ஓங்காரத்தின் உருவமாகிய விநாயகரும், அவரது லீலைகளும்!

Vinayagar
Vinayagar
Published on
deepam strip

ஓம் எனும் ஒலிக்கும் நாதம் ஓங்காரமெனக் கூறப்படுகிறது. அதுவே பிரணவமாகும். உலகம் முழுவதிலும் ஓம் என்கிற பிரணவ மந்திரம் (ஓம் + காரம் - ஓங்காரம்) ஒலித்துக் கொண்டு இருக்கிறது. அதனால்தான் எந்த மந்திரத்தை கூறுகையிலும், ஓம் என்று ஆரம்பமாகிறது. ஓங்காரத்தின் உருவம் விநாயகர். பிரணவ ஒலிக்கும், விநாயகருக்கும் என்றும் அழிவு கிடையாது.

விநாயகரின் உருவ அமைப்பும், தத்துவ விளக்கமும்:

விநாயகரின் இடுப்பிற்கு மேல் கழுத்து வரை தேவ உடம்பு. இடுப்பிற்கு கீழே மனிதத் தோற்றம். அனைத்து உயிர்களிலும் விநாயகர் இருக்கிறார் என்பது இதன் தத்துவமாகும். பாசமேந்திய விநாயகரின் கை படைத்தல் தொழிலையும், மோதகமேந்திய கை அருளையும், தும்பிக்கை மறைத்தலையும் குறிக்கும்.

விநாயகரின் நீளமான செவிகள் பக்தர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்யும். அவரின் மூன்று கண்களாக, சூரியன், சந்திரன் மற்றும் அக்னி உள்ளனர். அண்டங்களையெல்லாம் அடக்கி ஆள்பவர் விநாயகர் என்பதை அவரது பெருத்த வயிறு குறிக்கிறது. விநாயகரது கால்கள் பக்தர்களைக் காத்து மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

அரக்கனின் அறியாமையை நீக்கிய விநாயகரின் லீலை:

ஒரு சமயம், சிவபெருமானை நினைத்து, கடும் தவம் மேற்கொண்டான் அரக்கன் கஜமுகாசுரன். சிவபெருமானிடமிருந்து, மரணமில்லாத வரத்தைப் பெற்றான். முனிவர்கள் மற்றும் தேவர்களுக்கு தொல்லை கொடுத்து, சிறையிலிட்டு கொடுமைப் படுத்தினான். தேவர்களும், முனிவர்களும் சிவனாரை வேண்ட, தனது மகன் விநாயகரால், அரக்கன் கஜமுகாசுரனின் ஆணவம் அழிக்கப்படுமென சிவபெருமான் கூறினார்.

விநாயகர், அரக்கன் கஜமுகாசுரனுடன் போரிடச் செல்கையில், "தேவர்களே எனக்கடிமையாக இருக்கையில், இந்த யானை முகத்தோன் என்னை, என்ன செய்ய முடியுமென" ஆணவத்தோடு பேசினான் கஜமுகாசுரன். விநாயகரின் பூதப் படைகள் மற்றும் கஜமுகாசுரனின் அசுரப்படைகளும் போர் செய்கையில், அசுரப்படைகள் ஓடிப்போயினர். ஆனாலும், அரக்கன் கஜமுகாசுரனை வீழ்த்த விநாயகரால் முடியவில்லை. அச்சமயம் "விநாயகரே! கஜமுகாசுரன், சிவனாரிடம் சாகா வரம் பெற்றவன்" என்று வானத்திலிருந்து அசரீரி குரலொன்று ஒலித்தது.

சற்று நேரம் யோசனை செய்த விநாயகர், தன்னுடைய தந்தத்தை சிறிது ஒடித்தெடுத்து, சிவமந்திரத்தை உச்சரித்து கஜமுகாசுரன் மீது வீசவும், அரக்கனது அறியாமை அகன்றது. தன்னிடம் மன்னிப்பு கேட்ட கஜமுகாசுரனை எலியாக மாற்றி, தமது வாகனமாக விநாயகர் வைத்துக் கொண்ட லீலையை என்னவென்று சொல்வது..? அருமை!

