
கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் ஏரியின் நடுவில் அமைந்திருக்கும் அழகான கோவில் இது. கேரளத்தில் ஏரிக்குள் அமைந்திருக்கும் இந்த கோவில் கும்பாலா என்ற இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோவிலின் மூலம் இது என்று கூறப்படுகிறது.
புராணங்களின்படி ஸ்ரீ அனந்தபத்மநாப சுவாமி முதன் முதலில் குடி கொண்ட இடம் இது என்று கூறப்படுகிறது. இந்த கோவிலின் ஏரியில் முதலை ஒன்று வசித்து வருகிறது. இந்த முதலை இக்கோவிலை காவல் காப்பதாக மக்களிடையே ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது. ஒரு முதலை இறந்தால், வியக்கத்தக்க வகையில், அந்த இடத்தை மற்றொரு முதலை எடுத்துக் கொண்டு விடுவதாகவும், அவை கோவிலில் தரும் பிரசாதத்தை மட்டுமே உணவாக எடுத்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.
கேரளாவில் உள்ள ஒரே ஏரிக் கோயிலான இது காசர்கோடு நகரத்திலிருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அனந்தபுரா என்ற சிறிய கிராமத்தில் உள்ள ஒரு ஏரியின் நடுவில் கட்டப்பட்ட கோவிலாகும். இக்கோவில் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
302 அடி உயரமுள்ள ஏரியின் நடுவில் கட்டப்பட்டுள்ளதால் இந்த கோவில் அதன் கட்டமைப்பு அம்சங்களில் தனித்துவமாக நிற்கிறது. கருவறை கட்டப்பட்டுள்ள ஏரி சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்கோவில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, பலமுறை புதுப்பிக்கப்பட்டு இன்றைய நிலையில் அழகாக அமைந்துள்ளது.
இக்கோவில் அதன் சுவரோவியங்களுக்கும் பெயர் பெற்றது. ஏரியின் வடகிழக்கு மூலையில் ஒரு சிறிய குழியுடன் கூடிய பெரிய குகை ஒன்றுள்ளது. இக்குழியில் உள்ள நீர் எப்போதும் வற்றாது காணப்படுவது அதிசயமாகும். ஏரியைச் சுற்றிலும் கோயில்களின் இடிபாடுகள் காணப்படுகின்றது. எனவே, இவை ஒரு பெரிய கோயில் வளாகத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்கான சான்றாக நிற்கின்றது.
கருவறை, நமஸ்கார மண்டபம், திட்டப்பள்ளி மற்றும் ஜலதுர்கா சன்னதிகள், குகையின் நுழைவாயில் ஆகியவை ஏரியில் அமைந்துள்ளன. நமஸ்கார மண்டபம் கிழக்குப் பாறையுடன் ஒரு நடைபாலம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இது கோவிலுக்கு செல்லக்கூடிய ஒரே பாதையாகும்.
இங்கு கருவறையில் உள்ள சிலைகள் உலோகத்தாலோ, கல்லாலோ செய்யப்படவில்லை. கடு-சர்க்கர-யோகம் எனப்படும் 70க்கும் மேற்பட்ட மருந்து பொருட்களின் அரிய கலவையால் செய்யப்பட்டதாகும். இந்த சிலைகள் 1972 ஆம் ஆண்டு பஞ்சலோக உலோகங்களால் மாற்றப்பட்டன.
அவற்றை காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நன்கொடையாக அளித்தார். ஐந்து தலைகள் கொண்ட நாகராஜாவின் மீது அனந்த பகவான் அமர்ந்திருக்கும் நிலையில் விஷ்ணு சிலை உள்ளது.
இக்கோவிலின் மண்டபத்தின் கூரையில் விஷ்ணுவின் தசாவதார கதைகளில் இருந்து எடுக்கப்பட்ட சம்பவங்களை அழகான மரவேலைப்பாடுகளில் சித்தரித்து இருக்கின்றது. துவார பாலகர்கள் மரத்தில் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளன.
எப்படி அடைவது?
அருகில் உள்ள ரயில் நிலையம் கும்பாலா ரயில் நிலையமாகும். இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் ஆலயம் உள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் மங்களூர் விமான நிலையம். கோவில் தினமும் காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 5:30 மணி முதல் 7:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.