

பஞ்சபூதங்களின் வழியே வெளிப்படும் பரம்பொருள் ரகசியம்:
"பரம்பொருள் என்னும் ஞானக்கண்ணாடி"...
எங்கே "பொறுமை" இருக்கிறதோ அங்கே "பெருமை" வந்து சேரும்.
அந்தப் பெருமையானது நம்மை சிறுமைப்படுத்தாமல் பொருளை ஆதாரமாகக்கொண்டு செயல்படும்.
அந்தப் பொருள் முதல் வாதமே பரம்பொருளை அறியத் தோன்றிய ஒரு வாதமாக கொள்ளப்படுகிறது.
அதாவது இந்த உலகில் 'எல்லா உயிர் உள்ளவைகள், உயிர் அற்றவைகள்' -ஆகிய இரண்டும் பொருளாகவே காணும் ஒரு தத்துவ ஞான விளக்கம்.
நாம் கண்களால் காண்கின்றோம்!
காண்பதே உணர்கின்றோம்!
உணர்வதை செயல்படுத்துகின்றோம்!
செயல்படுத்துவதை வழிபாடாக மாற்றுகிறோம்!
வழிபடுவதை "இறை சக்தியாக" கொண்டு இயங்குகிறோம்!
இருந்தாலும் நம்மால் இந்த பிரபஞ்சத்தை புரிந்துகொள்ள முழுவதுமாக முடியவில்லை. அந்த முயற்சியை ஒரு இயக்கமாக ஒரு ஞான மார்க்கமாக ஒரு தத்துவமாக கொண்டு சென்ற மகான்கள் புத்தர்களாக, இயேசுவாக கிருஷ்ணராக, அல்லாவாக மனிதர்கள் மனதில் நீக்கமாக நிறைந்து இருக்கிறார்கள்.
இவர்கள் காட்டிய வழி என்பது மனிதர்களுடைய மாண்பை போற்றி பரம்பொருளை அறியக்கூடிய ஒரு பயணம்.
இந்த தனித்துவம் எல்லா சமயங்களிலும் இருப்பதாக கொள்ளப்படுகிறது. நாம் இயங்குவதற்கு உடல் என்கிற பொருளோடு உயிர் என்கிற மெய் சாதகமாக இருக்கிறது.
அது ஞானம் பெறவேண்டுமானால் அது வெளியில் தோன்றிய, தோன்றுகின்ற காட்சிகளை, விழுமியங்களாக கொண்டு அந்த காரணிகள் மூலம் அர்த்தங்களை கண்டுபிடித்து அந்த அற்புதமான ஆனந்தத்தை அடைய நம்மிடையே ஒரு இயக்கம்வேண்டும் என்று மகான்கள் விரும்பினார்கள்.
அவைகளே கீதையாகவும், திருக்குர் ஆனாகவும் , பைபிளாகவும் தோன்றி நம்முடைய சிக்கல்களை தீர்க்க மனதை சீர்படுத்த "நான்" என்கிற சுயத்தில் இருந்து விலகி "நாம்" என்கிற பொது நலத்தை நோக்கி செல்லக்கூடிய வழியை சொல்லிக்கொண்டு இருக்கிறது.
நாம் பிறந்து வந்த கால கண்ணாடியை சற்று பயணித்து வருவோம்...
மனிதன் பிற உயிர்களை பழக்கப்படுத்துகிறான். பழக்கப்படுத்தி பயன்படுத்துகிறான்.
அவ்வாறு பயன்படுத்துவதன் மூலம் அவன் விவசாயம், வானவியல், இயல்பியல், இயக்கவியல் கற்றான்,
ஆனால் பழக்க முடியாதவற்றை அடிமைப்படுத்தினான், காட்சிப்படுத்தினான்.
அவனால் படிக்க முடியாதது மேலும் இருப்பதாக உணர்ந்தான். அந்த உணர்வே அவனை வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.
மாற்றம் ஒன்றே மாறாதது அதற்கு சிறந்த உதாரணம் "தேடல்"...
தண்ணீர்
மலைகளின் மூலமும் ,மழையின் மூலமும் வரும் உயிருக்கு ஆதாரமான நீரை நதிகளாகவும், ஆறுகளாகவும் பகுத்து குளங்களிலும் ,குட்டைகளையும் உருவாக்கி அவற்றை பாதுகாத்து ஒரு பசுமை இயக்கம் உருவாக தண்ணீர் என்கிற ஒரு பயன்பாட்டுக்காரணியை வணங்கினான்.
