி தோன்றியது. வடிவேலுடன் தோன்றினான் முருகன். அக்கணமே பேருவகை கொண்டாள் வள்ளி. தான் ஏற்கெனவே மணக்க நினைத்திருந்த கந்தவேள் அல்லவோ அவன்!
இக்கோயிலுக்குள் வடபுற வாசல் வழியாகச் செல்லலாம். கருவறையில், கிழக்கிலுள்ள ‘சரவணப் பொய்கை’ தீர்த்தத்தை நோக்கி தரிசனம் தருகிறான், சுந்தரவல்லி-அமிர்தவல்லி சமேத சுப்ரமண்யன். அந்தக் பக்கத்திலும் கோவிலுக்கு ஒரு வாசல் இருக்கிறது. குகைக் கோவில் என்பதால் மூலவரை வலம் வர இயலாது. அதற்காகவே சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் கோவிலைச் சுற்றி கிரிவல ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள். குன்றின் மீது சுப்ரமண்யரின் கருவறை விமானம் வண்ண மயமாகக் காட்சியளிக்கிறது.
கோவிலினுள் ஆஜார்ய விநாயகர் தரிசனம் அருள்கிறார். யானையாக வந்து வள்ளியை பயமுறுத்தி, தம்பி முருகனிடம் அடைக்கலம் புக வைத்தவர். ஆச்சிரயம் என்றால் பலமிக்க ஒருவனைத் தஞ்சமடைதல் என்று பொருள். அதுவே ஆஜார்ய என்றாகிவிட்டது!
துவார பாலகர்களைக் கடந்து கருவறைக்குள் பார்வையை செலுத்தினால், எண்ணெய் தீபங்களின் ஒளியில் சுப்ரமண்யரை, தேவியருடன் காணலாம். மின் ஒளியின்றி இயற்கையான குகை பின்னணியில் ஐயனை தரிசிப்பது மெய்சிலிர்க்கும் பக்தி அனுபவம்தான்.
அர்த்த மண்டபத்தின் வலது பக்கத்தில் தனி சந்நிதிகளில் ஜயந்தீஸ்வரரும், சௌந்தர்யநாயகி அம்மனும் அருளாசி வழங்குகிறார்கள். கருவறை மண்டபத்து இடது பக்க வாசல் வழியாகச் சென்றால் தலப் பெயரை நிரூபிக்கும் வகையில் வள்ளியம்மை தனி சந்நதியில் பேரருள் புரிகிறாள்.
கோவிலின் பிரதான திருவிழா, தாரகாசுர வதம். முருகனின் தளபதியான வீரபாகுவை சிறைப்படுத்திய தாரகனை முருகன் இத்தலத்தில் வதம் செய்ததால் இங்கே தாரக சம்ஹாரம்தான்; சூர சம்ஹாரம் இல்லை.
வள்ளியூர் நாயகியான வள்ளியம்மையையும் அவளை ஆட்கொண்ட முருகவேளையும் தரிசித்து இன்னல், இடர் களைந்து ஒளி மிகுந்த வாழ்வு பெறுவோம்.