திருமாலைத் தோப்புக்கரணம் போடவைத்த விநாயகரின் லீலை:

கயிலாயத்தில் அண்ணன் பால விநாயகரும், தம்பி பால முருகரும் விளையாடிக் கொண்டிருந்த சமயம், திருமால் தங்கை பார்வதி-பரமேஸ்வரன் குடும்பத்தைக் காண கயிலாயம் வந்தார். விநாயகரும், முருகரும் விளையாடுவதைக் கண்ட திருமால், தானும் அவர்களுக்கு விளையாட்டுக் காட்ட நினைத்து, தனது சுதர்சன சக்கரத்தை சுழலவிடுகையில், பால விநாயகர், சுதர்ஸன சக்கரத்தைப் பிடித்து, டக்கென தன்னுடைய வாயினுள் போட்டுக் கொண்டார்.

இதை எதிர்பார்க்காத அனைவரும் பதறிப்போனார்கள். திருமால், பார்வதி மற்றும் பரமேசுவரன் கெஞ்சியும், பால விநாயகர் வாயைத் திறக்காமல் ஆட்டம் காண்பித்தார். அப்போது திருமாலுக்கு ஒரு யோசனை உதித்தது. அதாவது, எப்படியாவது பால விநாயகரைச் சிரிக்க வைத்து விட்டால், அவரது வாய் திறக்கும். சுதர்ஸன சக்கரம் திரும்பக் கிடைக்கும் என்பதாகும்.

இதையும் படியுங்கள்:
கவிதை: ஆவணியே உன்னை அழைக்கிறோம்!
Vinayagar

திடீரென, தன்னுடைய இரண்டு கைககளால், இரு காதுகளையும் பிடித்துக்கொண்டு திருமால் உட்கார்ந்து - உட்கார்ந்து எழுந்திருக்க, அதைக் கண்ட பால விநாயகர் வாய் விட்டு பெரிதாக சிரித்தார். சுதர்ஸன சக்கரம் வெளியே விழ, திருமால் வேகமாக அதை எடுத்து வைத்துக் கொண்டார். திருமால் இவ்வாறு செய்ததே, பிற்காலத்தில் தோப்புக்கரணமாக உருவெடுத்து, அனைத்து பக்தர்களாலும் கடைப்பிடிக்கப்படுகிறது. திருமாலையே தோப்புக்கரணம் போடவைத்து ஒரு அற்புதமான லீலையை விநாயகர் நடத்தியிருக்கிறார்.

விநாயகர், விபீஷணரிடம் புரிந்த லீலை:

ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் முடிந்தது. விபீஷணருக்கு, பள்ளி கொண்ட அரங்கன் பரிசாக கிடைத்தார். விபீஷணர், அதை இலங்கைக்கு கொண்டு செல்கின்ற வழியில், விநாயகர் சிறுவனாக வந்து, அதைத்தடுத்து, குட்டும் பட்டு, பின்னர் பள்ளி கொண்ட அரங்கனை ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்தாபித்தார். கோபத்துடன் விபீஷணர், விநாயகர் தலையில் வைத்த குட்டு, இன்றும் திருச்சி உச்சிப் பிள்ளையார் தலையில் வடுவாக காட்சியளிக்கிறது.

இதையும் படியுங்கள்:
தரிசித்தோருக்கு தலைமைப் பதவி தரும் திருமலைக்கேணி முருகன்!
Vinayagar

உபரி தகவல்கள்:-

அகத்தியரின் கமண்டலத்திலிருந்து காவேரி பெருகிவர உதவியவர் விநாயகர்.

தேனமுத தேவாரப் பாடல்களை நமக்கெல்லாம் கிடைக்கச்செய்தவர் பொள்ளா விநாயகர்.

ஓம்கார பொருளே! கணேசா! என் வரிக்கேற்ப பிரணவத்தின் வடிவமாகிய ஆனை முகத்தோனை, வினைகள் தீர்க்கும் விநாயகரை, என்றென்றும் வணங்கி வழிபடுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com