வசந்த நவராத்திரியின் எட்டாவது நாளான இன்று (ஏப்ரல் 5) அசோகா அஷ்டமி தினமாக கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதம் அமாவாசையிலிருந்து எட்டாவது நாள் வரக்கூடிய இந்த நாளில் பெண்கள் கையில் மருதாணி இட்டுக் கொள்வதன் மூலம் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சி பெறலாம்.
அசோகா அஷ்டமி நாளில் நாம் அசோக மரத்தையும் (மருதாணி தோட்டத்தை தான் அசோக வனம் என்று சொல்கிறார்கள். மருதாணிக்கு சமஸ்கிருதத்தில் 'அசோகா' என்ற பெயர் உண்டு), சிவனையும் வழிபடுவது சிறப்பு. ஒவ்வொரு மரத்திற்கும் முக்கியத்துவம் உண்டு. அசோக மரம் நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் அமைதியும் தரும் என்று நம்பப்படுகிறது. அசோக மரம் சிவபெருமானிடம் இருந்து தோன்றியதாகவும், இந்த மரத்தை வணங்குவது சிவபெருமானின் ஆசிகளை பெற உதவும் என்றும், இந்த மரத்தின் வேர்களில் பால் ஊற்றி சந்தனம் குங்குமம் வைத்து வணங்கி வர விரும்பியது கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
அசோக அஷ்டமி கதை:
அசோக மரத்தின் முக்கியத்துவம் பற்றி நம்முடைய வேதங்களில் கூறப்பட்டுள்ளது. புராணப்படி ருத்ராட்சத்தை போலவே அசோக மரமும் சிவபெருமானின் கண்ணிலிருந்து தோன்றியதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.
மற்றொரு கூற்றுப்படி, ராமாயணத்தில் சீதை இராவணனால் சிறைபிடிக்கப்பட்டபோது அவள் ஒரு அசோக மரத்தின் கீழ் இருந்ததாகவும் அனுமன் இலங்கைக்கு சென்ற போது இந்த மரத்தின் அடியில் தான் அவளைப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. மருதாணி தோட்டத்தை தான் அசோக வனம் என்று சொல்கிறார்கள். மருதாணிக்கு சமஸ்கிருதத்தில் 'அசோகா' என்ற பெயர் உண்டு.
இராமன் சீதையை அசோகவனத்திலிருந்து மீட்டெடுத்த நாளை இந்த அசோகா அஷ்டமியாக அனுஷ்டிக்கப்படுவதாகவும் வரலாற்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
சீதாதேவிக்கு அசோகவனத்தில் துணையாக இருந்தது இந்த மருதாணி செடிதான் என்றும், சீதாதேவி அங்கிருந்து கிளம்பும் பொழுது மருதாணி செடிக்கு ஒரு வரம் தந்ததாகவும் கூறப்படுகிறது.
"யார் உன்னை கையில் இட்டுக் கொள்கிறார்களோ அந்த பெண்களுக்கு கஷ்டமே வராது என்றும், மகாலட்சுமியின் ஆசிர்வாதம் என்றும் உண்டு" என்றும் வரத்தை அருளியதாக கூறப்படுகிறது.
கருட புராணத்தில் அசோக அஷ்டமியின் முக்கியத்துவம்:
சைத்ர மாதத்தில் சுக்ல பட்சத்தில் அஷ்டமி திதியில் புனர்வசு நட்சத்திரம் இணைந்தால் இந்த நாளில் விரதம் இருப்பது நன்மை தரும். இந்த நாளில் விரதம் இருந்து அசோக மரத்தின் எட்டு மொட்டுக்களை சாப்பிட வாழ்வில் அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தில் அசோக மரம்:
இந்த மரமானது நேர்மறை ஆற்றலை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. இதனை வீட்டின் வடக்கு திசையில் நட்டு பராமரிக்க வீட்டில் செல்வ செழிப்பு பெருகும், வாஸ்து தோஷம் நீங்கும் என்றும் கூறப்படுகிறது. அசோக மரத்தை வழிபடுவதன் மூலம் திருமண வாழ்க்கை மேம்படும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். இந்த மரத்தின் கீழ் அமர்ந்தால் உடல் மற்றும் மன வலிமை பெறலாம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
அசோக அஷ்டமி விரதம்:
அசோகாஷ்டமி அன்று அதிகாலையில் குளித்து இதன் இலைகளை சிவலிங்கத்தின் மீது போடுவதும், மரத்திற்கு தண்ணீர் விடுவதும், மரத்தின் வேர்களில் பாலை விட்டு மரத்தைச் சுற்றி வருவதும் சிறப்பு. மரத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து மரத்தின் முன்பு நெய் தீபம் ஏற்றி ஆரத்தி எடுத்து 'ராமாயணத்தில்' ஒரு அத்தியாயத்தை அங்கு உட்கார்ந்துப் படிக்கவும் வேண்டும்.
விரத பலன்:
இந்நாளில் விரதம் இருந்து அசோக மரத்தை வழிபடுவதன் மூலம் வாழ்வில் அனைத்து கஷ்டங்களும் நீங்கி மகிழ்ச்சி பெறலாம். வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். பணக்கஷ்டம் நீங்கும் என்றும், குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.