காற்று
விசையும் ,திசையும் அறிந்து அதன் சுழற்சி மூலம் மின் இயக்கம் கண்டு மின்சாரம் படைத்தான். அதன் வெளிப்பாடே காற்றாலை. ( windmill)
மண்
மண்ணால் ஆகி மண்ணால் அழியும் இந்த பூத உடலின் முழு முதல் ஆதாரம் மண்ணின் பெருமை காப்பது .அதுவே எல்லா உயிர் உள்ளவைகள், அற்றவைகள் எல்லாவற்றிற்கும் ஆதாரம்.
இது பொருள் முதல் வாதத்தின் அடி வேர்.
தீ...
*தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு*
திருவள்ளுவர் நமக்குச் சொன்ன "நா" அடக்கம்.
ஆனால் இதுவே தீப்பொறிபோல பரவி தீ பிழம்பாய் உருவெடுத்து மனித சமுதாயத்தில் பல பிளவுகளையும், பிரிவுகளையும் உண்டு பண்ணி நம்மை அடிமை படுத்திக் கொண்டிருக்கிறது.
அந்த தீயை தீமையிலிருந்து அகற்றி மனிதன் மாற்று சக்தியாக பயன்படுத்தி இன்று உலகளாவிய அளவில் பல பிரமிப்பு மிக்க வகையில் பல படைப்புகள் உண்டு பண்ணிவிட்டான். அது நமக்கு ஆக்க சக்தியை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அணு உலைகள் இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
இதுவும் ஒரு பொருளே
காலவெளி
இந்த பொருளைக் காணமுடியாது ஆனால் கண்டு உணரலாம்.
அவையே அனுபவங்களாக, ஆவணங்களாக, படைப்புகளாக நம்மிடைய வளம் வந்து கொண்டிருக்கிறது. அதை நம்மை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.
சிறந்த உதாரணம் விஞ்ஞான வளர்ச்சி, அதற்கு இணையான உதாரணம் ஆன்மீக கிளர்ச்சி.
இந்த வளர்ச்சியும், கிளர்ச்சியும் நம்மிடையே ஏற்படுத்துகிறது "எழுச்சி".
இன்று அந்த எழுச்சி செயற்கை நுண்ணறிவு வரை சென்று அடைய வைத்திருக்கிறது.
ஓஷோ கூறினார் நான் ஒரு வெண்மேகம்.
வள்ளலாரை ஜோதியாக காண்கிறோம்.
கிருஷ்ணரை குழந்தைகளாக காண்கிறோம்.
இயேசுவை இரக்கத்தில் காண்கிறோம்.
அல்லாவை அன்பில் காண்கிறோம்.
புத்தரை மௌனத்தில் காண்கிறோம்.
சுயத்திலிருந்து பொதுநலத்திற்கு மாறி பரம்பொருள் ரகசியம் அறிவோம்:
எல்லாம் பொருளும், பொருளற்று போகும்போது வரக்கூடிய ஞானம் என்பது நம்மிடம்தான் தோன்ற வேண்டும்.
அது நொடிக்கு நொடி,
கணத்துக்கு கணம் காண்பது; கண்டு உணர்வது;
உணர்வதை கடத்துவது; கடத்துவதில் மகிழ்வது;
மகிழ்வதை பகிர்வது;
பகிர்வதில் உன்னதம் காண்பது;
உன்னதத்தை உலகம் முழுவதும் பரப்புவது.
இந்த உலகத்தில் இருந்து நம் உள்ளத்தை அறிந்து செயல்படும்போது அது ஒரு வழிமுறையாக, பயன்பாட்டு முறையாக, ஆன்மீக முறையாக , வாழ்வியல் முறையாக மன வளர்ச்சியை மாண்பு பெறும் மார்க்கத்தை அடைய செல்லும் வழியாக மாறி அதுவே எப்போதும் ஆதாரமாய் நம்முடைய நிலை கொண்டு இருக்கும்.
அந்த நிலை கொள்வது நம்முடைய தொடர் முயற்சி.
அது சாத்தியமாகும்போது அந்தப் நொடி பொழுதில் நாமே பரம் பொருளாக நம்மையே நாம் ஏற்றுக்கொண்டு செயல்பட வைக்கக்கூடிய ஒரு அதிசயத்தை நாம் காண்போம்.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், அன்றாட வாழ்க்கையின் பிடியிலிருந்து விடுபட்டு பிரபஞ்சத்தின் ஆழமான இயக்கப் புரிதலைப் பெறலாம். சுயநலம் என்னும் குறுகிய வட்டத்தில் இருந்து விலகி, பேரானந்த நிலையை அடைந்து, உங்களுக்குள் இருக்கும் உன்னதமான ஆன்மீகச் சக்தியை உணர்ந்து செயல்படும் மாண்பை நீங்கள் அடைவீர்கள்.