கலைவாணி, வித்யா, சாரதா, கலைமகள் என பல பெயர்களால் அழைக்கப்படும் சரஸ்வதி தேவி கல்வி, ஞானம், கலைகள் ஆகியவற்றிற்கான தெய்வமாக போற்றப்படுகிறாள். சரஸ்வதி தேவிக்கு இந்தியாவில் சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே தனி கோயில்கள் உள்ளன. அவ்வகையில் தெலுங்கானா மாநிலத்தின் சித்திபேட் மாவட்டத்தில் உள்ள வர்கல் (WARGAL) கிராமத்தில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ள ஸ்ரீ வித்யா சரஸ்வதி கோயில், மாநிலத்தின் மிகவும் பிரபலமான சரஸ்வதி கோயிலாகும். சரஸ்வதி தேவியின் அழகிய தரிசனத்திற்காகவும், நல்ல அறிவு மற்றும் கல்விக்காக பிரார்த்தனை செய்வதற்கும் பெரும்பாலான மக்கள் கோயிலுக்கு வருகிறார்கள். இக்கோயில் குழந்தைகளுக்கான அக்ஷராப்யாசத்திற்கு பிரசித்தி பெற்றது.
ஜோதிடரும், வாஸ்து நிபுணருமான யாயாவரம் சந்திரசேகர சர்மா இந்த கோயிலை நிர்மாணிப்பதில் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். இக்கோயிலுக்கு 1989-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. பிறகு சத்யபாதம் சேவா சமிதி என்று அழைக்கப்பட்ட ஒரு குழுவினரால் கோயில் கட்டுவதற்கான செயல்முறை தொடங்கப்பட்டது.
1992 ஆம் ஆண்டில், ஸ்ரீ வித்யா நரசிம்ம பாரதி சுவாமி அவர்களால் ஸ்ரீ வித்யா சரஸ்வதி தேவி மற்றும் சனி பகவான் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்போது அது காஞ்சி மடத்தால் பராமரிக்கப்படுகிறது.
வர்கல் கோயில் முக்கியமாக சரஸ்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. கர்ப்பக்கிரகம் கிட்டத்தட்ட மூன்றாவது தளத்திற்கு சமமான மட்டத்தில் அமைந்துள்ளது. தேவி ஏராளமான நகைகள் மற்றும் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாகக் காட்சி தருகிறாள்.
கோயிலின் முன்புறம் சுமார் 10 அடி உயரத்தில் தேவியின் சிலை உள்ளது. இது ஒரு அற்புதமான கலைப்படைப்பாகும். ஸ்ரீ லட்சுமி கணபதி, சனீஸ்வரர், முருகன் மற்றும் சிவன் கோயில்கள் தனித்தனியாக இந்த வளாகத்தில் உள்ளன.
மேலும், இங்கு இரண்டு வைணவ கோயில்கள் உள்ளன. அவை தற்போது கிட்டத்தட்ட சிதிலமடைந்த நிலையில் உள்ளன. இந்த இரண்டு வைணவக் கோயில்களும் காகதீய ஆட்சியாளர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அருகில் ஒரு பெரிய வெற்றித் தூணும் அமைந்துள்ளது. சுமார் 30 அடி உயரம் கொண்ட இந்த கோயிலின் மீது ராமர், சீதாதேவி, லட்சுமணன் மற்றும் லட்சுமி தேவி சிலைகள் உள்ளன.
இந்த கோயில் வளாகத்தில் வேத பாடசாலை உள்ளது. அங்கு பல மாணவர்கள் வேதம் கற்கிறார்கள். வேத பாடசாலையில் குழந்தைகள் உச்சரிக்கும் வேதங்கள் நேர்மறை அதிர்வுகளைத் தருகின்றன.
பல குடும்பங்கள் முதல் முறையாக பள்ளியில் சேருவதற்கு முன்பு தங்கள் குழந்தைகளின் அக்ஷராப்யாசத்திற்காக இந்த சரஸ்வதி கோவிலுக்கு வருகிறார்கள். தினமும் கோயில் வளாகத்தில் பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது
அர்ச்சனை, ஆரத்தி, அபிஷேகம் ஆகியவை தினமும் கோயிலில் நடைபெறும் வழக்கமான சடங்குகளாகும்.
ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயிலில் வசந்த பஞ்சமி மற்றும் நவராத்திரி திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி மூல நட்சத்திர தினத்தன்று (சரஸ்வதி தேவியின் பிறந்த நட்சத்திரம்) சரஸ்வதி தேவியை வணங்குவது மிகவும் நல்ல நாளாகும். இந்த நாளில் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. நாங்களும் தேவியின் நட்சத்திரமான மூல நட்சத்திர தினத்தன்று வர்கல் சரஸ்வதியை தரிசிக்கும் பாக்கியம் பெற்றோம். பூக்குவியல் சூழ விஷேச அலங்காரத்தில் அழகுடன் ஜொலித்த தேவியைக் காணக் கண் கோடி வேணடும்.
வசந்த பஞ்சமியன்று ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் அக்ஷராப்யாசத்தில் கலந்து கொள்கின்றன. சுமார் 25-30 ஆயிரம் பக்தர்கள் வசந்த பஞ்சமியன்று கோயிலுக்கு வருகை தந்து வெகுநேரம் காத்திருந்து சரஸ்வதி தேவியின் அருளைப் பெறுகின்றனர்.
இந்த வருடம் பிப்ரவரி மாதம் ( 2/2/2025) வரும் வசந்த பஞ்சமி நாளன்று சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு தேவியின் அருளைப் பெறுவோம்.