கவிதை: சிந்தை நிறைந்த ஒருவராம்… சிவன் மகனார் விநாயகர்!

Murugan and Valli
Murugan and Valli
Published on
deepam strip

சின்னஞ் சிறிய பிள்ளைகள்

சேர்ந்து களிக்கும் பிள்ளைகள்

சிந்தை நிறைந்த ஒருவராம்!

சிவன் மகனார் விநாயகர்!

சக்தி சிவனார் பாதங்கள்

சரணமென்று பணிந்திடின்

திக்கு எட்டும் வெற்றிகள்

திகட்ட வந்து சேர்ந்திடும்!

ஆறு குளத்தின் கரைகளில்

அரசு ஆலின் அடியினில்

ஆறு முகனின் சோதரர்

அமர்ந்திருக்கக் காணலாம்!

எளிமை அவரின் வடிவமாம்,

எடுக்கும் கையில் வருபவர்

உலகம்மைவிரும்பும் ஒருவரை

உயர்த்திப் போற்றி வணங்குவோம்!

மண்ணில் அவரைச்செய்யலாம்,

மஞ்சள் தன்னில் பிடிக்கலாம்,

கண்ணபிரான் மருகனார்

காட்சி தந்து அருளுவார்!

கைவிடாத கணபதி!

காப்பதிலே குணநிதி!

பையப் பைய வெற்றியை

பதிய வைப்பார் உலகிலே!

அகந்தை தன்னை அகற்றுவார்

அன்பை நெஞ்சில் ஏற்றுவார்

அவரின் அரிய லீலைகள்

அருந்தமிழில் பாடுவோம்!

‘காவிரியாம் பெண்ணவள்

கர்வம் கொண்டு ஓடினாள்

மூத்த தமிழ் அகத்தியர்க்கு

மூளக் கோப மூட்டினாள்

காவிரியாள் கர்வத்தால்

மாமுனியார் அகத்தியர்

கமண்டத்துள் அவளையே

கைது செய்து அடக்கினார்.

உலக நன்மைக் காகவும்

உள்ளத் தூய்மைக் காகவும்

அழகு நதிக் காவிரிமேல்

அன்பு காட்ட இரங்கினார்!

தன்னை வணங்கித் தொடங்கிடும்

செயல்கள் வெற்றி அடைந்திட

தடைகள் நீக்கித் தன்னருள்

தந்து காக்கும் தெய்வமாம்!

முப்புரங்கள் எரித்திட

முக்கண்ணார் சிவனுமே

ஒப்பரிய தேரிலே

உக்கிரத்தோடேறினார்!

அன்னவரும் பிள்ளையாம்

ஆனைமுகனார் தன்னையே

எண்ணவில்லை என்பதால்

இடரும் வந்து சேர்ந்ததாம்!

மாலவனாம் மாமனின்

மணிச் சக்கரம் தன்னையே

வேழமுகத்து நாயகர்

விழுங்கிவிட்ட வேளையில்

சக்கரத்தை வேண்டியே

சக்ரபாணி அவருமே

தோப்புக் கரணம் போட்டதால்

திரும்பப் பெற்றார் அக்கணம்!

இதையும் படியுங்கள்:
ஒரே பீடத்தில் ஐந்து பைரவ மூர்த்திகள்! தரிசிப்பதால் என்ன பலன்?
Murugan and Valli

வேலவனார் விருப்பம்போல்

வள்ளியம்மை தன்னையே

விவாகம் செய்ய உதவிட

வேழ வடிவில் தோன்றினார்!!

தந்தை தாயே உலகென

தரணி தனக்குணர்த்திட

சிந்தை மகிழ வலம்வந்தார்

சிவன்மகனார் விநாயகர்

யாரும் போற்றும் பாரதம்

மேரு தன்னில் எழுதிட

கோடு தன்னை ஆணியாய்

கொண்டவராம் கணபதி!

வெள்ளெருக்கம் பூவையும்

விளைந்த அறுகம் புல்லையும்

உள்ளம் விரும்பி ஏற்பவர்

உலகில் எளிய விநாயகர்!

என்ன வேண்டிக் கேட்பினும்

எதனைத் தொடங்கிச் செய்யினும்

திண்ணமுடன் வெற்றியைத்

திகட்டத் திகட்டக் கொடுப்பவர்!

ஆனைமுகனார் அடிகளை

அன்பு கொண்டு போற்றுங்கள்!

வானை முட்டும் வளங்களை

வழங்கிடுவார் அனுதினம்!!

பானை வயிற்று நாதனின்

பரிவு தன்னை நாடுவோர்

தின்ன அவலும் பொரியையும்

திகட்டும் துண்டுக் கரும்பையும்

உண்ணக் கொடுத்தால் போதுமே

எண்ணம் போல வெற்றிகள்

எதிலும் வந்து சேர்ந்திடும்!

துன்பமில்லை என்றுமே..!

திண்ணம் உண்மை உண்மையே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com