
நடிகர் சைஃப் அலிகான் ஜனவரி 16-ம்தேதி அதிகாலை மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் ஊடுருவிய நபர் ஒருவரால் ஆறு முறை கத்தியால் குத்தப்பட்டதில் பலத்த காயம் அடைந்தார். அவருக்கும் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் இரண்டு ஆழமான காயங்களும் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சரி செய்யப்பட்டது... தற்போது நடிகர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக கூறப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த பிறகு, நடிகை கரீனா கபூர் இன்ஸ்டாகிராமில் ஒரு அறிக்கையைப் பகிர்ந்தார். கரீனா கபூர் தனது குறிப்பில், "எங்கள் குடும்பத்திற்கு இது ஒரு நம்பமுடியாத சவாலான நாள். இந்த கடினமான நேரத்தில் நாங்கள் பயணிக்கும்போது, ஊடகங்கள் இடைவிடாத ஊகங்கள் மற்றும் கவரேஜ்களில் இருந்து விலகியிருக்க வேண்டும் என்று நான் மரியாதையுடனும் பணிவுடனும் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “எங்கள் மீது உங்களுக்கு உள்ள கவலை மற்றும் ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம். நீங்கள் எங்கள் எல்லைகளை மதிப்பளித்து, சைஃப் அலிகான் குணமடையவும், இந்த பிரச்சனைகளை சமாளிக்க எங்களுக்கு தேவையான அமைதியான சூழ்நிலையை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த நேரத்தில் நீங்கள் புரிந்துகொண்டு ஒத்துழைத்ததற்கு முன்கூட்டியே நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று கூறி கரீனா கபூர் கையெழுத்திட்டுள்ளார்.
நடந்த சம்பவம், சைஃப் அலிகான், கரீனா கபூரின் ரசிகர்கள் மற்றும் சினிமா துறை நண்பர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் கரீனா கபூர் மற்றும் கான் குடும்பத்தினருக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
அதற்கு பதிலளித்த சோனாக்ஷி சின்ஹா, “குடும்பத்திற்கு நிறைய அன்பும் வலிமையும்” என்று பதிலளித்தார். நீனா குப்தா, "கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" என்று எழுதினார். அதிதி ராவ் ஹைதாரி "பிரார்த்தனைகளை" அனுப்பினார். உங்கள் அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன் என்று பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலும் பதிவிட்டுள்ளார். கரீனாவின் பெஸ்ட்டி மலைக்கா அரோரா சிவப்பு இதய ஈமோஜியை பதிவிட்டுள்ளார். தியா மிர்சா, "அன்பு மற்றும் பிரார்த்தனைகள்" என்று பகிர்ந்து கொண்டார்.
அன்பும் பிரார்த்தனையும் என ரன்வீர் சிங் கூறியுள்ளார். பிரியங்கா சோப்ரா, "மிகுந்த அன்பை அனுப்புகிறேன்" என்று கருத்து தெரிவித்துள்ளார். "உங்கள் அனைவருக்கும் நிறைய அன்பையும் வலிமையையும் அனுப்புகிறேன்... மேலும் சைஃப் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்" என்று சோஃபி சவுத்ரி பதிவிட்டுள்ளார்.
"சைஃப் அலிகான் தாக்கப்பட்டது குறித்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவர் விரைந்து குணமடைய வேண்டும்" என நடிகர் சிரஞ்சீவி தெரிவித்தார். "சைஃப் அலிகான் தாக்கப்பட்ட செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று ஜூனியர் என்.டி.ஆர். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
திரைதுறை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் சைஃப் அலிகான் குடும்பத்திற்கு ஆறுதல்களை கூறி வருகின்றனர்.
சைஃப் அலி கான் புகழ்பெற்ற பட்டோடி குடும்பத்தில் பிறந்தவர். சைஃப் அலி கான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலி கான் பட்டோடி மற்றும் பாலிவுட் நடிகை ஷர்மிளா தாகூரின் மகன் ஆவார். 54 வயதான சைஃப் அலிகான் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தாலும் இவரது 30 ஆண்டுகால திரையுலக வாழ்க்கை, ஏற்ற தாழ்வுகள் நிறைந்தது.
அவர் 2012-ம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நடிகர் சைஃப் அலிகான், அவரது மனைவியும் சக நடிகருமான கரீனா கபூர் கான் மற்றும் அவர்களது மகன்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பாந்த்ரா வெஸ்டில் உள்ள பன்னிரெண்டு அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு மாடிகளில் வசிக்கின்றனர்.