

திருநெல்வேலி மாவட்டம் & வட்டம் தச்சநல்லூர் (தச்சனூர்) கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஶ்ரீ தேவி, பூதேவி சமேத
ஶ்ரீ வரம் தரும் பெருமாள் திருக்கோயில்.
சுமார் 700 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இந்த வைணவ திருத்தலத்தின் கருவறையில் தேவியர் இருவருடன் அருட்காட்சியளிக்கிறார் ஸ்ரீ வரம் தரும் பெருமாள் என்னும் வித்தியாசமான திருப்பெயர்கொண்ட திருமால். இப்படி ஒரு திருநாமத்தை கொண்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
பொதுவாக பெருமாளும் சரி, சிவனும் சரி, பக்தர்களுக்கு வரம் தரும் கடவுளே. ஆனால், அதற்காக அருள் பாலிக்கும் அறச்செயலையே பெயராக கொண்டிருப்பதில்லை. ஆனால், இத்தலத்தில் வித்தியாசமாக அதையே பெயராகக் கொண்டிருக்கிறார்.
பொதுவாக ஆலய வழிபாடு இருவகையானது. மன அமைதிக்காக ஆலயத்தை வெளிப்படுவது ஒருவகை. நம் குறைகளை மற்றும் வாட்டி வதைக்கும் பிரச்னைகளை முன்னிறுத்தி தீர்க்கக்கோரி வரம் கேட்டு வழிபடுவது இரண்டாவது வகை.
இதில் நீண்ட நாள் நோய்கள் தீர்ந்து குணமாக வேண்டும்; சொந்த வீடு அமைய வேண்டும்; திருமணம் கைகூடி வர வேண்டும்; குழந்தை வரம் அருள வேண்டும் என்னும் முக்கியமான கோரிக்கைகளை வரமாக கேட்பது வழக்கம். அப்படி பக்தர்களால் கேட்கப்படும் நியாயமான வரங்களையும், முக்கியமாக திருமண தடைகளை நீக்க கோரும் வரத்தை அருளும் பெருமாளாக இவர் இருப்பதால் இவருக்கு வரம் தரும் பெருமாள் என்று பெயர் ஏற்பட்டது.
அப்படி லட்சக்கணக்கானோருக்கு இவர் வரம் அருளியதால் இவரது ஆலயம் வரம் தரும் பெருமாள் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாலயத்தில் இடம்பெற்றுள்ள கல்வெட்டு ஒன்றில் 1232 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாநகரம் மட்டுல்லாமது அதன் சுற்று வட்டார பகுதி தச்சனூர் என்றழைக்கப்பட்டதாகவும், அந்த சமயம் கட்டப்பட்ட இவ்வாலயத்திற்கு 16 ஆம் நூற்றாண்டில் சுந்தர பாண்டியன், குலசேகர பாண்டியன், திருமலை நாயக்கரும், 1734 ஆம் ஆண்டு மார்த்தாண்ட வர்மன் என்ற அரசரும், பின்னர் வல்லப மங்களத்து அரசனும் திருப்பணிகள் செய்ததாகவும் செய்திகள் இடம்பெற்றுள்ளன.
இத்திருத்தலத்தில், உற்சவர் தம்பதியரின் விக்ரகம் முன்னிருக்க,
பின்னே மூலவர் சற்றே பெரியவராக நின்ற திருக்கோலத்தில் அழகுற அருள் பாலிக்கிறார்.
பக்தர்களால் அதிகம் அறியப்படாத பல பழமையான வைணவ திருத்தலங்களில் ஒன்றான இத்தலத்தின்பெருமாளுக்கு நடைபெறும் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி நிகழ்வும், புரட்டாசி மாத கருடசேவை நிகழ்வும் முக்கியமான திருவிழாக்களாகும்.
இத்திருவிழாவில் உள்ளூர் மக்களை தவிர, அருகாமையில் உள்ள வெளியூர் மக்கள் வரை உற்சாகமாக கலந்து கொள்கிறாகள்.
கடைசியாக 1891 ஆம் வருடம் கும்பாபிஷேகம் கண்ட இத்திருத்தலம், 126-வருடங்களுக்குப்பிறகு சிறப்பாக திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு மீண்டும் கும்பாபிஷேக விழா கண்டது.
இத்திருத்தலத்தின் வரம் தரும் பெருமாள், நியாயமான வேண்டுதல் எதுவாயினும், உளமார வழிபட, நிச்சயம் அந்த வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது பக்தர்களின் தீரா நம்பிக்கையாக இருப்பதால் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபடுகின்றனர்.