
தென் தமிழ்நாட்டின் நாகை மாவட்டத்தில் உள்ள கோடியக்கரைக்கு பத்து கிலோமீட்டர் முன்னதாக விளங்குவது திருமறைக்காடு எனப் போற்றப்படும் வேதாரண்யம் ஆகும். நான்கு வேதங்களும் வேதாரண்யம் சென்று மணவழகர் என்ற வேதபுரீஸ்வரரை வணங்கி இருக்கின்றன. வேதங்கள் மனித உருவம் கொண்டு வழிபட்டுச் சென்றபோது அந்த ஆலயத்தின் அர்த்த மண்டப வாயிலை பூட்டிவிட்டு சென்றன.
அப்பர் பெருமானும் திருஞானசம்பந்தரும் இந்த ஆலயம் வந்தபோது பூட்டியிருந்தது. அப்பர் பெருமான் கதவு திறக்க வேண்டி பத்து பாடல்கள் பாடிய போதும் கதவு திறக்கவில்லை. பதினொன்றாம் பாடலை பாடியவுடன் கதவு திறந்து இறைவன் காட்சியளித்தார். இத்தலத்தைச் சுற்றி வேதங்கள் நான்கும் மரம் செடி கொடிகளாக சூழ்ந்து வனமாகக் காட்சி அளித்ததால் ஊருக்கு வேதவனம், மறைக்காடு, வேதாரண்யம் என பல பெயர்கள் ஏற்பட்டன.
புராண காலத்திற்கும் முந்தைய சிறப்பு வாய்ந்த இந்த தலத்திற்கு அகத்தியர், நசிகேதன் போன்ற முனிவர்களும் தசரதன் விசுவாமித்திரர் ராமபிரான் வசிஷ்டர் போன்றவர்களும் வந்து வழிபட்ட வரலாறு உள்ளது.
முசுகுந்த சக்கரவர்த்தி தான் இந்திரனிடம் பெற்ற மரகத லிங்கம் இங்கு எழுந்தருள செய்து வழிபாடு செய்தமையால் இதற்கு சப்த விடங்க தலம் என்ற பெயரும் உண்டு.
அகத்தியர் முனிவருக்கு திருமண கோலம் காட்டியதும் இந்த தலத்தில் தான் சிவபெருமானுக்கும் உமாதேவிக்கும் கயிலையில் திருமணம் நடந்தபோது அனைவரும் வடக்கே கூடிவிட்டதால் வடதிசை உயர்ந்து தென்திசை தாழ்ந்தது. பூமியை சமப்படுத்த அகத்திய முனிவரை தென்திசைக்கு செல்ல பணித்தார் சிவபெருமான். 'திருமண கோலத்தை பார்க்கும் பாக்கியம் எனக்கு இல்லையா?' என்று அகஸ்தியர் கேட்க அப்படியே மணக்கோலத்தில் தென்திசையில் உள்ள அகத்தியருக்கு காட்சி அளித்த தலம் தான் இது.
கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கத்திருமேனியின் பின்னால் திருமண கோலத்தில் உமா தேவியருடன் சுதை ரூபமாக புடைப்பு சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த திருமண வைபவ திருவிழா சித்திரை மாதம் இந்த ஆலயத்தில் நிகழ்த்திக் காட்டப்படுகிறது. அகஸ்தியமுனிவர் தங்கி தவமேற்றிய இடம் தற்போது அகஸ்தியம் பள்ளி என வழங்கப்படுகிறது.
ராவணனை அழித்ததால் ராமனுக்கு ஏற்பட்ட வீரஹத்தியை விரட்டிய வீரஹத்தி விநாயகர் சன்னதி ஆலயத்தின் மேல சன்னதியில் அமைந்துள்ளது. ராமர் ஊருக்கு சென்றதன் அடையாளமாக வேதாரண்யம் அருகில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் ராமர் பாதம் என்ற இடம் உள்ளது.
திருமறை காட்டீசர் சன்னதியில் ஏற்றப்படும் தீபம் புகழ்வாய்ந்தது. திருவிழா காலங்களிலும் புனித நாட்களிலும் எல்லா தீபங்களும் ஏற்றப்படும் போது அவை நட்சத்திர மண்டலமாகவும் ஜோதி ரூபமாகும் காட்சி அளிக்கும். அதனால் 'வேதாரண்யம் விளக்கழகு' என்ற வழக்கு சொல் உருவானது.
சிவபெருமானாகிய வேதபுரீசன் இங்கே திருமண கோலத்தில் காட்சி தந்து தங்கள் பக்தர்கள் பிரார்த்தனையை நிறைவேற்றி வைக்கிறார். வடக்கு வாயிற்தெய்வமான துர்க்கை இத்தலத்தில் தென்திசை நோக்கி நின்று அருள்பாலிக்கிறார். திருக்கோவிலிலுள்ள மணிகர்ணிகை தீர்த்தம் மிகவும் புனிதமானது. இதில் கங்கை சிந்து யமுனை நர்மதை காவேரி போன்ற புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்வதாக ஐதீகம். இதில் நீராடினால் பிரம்ம ஹத்தி போன்ற பாவங்கள் நீங்கும்.
விசுவாமித்திரர் இத்தலத்தில் வாழ்ந்து தவமியற்றியதாக கூறப்படுகிறது. இந்த தலத்தில் சரஸ்வதியின் கையில் வீணை இல்லை. இங்குள்ள நவகிரகங்கள் யாவும் மற்ற தலங்களில் உள்ளபடி வெவ்வேறு திசை நோக்கி இருப்பது போல் அல்லாமல் திருமண கோலத்தில் நிற்கும் வேதபுரீஸ்வரரை நேராக நின்று நோக்குகின்றன. இந்த தல விருட்சங்கள் வன்னியும் புன்னை மரங்களும் ஆகும்.
திருத்துறைப்பூண்டியில் இருந்து சுமார் இருபது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வேதாரண்யம் வேதபுரீஸ்வரர் கோவில். இந்த ஊருக்கு செல்ல பஸ் வசதிகள் உள்ளன.
(சிவ ஆலயங்கள் சில என்ற நூலில் இருந்து தொகுப்பு)